கண்ணான கண்ணே- 23


குழந்தைகள் மீதான அக்கறையில் நம்மில் பலரும் ஒரே ஒரு தும்மல் போட்டால்கூட அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் எந்த உபாதையாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று முறையான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு சில உபாதைகளுக்கு உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தல்கூட நாம் கொடுக்கும் மருந்துகளுடன் சேர்ந்து வேலை செய்யும்.
குழந்தைகள் அடிக்கடி அவதிக்குள்ளாகும் சில பொதுவான உடல் நலப் பிரச்சினைகள் பற்றியும் இந்த அத்தியாயத்தில் அறிவோம்.
மலச் சிக்கல்...
தினமும் காலையில் எழுந்த சில நிமிடங்களுக்குள் மலம் கழித்தலின் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர வைக்க வேண்டும். பள்ளி வேன் வந்துவிடும் என்ற அவசரம், மலம் கழிக்க வேண்டும் என்ற அறிகுறியே ஏற்படவில்லையே என ஏதாவது சாக்குப்போக்கு செல்லி ஓடும் குழந்தைகளே அதிகம். பெற்றோர்தான், காலை எழுந்தவுடன் மலம் கழித்தல் ஆரோக்கியத்தின் அடித்தளம் என்பதை எடுத்துரைக்க வேண்டும். தினமும் காலையில் ஒரே வேளையில் அவர்கள் கழிவறையைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும். சில குழந்தைகளுக்கு முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் மலச்சிக்கல் ஏற்படலாம். வலி ஏற்படுமே என்ற அச்சத்தாலேயே அவர்கள் மலம் கழித்தலைத் தள்ளிப்போடுவார்கள். இது சிக்கலை இன்னும் அதிகமாக்கும்.
1.    மலச்சிக்கல் போக்க சில வழிகள்...
    தயிர் சாதம் அல்லது கிச்சடி. மதிய உணவு அல்லது இரவு உணவில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
    கேழ்வரகு கூழ் அல்லது தோசை.
    பகல் நேரத்தில் தண்ணீர், தேங்காய்த் தண்ணீர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை தாராளமாக அருந்தவும்.
    மதிய உணவுடன் உள்ளூர் பழம் ஒன்றை சாப்பிடலாம்.
    ஆசன வாய்ப்பகுதியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை தேய்த்துக் கொள்ளலாம். குழந்தையை தானாகவே தேய்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
    அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால் வைட்டமின் பி-12, வைட்டமின் டி சப்ளிமென்ட் கொடுக்கலாம்.
    தினமும் குழந்தைகள் 60 நிமிடங்களாவது ஓடியாடி விளையாட அனுமதியுங்கள். இரவு தூங்கச் செல்லும் நேரம் குறிப்பிட்ட ஒரே நேரமாக தினமும் அமையட்டும்.
    தூங்குவதற்கு முன்னதாக குழந்தைகளின் உள்ளங்காலில் சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய்யைத் தடவி நன்றாகத் தேய்த்துவிடுங்கள்.
    முக்கியமான விஷயம் ஒன்றைப் பின்பற்
றுங்கள். குழந்தைகள் இந்திய முறையி
லான கழிவறைகளையே பயன்படுத்த பழக்குங்கள்.
2.    வயிற்றோட்டத்துக்கான தீர்வுகள்...
மலச்சிக்கல் சில குழந்தைகளைப் படுத்தினால் வேறு சில குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றோட்டம் சென்று அயர்ச்சியைத் தரும். அதற்கு முறையான மருத்துவ ஆலோசனையுடன் வீட்டில் பின்பற்றக்கூடிய சில டிப்ஸ்களைப் பட்டியலிடுகிறேன்.
    குழந்தைக்கு உணவைத் திணிக்காதீர்கள். ஒருவேளை அவர்களுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட உணவுவேளை மட்டும் பட்டினியாக இருக்க அனுமதியுங்கள்.
    எப்போதுமே தண்ணீர் போதிய அளவு குடிக்கச் செய்யுங்கள். உடலில் உள்ள நீர்ச்சத்தில் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
    தேங்காய்த் தண்ணீர் அல்லது உள்ளூர் சர்பத் வகை ஏதேனும் ஒன்றை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது குடிக்கலாம்.
    வாழைப்பழம் சாப்பிடுவது நலம்.
    நெய்யில் வறுத்த சோளத்துடன் சீரகம் அல்லது மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
    அரிசி கஞ்சி, கிச்சடி, தயிர் சாதம். இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மதியம், இரவு உணவு என இருவேளை சாப்பிடலாம்.
    நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க வெயிலில் இருப்பதைத் தவிர்க்கலாம்.
    இறைச்சி, முட்டை, பால் ஆகியவற்றை வயிற்று உபாதை சரியாகும்வரை தவிர்க்கவும்.
3.    சளி, இருமல் தொல்லையா?
வயிற்று உபாதைகளைப் போல் குழந்தைகளை அடிக்கடி தாக்கும் நோய் சளித் தொல்லை. மூக்கு ஒழுகுதல் தொடங்கி கடுமையான இருமல் வரை குழந்தைகளை இந்த சளித் தொந்தரவு பாடாய்ப்படுத்திவிடும்.
    வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து காலையும் மாலையும் கொப்பளிக்கவும்.
    உணவுக்குப் பின் உள்ளூர் அல்லது வனத் தேன் ஒரு சிறு தேக்கரண்டி அளவு கொடுத்துவரலாம்,
    பாலில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொடுக்கலாம்.
    நெய், வெல்லம், மஞ்சள், காய்ந்த இஞ்சி ஆகியனவற்றைச் சரியளவில் சேர்த்து மிகச் சிறிய அளவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நகக்கண் அளவில் உருண்டைகள் செய்து கொடுக்கலாம்.
    இரவு உணவுக்கு சீரகமும், இஞ்சியும் சேர்த்த கிச்சடி கொடுக்கலாம்.
4.    ஃப்ளூ தாக்கம்... அச்சம் வேண்டாம்:
    முறையான மருந்து மாத்திரைகளுடன் நாள் முழுவதும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்துக்கொண்டே இருக்கவும்.
    பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மாத்திரைகளை காலை அல்லது மதிய உணவுடன் கொடுக்கவும்.
    ரவா அல்வாவை மதிய உணவில் சேர்க்கலாம். கடலை மாவு அல்லது தேங்காய் ரவை சேர்த்து லட்டு செய்து கொடுக்கலாம்.
    குழந்தைகள் அந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவு சாப்பிட விரும்புகிறார்களோ அதைக் கொடுக்கலாம்.
5.    பயணம் என்றாலே படாதபாடுதான் என்கிறீர்களா..?
சில பெற்றோர் அவர்களின் குழந்தைகளுக்குப் பயண நேரங்களில் ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் பெரும்பாலும் வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பார்கள். முதலில் உங்கள் குழந்தைகளிடம் பயணத்தினால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தால் எவ்வித வெட்கமும் வேதனையும் தேவை இல்லை என்பதைத் தெரிவியுங்கள்.
    பயணத்தின் போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டுமே என்று அச்சப்பட்டு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டாம். பயண வழியில் ஏதாவது பெட்ரோல் பம்பில் கழிவறை வசதி இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் வயிறு முட்டி சிறுநீர் கழிக்க வேண்டியதானால் நெடுஞ்சாலையில் ஏதாவது ஒரு மறைவிடத்தில் அவசரத்துக்கு சிறுநீர் கழிப்பது நிச்சயம் குற்றமாகிவிடாது.
    பயணத்தைத் தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக குழந்தையின் காது மடல் மற்றும் நாசி துவாரத்தில் ஒரு சிறு துளி தேங்காய் எண்ணெய்யை நன்றாகத் தேய்த்துவிடுங்கள். கடிகார சுழற்சி முறையில் தேய்க்கவும்.
    ஜாம் - ப்ரெட், ப்ரெட் - வெண்ணெய் போன்ற உணவுகளை பயணத்தின்போது உட்கொள்ளலாம். இவை லகுவாகவும், நார்ச்சத்து அதிகமில்லாமலும் இருக்கும்.
    பாக்கெட் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும். ஒருவேளை பயணத்தின்போது வாந்தி ஏற்படும் அறிகுறி இருந்தால் 3-ல் இருந்து 5 மடக்கு கோலா பானம் குடிக்கலாம்.
    பயணிக்கும் பாதையை நோக்கியே அமருங்கள். மிகவும் தளர்வான ஆடைகளை அணியுங்கள். குளிர் அதிகமாக இருந்தால் நெஞ்சு, கழுத்து, காதுப் பகுதியை மறைத்துக் கொள்ளவும்.
    கற்கண்டை வைத்துக் கொள்ளவும். விமானத்தில் பயணித்தால் விமானம் மேலெழும் தரையிறங்கும் வேளைகளில் அதைக் கடித்துச் சாப்பிடலாம்.
6.    சிறுநீரகப் பாதை தொற்று உபாதை...
பள்ளி செல்லும் குழந்தைகளில் பெரும்பாலா
னோருக்கு இன்றைய காலகட்டத்தில் இந்த உபாதை சற்று அதிகமாகவே ஏற்படுகிறது.
    உலர்ந்த, சுத்தமான பருத்தி உள்ளாடைகள் அணிய வேண்டும். எலாஸ்டிக் இறுகாமல் இருப்பது அவசியம்.
    பிறப்புறுப்பு பகுதிகளுக்கும் காற்று செல்லும் வகை
யில் உள்ளாடைகள் தளர்வாக இருக்க வேண்டும்.
    நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். எப்போதுமே இந்திய வகை கழிவறைகளைப் பயன்படுத்துவது நலம்.
    வீட்டில் தயார் செய்த தயிர், மோர் ஒருநாளைக்கு ஒருவேளையாவது குடித்தல் நலம்.
    காலை உணவுடன் பி.காம்ப்ளக்ஸ் சிரப் அருந்தலாம்.
    இரவு உணவை முடிக்கும்போது ஒரு தேக்கரண்டி குல்கந்துடன் முடிப்பது நலம்.
    உணவில் தேங்காயும் தேங்காய்த் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
நம் குழந்தைகளை அடிக்கடி தாக்கும் சில சிறு உபாதைகளை உணவுப் பழக்கங்களால் எப்படிச் சீராக்கலாம், எப்படித் தடுக்கலாம் என்பதற்கான ஆலோ
சனைகளைப் பார்த்தோம். அடுத்த அத்தியாயத்தில் பெண் குழந்தைகளின் மாதவிடாய் உபாதையைக் கையாள்வது எப்படியென்பதைப் பிரத்யேகமாகப் பார்ப்போம்.
(வளர்வோம்... வளர்ப்போம்)

x