மாடியில் பெருக்கப்படாமலிருந்த வேப்ப இலைச் சருகுகள் காற்றில் பறப்பதைப் பார்த்தபடி இருந்த ரேணுகா, அங்கு வந்து நின்ற பூஜாவிடம் பேசத் தொடங்கினார்.
“இந்த மாதிரி நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது பூஜா. அவன் நீங்கள்லாம் யாருன்னு கேட்டப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா? அப்படியே செத்துப்போயிடலாமான்னு தோணுச்சு. இப்பகூட அம்மாப்பான்னு கூப்பிட்டாலும், அவன் குரல்ல எந்தப் பிரியமும் இல்லாம இயந்திரம் மாதிரி பேசுறான். இந்தக் கண்றாவிய எல்லாம் பாக்குறதுக்கு…” என்ற ரேணுகாவின் தொண்டை அடைத்து அழுகை வர…. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினார்.
ரேணுகாவின் அருகில் சென்ற பூஜா அவர் முகத்தை நிமிர்த்தி, “ஆன்ட்டி… இப்ப என்ன… கௌதமுக்கு ஞாபகமில்ல. அதனால என்ன? ஒரு குழந்தை பிறக்கறப்ப நினைவுகளோடவா பிறக்குது? வளர, வளர அதுவா எல்லாம் தெரிஞ்சுகிட்டு அம்மாப்பான்னு பாசத்தக் கொட்டுதுல்ல… அதே மாதிரி கௌதமும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிஞ்சுகிட்டு, பழைய மாதிரி ஆயிடுவான். என் ஃப்ரெண்டு சுஷ்மா ஒரு கேஸ் சொன்னா. ஒரு பையன் 15 வயசுல ஆக்ஸிடென்ட்டாகி எல்லாத்தையும் மறந்துட்டானாம். அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் உணர்ந்துகிட்டு, இப்ப கல்யாணமாகி ரெண்டு குழந்தையோட, அம்மாப்பாவோட, ஹைதராபாத்ல சந்தோஷமா இருக்கானாம். அந்த மாதிரி கௌதமும் ஆயிடுவான். டோன்ட் ஒர்ரி ஆன்ட்டி” என்றாள்.
மறுநாள் மாலை. கௌதமின் வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு கௌதமை உட்கார வைத்த பூஜா, “கௌதம்….. உன்னைப் பத்தி சில விஷயங்கள் சொல்றேன். உனக்கு இப்ப 22 வயசாகுது. ஒரு ஆக்ஸிடென்ட்ல தலைல அடிபட்டு பழைய நினைவுகள எல்லாம் மறந்துட்ட. அதனால ஒரு பிரச்சினையுமில்ல” என்று கம்ப்யூட்டரில் போட்டோ காலரியில் ஒரு போட்டோவைக் க்ளிக் செய்ய… அதில் வந்த குழந்தையைக் காண்பித்து, “நீ சென்னைலதான் இஸபெல்லா ஹாஸ்பிட்டல்ல பொறந்த. இது உன்னோட ஒரு வயசுல எடுத்த போட்டோ” என்றாள்.
பிறகு அடுத்தடுத்த போட்டோக்களைக் க்ளிக் செய்துகொண்டே, “நீ செட்டிநாடு ஸ்கூல்ல படிச்சப்ப எடுத்த போட்டோ. இது சின்ன வயசுல நீ உங்கம்மாப்பாவோட ஊட்டி போனப்ப எடுத்தது. இது ஏற்காடு போனப்ப எடுத்தது… இது மும்பைல இருக்கிற உங்க மாமா கல்யாணத்தப்ப எடுத்தது. இது நீ அல்போன்ஸா கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடினப்ப எடுத்தது…இது உன் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கார்த்திக், ஆனந்த், முகில். இது நீ இன்ஜினீயரிங் படிச்சப்ப எடுத்தது… இதுதான் அருண். உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்…” என்று அருணுடன் அவன் பல்வேறு இடங்களில், சிரித்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு… என்று விதம்விதமாக எடுக்கப்பட்டிருந்த போட்டோக்களைக் காட்டினாள்.
“இவன்கூட இவ்ளோ போட்டோ எடுத்திருக்கேன். ஹாஸ்பிட்டல்லகூட பார்த்தேன். ரொம்பப் பழக்கமா?”
“ரொம்ப ரொம்பப் பழக்கம்” என்ற பூஜா அடுத்த போட்டோவைக் க்ளிக் செய்து, “இவங்கள்லாம் உன் கூட கோத்தகிரில ட்ரெய்னிங்ல இருந்தவங்க…” என்று காண்பித்த போட்டோவில் ஊட்டி ஏரியில் கௌதம், அருண், மஹிமா, நந்தினி ஆகியோர் படகில் செல்லும் காட்சி. போட்டோவிலிருந்த நந்தினியைக் காண்பித்து கௌதம், “இவங்க ஹாஸ்பிட்டல்ல ரொம்ப அழுதாங்க. ஆனா…அழறப்பகூட அழகா இருந்தாங்க” என்று கூற…சட்டென்று முகம் மாறிய பூஜா, அந்த போட்டோவைக் க்ளோஸ் செய்தாள்.
அப்போது மூர்த்தி, “போதும் பூஜா. ஒரே நாள்ல எல்லாத்தையும் போட்டுத் திணிக்கக் கூடாது” என்று கூற… “ஆமாம்ப்பா” என்ற கௌதம் எழுந்து தனது மாடியறையை நோக்கி நடந்தான். மாடிப் படியேறும் கௌதமைப் பார்த்தபடி ரேணுகா, “இன்னைக்கி மதியானம் அவனுக்குப் பிடிச்ச எறால் ஃப்ரை செஞ்சு தந்தேன். முன்ன மாதிரியே ருசிச்சு, நிறைய சாப்பிட்டான்” என்றார்.
“அவனுக்கு நினைவுகள்தான் இல்லையே தவிர, அடிப்படையான அவனோட ரசனை, உணர்வெல்லாம் அப்படியேதான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார் மூர்த்தி.
“அஃப்கோர்ஸ்…” என்ற பூஜா, “ஓகே ஆன்ட்டி…நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.
“புது ஹாஸ்பிட்டல்லாம் எப்படியிருக்கு?” என்றார்
ரேணுகா. பூஜா ஹவுஸ் சர்ஜன் முடித்து, முழு மருத்துவ
ராகி, சமீபத்தில்தான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்.
“கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இருபத்தஞ்
சாயிரம் சம்பளத்துக்கு, எம்பதாயிரம் வேலை வாங்கு
றாங்க” என்றபடி வாசலை நோக்கி நடந்தாள்.
“தனியா ப்ராக்டிஸ் ஆரம்பிக்கலையா?”
“இப்போதைக்கி ஐடியா இல்ல. ஃப்ரீ அவர்ல ஓல்ட் ஏஜ் ஹோம், அனாதை இல்லம்லாம் போய் சர்வீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். பை…” என்று கூறிவிட்டு நடந்த பூஜாவை ரேணுகாவும் மூர்த்தியும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மறுநாள் மாலை. லைட்ஹவுஸ் கடற்கரையில், காமராஜர் சிலைக்குப் பின்னால் காரை நிறுத்தினாள் பூஜா. காரிலிருந்து இறங்கிய கௌதம் சிறு குழந்தைபோல் சுற்றிலும் ஆசையுடன் பார்த்தான். “தண்ணிக்குப் போலாமா?” என்றாள் பூஜா. “ம்…” என்ற கௌதம் மணலை நோக்கி நடந்தான். மணலில் ஏறியதும், பூஜாவுக்கு கௌதமின் கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. பிடித்தாள். திரும்பி அவளைப் பார்த்த கௌதம், “எங்கயாச்சும் காணாமப் போயிடுவன்னு பயமா இருக்கா?” என்றான்.
“அதெல்லாம் இல்லையே…”
“அம்மாகூட, உன்னை விட்டுட்டு, தனியா எங்கயும் போகக் கூடாதுன்னு சொன்னாங்க. வீட்டு அட்ரஸ், போன் நம்பர்ல்லாம் எழுதி பாக்கெட்ல வச்சிருக்காங்க” என்றான். பூஜா, “சும்மா ஒரு ஸேஃப்ட்டிக்கு” என்றபடி அவன் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்று வார நாள் என்பதால், குடும்பத்தினர் யாரும் கண்ணில் படவில்லை. படகுக்கருகில், வலை மறைவில், திறந்தவெளியில்…… என்று காதலர்கள் நெருக்கமான கோலத்தில் ஒரு வார்த்தைகூட பேசாமல், ஸ்பரிசங்கள் மூலமாகவே காதலித்துக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த கௌதம், ”இவங்கள்லாம் என்ன பண்ணிட்டிருக்
காங்க?” என்றான்.
“லவ்வர்ஸ்… காதலர்கள்…” என்றாள் பூஜா காற்றில் பறந்த தலைமுடியைச் சரிசெய்தபடி.
“அப்படின்னா?”
“லவ்வர்ஸ்னா… கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு விரும்புறவங்க.”
“கல்யாணம்னா?” என்று கௌதம் கேட்டவுடன் சில வினாடிகள் யோசித்த பூஜா, “அப்புறம் சொல்றன்” என்றாள். அப்போது ஒரு காதலி குனிந்து, மடியில் படுத்திருந்த காதலனின் உதட்டில் வைத்த தனது உதட்டை எடுக்காமல், மிகவும் ஆழமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த கௌதம், “என்ன பண்றாங்க இவங்க?” என்று குனிந்து பார்த்தான், “ஏய்…” என்று வேகமாக அவன் கையைப் பிடித்து இழுத்த பூஜா அவனை வேறு திசையில் இழுத்துச் சென்றாள்.
கடல் தண்ணீரில் காலை வைத்த வுடன், கௌதமுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சிறு குழந்தைபோல் குதூகலமாகப் பூஜாவின் கையைப்
பிடித்துக்கொண்டு நீரில் விளையாடினான். ஒரு மணி நேரம் சிரிப்பும் சத்தமுமாக விளையாடிவிட்டு கரையேறினர். பூஜாவின் டீசர்ட் முற்றிலும் நனைந்திருந்தது. அவளுடைய மார்புகள், ஆடையோடு ஒட்டிக்கொண்டு துல்லியமான வடிவத்தைக் காட்ட… கௌதம் முகத்தில் எவ்வித உணர்வுமின்றி அதை உற்றுப் பார்த்தான். பூஜா வெட்கத்துடன் கைகளால் மூடிக்கொண்டாள். ஆனாலும், உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.
கோயம்புத்தூரில், ஒரு வாரத்திற்குப் பிறகு நந்தினியை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.
ஆம்புலன்ஸினுள் நந்தினி படுத்திருந்தாள். அருகே அருண் நின்றுகொண்டிருந்தான். நந்தினியின் முதுகெலும்பில் அதிக அசைவு ஏற்படாமல் தஞ்சாவூர் செல்ல வேண்டியிருந்ததால், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆம்புலன்ஸுக்கு வெளியே நந்தினியின் அப்பா வார்டு பாய்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தார். நந்தினியின் அம்மா நர்ஸிடம் விடைபெற்றுக்கொண்டிருந்தார். வெளியே நிற்கும் தனது பெற்றோரைப் பார்த்தபடி, “எப்ப ஜாயின் பண்ற அருண்?” என்றாள் நந்தினி.
“நாளைக்கே சென்னைல ஜாயின் பண்றேன்.”
“ஜாயின் பண்ணிட்டு கௌதம போய்ப் பாரு. சந்தர்ப்பம் பார்த்து எங்க மேட்டர சொல்லிடு.”
“அவசரப்படாத நந்தினி. அவனுக்கு முதல்ல காதல்ன்னா என்னான்னு தெரியுமான்னே தெரியல.”
“இல்ல அருண்… எனக்கு பயமா இருக்கு. அந்த பூஜா, அன்னைக்கி கௌதம பார்த்தவுடனே அழுத அழுகைல, கொஞ்சம் காதலும் கலந்திருந்த மாதிரி தெரியுது.”
“சீ… உளறாத… அவ கௌதமோட ஃபேமிலி ஃப்ரெண்ட்.. அப்பப்ப போன்ல கௌதம்கூட பேசுவா.”
“எனக்கும் தெரியும் அருண். ஆனா, அந்த அழுகைல ஒரு தனிப் பிரியம் கலந் துருந்துச்சு. அது உனக்குப் புரியாது… எனக்குத் தெரியும்… எனக்குத் தெரியும். எனக்கு பயமா இருக்கு அருண்…” என்றவள் அப்படியே அவன் மீது சாய்ந்து அழ… அருண், “ஏய்… அதெல்
லாம் ஒண்ணுமிருக்காது. நீ அனாவசியமா கற்பனை பண்ணிக்கிட்டு பயப்படுற… கவலைப்படாத, நான் பாத்துக்குறேன். உங்கம்மாப்பா வர்றாங்க. கண்ணத் துடைச்சிக்கோ” என்று கூற…
நந்தினி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் கிளம்ப… மெல்ல நகர்ந்த ஆம்புலன்
ஸைக் கவலையுடன் பார்த்தபடி நின்றான் அருண்.
(தொடரும்)