“இன்னா மாஸ்டர் நீ... காபில டிகாசன் ஓவராப் போட்டியே ?”
ஆணும் – பெண்ணுமற்ற அந்த
நடுக்குரலைத் திடுக்கிட்டுக் கவனித்த எனக்கு அப்போது 12 வயது போல இருக்கும்.
“யாங்…உன்ட்டதான் பால் வெச்சிருப்பியே…கொஞ்சம் பீய்ச்சிக்கோடி. லெவலாய்க்கும்...”
“ச்சீ…மூஞ்சப் பாரு...” சர்க்கரை பாத்திரத்திலிருந்து ஸ்பூனை எடுத்து நக்கலாக சிரித்துக்கொண்டிருந்த கோபால் நாயரின் மேல் எறிந்தோடிப் போனாள் கொல்லாபுரி.
கொல்லாபுரி !
திருவல்லிக்கேணி கண்ட முதல் திருநங்கை.
பாண்டிச்சேரியிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். கொஞ்சம் ஓவராக பவுடர் பூசி கண்மை வைத்துத் துள்ளித் துள்ளிப் போகும் கொல்லாபுரி... நல்ல உயரம். மாநிறம்.
நீளமான மூக்கு. தோள் வரை விரித்த கூந்தல். பித்தளைக் கொலுசு. எந்நேரமும் எதையோ மென்றுகொண்டோ அல்லது சிரித்தபடியோ உற்சாகமாகவே இருப்பாள்.
கொல்லாபுரி, பகல் நேரத்தில் மட்டும்தான் தென்படுவாள். மாலை ஆறுமணிக்கு மேல் பிஸியாகிவிடுவாள். ஸ்டார் மற்றும் பாரகன் தியேட்டர்களில் ஓயாமல் படம் பார்க்கிறாள்
என்று குசுகுசுவெனப் பேசிக் கொள்வார்கள்.
கொல்லாபுரி ஒரு மோசமான செக்ஸ் சிம்பலாகவே என்னைப் போன்ற சிறுவர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தாள். கொல்லாபுரி இருக்கும் இடத்தில், நிற்கவே கூடாது என்று பெரியவர்கள் போதனை செய்து வைத்திருந்தார்கள்.
சில சமயங்களில் ஸ்கூல் விட்டு வரும்போது கொல்லாபுரி எதிரே வர நேரிட்டுவிடும் . மிரள மிரள அவளையே பார்த்தபடி வரும் எங்களை நோக்கி “க…க...க...க...” வென சிரித்தபடியே கையை நீட்டிக்கொண்டே நகர்ந்து வருவாள்.
தப்பித்து ஓடும் எங்களைத் திரும்பிப் பார்த்துக் கைக்குட்டையை வீசிக்கொண்டே நாக்கை ஆட்டிக் காட்டுவாள்.
தங்க இடமில்லாமல் போலீஸ் குடியிருப்பை ஒட்டிய பிளாட்பாரத்தில் கொஞ்சநாள் படுத்துறங்கிய கொல்லாபுரிக்கு நடுநிசித் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டேபோக திடீரென்று ஒருநாள் காணாமல் போனாள்.
பொதிகாசலம் அண்ணாச்சி சோடா வண்டிக்காரனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
“என்ன லே, இந்த இடுப்பாட்டிக் கொல்லாபுரிய ஆளக் காணோம்..?”
“அதுவா, பத்து நாளைக்கு முன்ன பீச் ரோட்டுல பாத்ததா எரளி சொன்னான்...”
“போன வாரம் பர்மா பஜார்ல பாத்ததா காண்டுராக்டரு சொல்லுதாகளே...”
“பாத்தீங்களா, தெரிஞ்சுக்கிட்டே கேக்கறீங்களே அண்ணாச்சி...”
“அதில்லப்பா...கப்பல்ல போகப் போறதா சொன்னிச்சாம் கேட்டியா..?”
“கப்பல்லயா... போயிடுச்சா..?”
“யாரு கண்டா, சவம் போயிருக்கும்...”
அதன்பின் கொல்லாபுரியைக் காணவேயில்லை.
மூன்று தீபாவளி கடந்து போனது.
இடையே ஒரு புயலும் இடைவிடாமல் பெய்த பத்து நாள் மழையும் திருவல்லிக்கேணியை புரட்டிப் போட்டுவிட நாளடைவில் கொல்லாபுரியை மறந்தே போனோம்.
மாத்ஸ் சப்ஜெக்ட்டில் நான் படு வீக் என்பதால் சேப்பாக்கில் ட்யூஷன் போய்க் கொண்டிருந்தேன். சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்டுக்கு எதிரேதான் ட்யூஷன் க்ளாஸ்.
கட்ட ஆரம்பித்ததிலிருந்தே அது எங்களுக்கு நல்ல பரீட்சயம் என்பதால் ட்யூஷன் கட் அடித்து விட்டு கிரவுண்டின் சந்து பொந்துகளில் புகுந்து கிரிக்கெட் பார்க்கச் சென்று விடுவோம்.
அப்படி ஓர் சமயம் சென்றபோது... எங்கள் கண்களையே நம்பமுடியாத அளவுக்கு ஓர் காட்சி.
கிரவுண்டின் பிரம்மாண்டமான பச்சைப் பசேல் வசீகரத்தையும் தாண்டி எல்லோரையும் ஈர்த்தபடி ‘டி ஸ்டாண்டில்’ ஜொலித்துக் கொண்டிருந்தாள் கொல்லாபுரி.
வனப்பே உருவான வாளிப்பான புது கொல்லாபுரி!
பழைய ஓவர் மேக்கப் இல்லை. புதுசாக லிப்ஸ்டிக் சேர்ந்திருந்தது. கண்களில் மை தேவைப்படாத அளவுக்கு, பெண்மை ஏறிப் போயிருந்தது.
சிங்கப்பூர் லுங்கி அணிந்திருந்தாள். கைகளில் வளையல்களுக்குப் பதிலாக ஏதேதோ கலர் கலரான மெட்டல் ரிங்குகள் அணிந்திருந்தாள். அவ்வப்போது ரேபான் கண்ணாடி அணிந்து காட்டிக் கொண்டிருந்தாள்.
தோலின் பளபளப்பு ஏகத்துக்கும் கூடியிருந்தது. போதாததுக்கு, இரண்டு வெள்ளைக்காரர்கள் வந்து அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு கிரிக்கெட் பார்க்க ஆரம்பிக்க... அப்படியே உறைந்து போனோம்.
கொல்லாபுரியை ஏரியாவில் தீவிரமாக சைட் அடிக்க ஆரம்பித்தார்கள்.
“அடப்போங்கடா, கப்பலேறிப் போய் உலகத் தையே பாத்துட்டேன். நீங்கள்ளாம் எனக்கு ஜூஜுபி...” என்பது போல, இடுப்பை இன்னமும் அதிகமாக ஒடித்தபடி திருவல்லிக்கேணியை அளந்துகொண்டிருந்தாள் கொல்லாபுரி .
அவ்வப்போது காரில் வந்து வாசனையாக இறங்குவதும், அவசரமாக ஆட்டோவில் ஏறி பறப்பதுமாக ஏரியாவின் காஸ்ட்லி ஃபிகரானாள்.
கொல்லாபுரியிடம் நகையும் பணமும் விளையாடியது. பெரிய பெரிய தொடர்புகள் சேர்ந்துவிட லோக்கல் போலீஸை எல்லாம் விசிலடித்து சீண்டிக் கொண்டிருந்தாள்.
இப்படி, நாடோடியாக சுற்றிக் கொண்டிருந்த உல்லாச கொல்லாபுரி திடீரென திருவல்லிக்கேணி கூவம் ஆற்றுக் கரையிலிருந்த ‘நீலம் பாஷா தர்கா’ குடிசைப் பகுதியில் பர்மனென்ட்டாகத் தங்க ஆரம்பித்தாள்.
காரணம், ஆட்டோ ட்ரைவர் தாஸுடன் அவளுக்கு உண்டாகிவிட்ட காதல்.
தாஸ் !
திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ் பகுதியில் பேர்போன முரடன்.
சராசரி உயரமும் உருண்டையான முகமும் சிவப்பேறிய பெரிய கண்களும் வேகமான நடையும் கொண்ட தாஸிடம் போலீஸ் கூட கொஞ்சம் நைச்சியமாகத்தான் பேசிச் செல்லும்.
எப்போதாவது குடிப்பான். அடிக்கடி சார்மினார் பிடிப்பான். கை நிறைய பட்டர் பிஸ்கட் வாங்கி வைத்துக்கொண்டு தெரு நாய்களுக்குப் போடுவான்.
ரவுடிகள் சகவாசம் கிடையாது என்றாலும் அவனைப் பற்றி தெரியாதவர்கள் யாராவது அவனை சீண்டிவிட்டால் தாஸின் வேறு கலரைப் பார்க்கலாம்.
என்.கே. டி கலா மண்டபத்துக்கு எதிரே இருக்கும் ஆலமரத்தடியில் இழுத்துப்போட்டு நையப் புடைப்பான். அது என்ன சென்டிமென்ட் எழவோ வெளி ஏரியாவில் சண்டை வந்தாலும் கூட ஆட்களை தூக்கிவந்து அந்த ஆலமரத்தடியில் வைத்துத்தான் அடிப்பான்.
தாஸுக்கு அப்பா இல்லை. அம்மா இந்திரா காந்திக்கு பூ வியாபாரமும் வட்டி வியாபாரமும் இருந்தது. எந்த நேரமும் ஊர் சண்டை இழுத்துக் காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டிருக்கும் தாயை தாஸ் வெறுத்தான்.
வீட்டுக்குப் போகவே தயங்குவான். ஆட்டோ சீட்டை இழுத்துப் போட்டு ப்ளாட்பாரத்தில்தான் தூங்குவான். யாரிடமும் அதிகமாக பேச மாட்டான். நியாயமான ரேட்டுக்கு ஆட்டோ ஓட்டுவான். விரதமிருந்து சபரிமலைக்குப் போய் வருவான்.
அப்படியாப்பட்ட தாஸ்தான் கொல்லாபுரியைத் தீவிரமாகக் காதலித்தான்.
“என்னா தாஸு... பீஃப் ரைஸ்ஸா சாப்புடற போல வேல லோடு ஓவரா..?”
சக ஆட்டோ டிரைவர்கள் கிண்டலும் - கேலியும் செய்ய ஆரம்பிக்க கொஞ்சம் கூட யோசிக்காமல் நண்பர்களைக் கழற்றி விட்டான். வழக்கமான ஸ்டாண்டை விட்டுத் தள்ளி வந்து சுடுகாட்டுக்குப் போகும் ரோட்டின் முனையில் ஆட்டோவை நிறுத்த ஆரம்பித்தான்.
கொல்லாபுரியைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவனுக்கு மண்டை சூடானது. ஆனால், யாரிடமும் சண்டைக்குப் போகக் கூடாது என்று சத்தியம் வாங்கி விட்டிருந்தாள் கொல்லாபுரி.
தாஸின் அம்மாவுக்கு இந்த ‘லவ்’ அதிர்ச்சியாக இருந்தது.
அவ்வப்போது வந்து தாஸுடன் சண்டை பிடிப்பாள். சப்போர்ட்டுக்கு அக்கம் பக்கத்து பெண்களையும் கூட்டி வந்து உச்சஸ்தாயியில் ‘ரோய, ரோய’ கேட்பாள்.
மிரட்டல், கெஞ்சல், லாஜிக், சென்டிமென்ட் என்று மடக்கி மடக்கிக் கேட்பாள். சமயங்களில் இரண்டு மணி நேரம் கூட அவளது வசவும் வாக்குவாதமும் நீளும்.
தாஸும் சளைக்கவே மாட்டான்.
“த பார், இது என் லைஃப். யாரோட வேணும்னா வாழ்ந்துக்கு வேன்... ஸைலன்ட்டா கெளம்பு..!”
இந்த டயலாக்கை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி, அவளை சளைக்க வைத்து விரட்டுவான்.
அந்த நேரங்களில் எல்லாம் ஆட்டோவின் பின் சீட்டில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து மருண்டு மருண்டு பார்த்தபடி இருப்பாள் கொல்லாபுரி. தன் காதலுக்காக மாமியார் தன்னை திட்டுகிறாள் என்பதே அவளுக்கு கிக்காக இருந்தது.
சலித்துப்போன தாஸின் தாய் மசானக் கொள்ளைக்கு முன் தினம் விடுவிடுவென்று கிளம்பி ஒரு முடிவோடு வந்தாள். ஆட்டோவில் நடுங்கியபடி உட்கார்ந்திருந்த கொல்லாபுரியை நெருங்கினாள்.
இரையை அணுகும் பாம்பைப் போல மெல்லக் குனிந்து பார்த்தவள் வெறிகொண்டிழுத்துக் காறித்துப்பினாள்.
“யேய்...நீ எப்புடி வாழ்ந்துர்றேன்னு நானும்தான் பாக்கறேன்...” என்றவள் சுடுகாட்டுப் பாதையின் மண்ணை வாரி இறைத்துவிட்டுப் போனாள்.
பழனிக்கு அருகே ஏதோ ஓர் கிராமத்துக்குப் போய் கல்யாணம் முடித்து வந்தார்கள்.
திரும்பி வரும்போது கழுத்தில் உருட்டையான தங்க செயின்கள், கையில் தங்கக் காப்பு, பட்டை பட்டையான மோதிரங்கள் சகிதம் வளமையாகவே வந்திறங்கினான் தாஸ்.
கூடவே, கொல்லாபுரிக்கு உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு ஏழெட்டு திருநங்கைகளும் வந்திருந்தார்கள். பல பாஷைகளில் பேசிக் கொண்டார்கள். கொல்லாபுரி திகட்டத் திகட்ட வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
இந்தக் கல்யாண கோலத்துக்கு யாரும் வீடு கொடுக்க மாட்டார்கள் என்பதால் வந்திருந்த திருநங்கைகள் எல்லோருமாக சேர்ந்து கிருஷ்ணாம் பேட்டை ரோட்டில் மாவு மெஷினுக்கு எதிரே ஓர் குடிசை வீட்டை அமைத்துக் கொடுத்தார்கள்.
மெரினா பீச்சில் மணலுக்கு நடுவே இருவரையும் அமரவைத்து சுற்றிலும் ‘டாண்டியா’ ஆடி , விருந்து கொடுத்துவிட்டுக் கிளம்பிப் போனார்கள்.
கிருஷ்ணாம்பேட்டை ரோட்டுக் குடிசையில் தாஸ் – கொல்லாபுரி தம்பதியினர் ரைட் ராயலாக குடித்தனம் ஆரம்பித்தார்கள்.
தடபுடலாக கறியும் மீனுமாக சமைத்துக் கட்டினாள் கொல்லாபுரி.
தாஸ், வெளி ஏரியாவில் பிஸியாக ஆட்டோ ஓட்டி வந்தான். வேலை விட்டால் வீடு என்று கருக்கான கணவனானான்.
கொல்லாபுரி இன்னமும் அழகாய் மாறியிருந்தாள்.
வாரமொரு நாள் ஏரியாவே பார்க்கும்படி ஒன்றாக சினிமாவுக்குப் போய் வருவார்கள். நடு ரோட்டில் நிற்கவைத்து தாஸ், கொல்லாபுரிக்கு பூ வாங்கிக் கொடுப்பான். பூக்காரியையே வைத்துவிடச் சொல்வான்.
தனக்கு பூ வைத்துவிடும் பூக்காரி கையில் தாராளமாகப் பத்து ரூபாயைத் திணித்துக் கண் கலங்க நன்றி சொல்லிப் போவாள் கொல்லாபுரி.
சத்தியம் தியேட்டரில் தாஸின் அருகாமை பந்தோபஸ்தோடு கார்னர் சீட்டில் ஒயிலாக உட்கார்ந்திருப்பாள் கொல்லாபுரி.
விளம்பரப் படங்கள் தியேட்டர் வெளிச்சத்தோடு ஓடிக்கொண்டிருக்க கொல்லாபுரியின் கண்கள் மட்டும் சுற்றியலையும். “இந்தக் கொல்லாபுரி புருஷனோட உட்கார்ந்திருக்குற அழகை யாரேனும் பாருங்களேன்...” என்று அங்குமிங்கும் ஓடி ஓடிக் கெஞ்சிக் கொண்டிருக்கும்.
ஐஸ் அவுஸ் பிர்தவுஸ் ஹோட்டல் மாடியில் ஃபேமிலி கேபினுக்குள் மட்டன் பிரியாணி முடித்து இரவு திரும்புவார்கள். தாஸ் லேசாக குடித்திருப்பான்.
தாஸ் கொல்லாபுரியின் விநோத தாம்பத்தியம் ஒரு மாதிரியாக ஏரியாவுக்கு பழகிப் போய்விட்டிருந்தது.
எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது...
(சந்திப்போம்)