கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
23 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சத்தமின்றி நடந்திருக்க வேண்டிய இந்த நிகழ்வு தேசத்துரோக வழக்கு காரணமாக பரபரப்பு, சஸ்பென்ஸ் என்று மதிமுகவினரின் இதயத்துடிப்பை தாறுமாறாக துடிக்கவைத்து அரங்கேறியிருக்கிறது. தாயகம் தொடங்கி கலிங்கப்பட்டிவரையில் செல்லுமிடமெல்லாம் வாழ்த்துச் சொல்ல குவிகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். அந்தப் பரபரப்பிற்கு நடுவே வைகோவுடன் ஒரு பேட்டி.
"எங்கே இந்த முறையும் பதவி வேண்டாம் என்று தப்பாக முடிவெடுத்துவிடுவாரோ என்று பயந்தோம். காப்பாற்றிவிட்டார் வைகோ. நாடாளுமன்றம் குலுங்கட்டும்" என்று மதிமுகவினர் சிலர் சமூக வலைதளங்களில் எழுதியிருப்பதைப் பார்த்தேன். இதற்கு உங்கள் பதில் என்ன?
தோழர்கள் அப்படிக் கவலைப்பட்டதற்கு காரணங்கள் இருக்கின்றன. 1998-ல், நான் கேபினட் அமைச்சராக வேண்டும் என்று வாஜ்
பாயும், அத்வானியும் வற்புறுத்தியபோது அதை ஏற்க மறுத்துவிட்டேன். 2004-ல், பொடா வழக்கில் சிறையில் இருந்து வந்தபோது லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு இருந்தும் போட்டியிடாமல் தவிர்த்துவிட்டேன். எங்கே இம்முறையும் பதவி வேண்டாம் என்று மறுதலித்துவிடுவேனோ என்று தொண்டர்கள் கவலைப்பட்டார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் தொடங்கி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் என்னை நாடாளுமன்றம் செல்லச் சொல்லி வற்புறுத்தினார்கள். என்னுடைய 55 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் செய்த மக்கள் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறேன். ஆனால், நான் எங்கள் கட்சியின் ஒற்றை உறுப்பினராக மாநிலங்களவைக்குச் செல்கிறேன். எனவே, நாடாளுமன்றம் குலுங்கட்டும் என்று அவர்கள் சொல்கிறபடியெல்லாம் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. இது எனக்கு மனபாரத்தைத் தருகிறது.