காதல் ஸ்கொயர் 21


நந்தினி தனது அறையில், மஹிமாவின் கையைப் பிடித்தபடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அருணும் மஹிமாவும் பரிதவித்துக்கொண்டிருந்தனர்.
சில வினாடிகள் அழுகைக்குப் பிறகு கண்களைத் துடைத்துக்கொண்ட நந்தினி, “கௌதமுக்கு நினைவு திரும்ப சான்ஸ் இருக்கா?” என்றாள்.
“ம்…” என்றான் அருண் பலவீனமான குரலில்.
“எப்ப?”
“தெரியல. எப்ப வேணும்னாலும் வரலாம். வராமலும் போகலாம்” என்றவுடன் சில வினாடிகள் அமைதியாக இருந்த நந்தினி, “எவ்வளவு பேசியிருக்கோம்…சிரிச்சிருக்கோம்…நீயில்லாம நானில்லன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் உருகியிருக்கோம். ஒரு ராத்திரி ஃபுல்லா ஒரு செகண்ட்கூட தூங்காம, விடிய விடிய வீடியோ கால்ல பேசியிருக்கோம். ரெண்டு நாள் நான் தஞ்சாவூர் போனாக்கூட தவிச்சுப் போயிடுவான். என்னைப் போயி எப்படி அருண் மறக்க முடியும்?” என்றவளின் குரல் தழுதழுத்தது.
சில வினாடிகள் அவளை வேதனையுடன் பார்த்த அருண், “அம்னீஷியாவுக்கு அம்மா அப்பா, காதலி, ஃப்ரெண்டுன்னு பாகுபாடு கிடையாது நந்தினி…” என்றான்.
“அஃப்கோர்ஸ்… இருக்கலாம். ஆனா, அவ
னுக்கு வாழ்நாள் முழுசும் நினைவு திரும்பலைன்
னாலும் எனக்குக் கவலையில்லை. நான் அவனைத்
தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்ற நந்தினி
யின் குரலில் தெரிந்த உறுதியைப் பார்த்து அருண் அசந்துவிட்டான்.
அவள் படுக்கையருகில் சென்ற அருண், “நந்தினி…அதைப் பத்தில்லாம் பேச இது சரியான சந்தர்ப்பம் கிடையாது…” என்றான்.
“தெரியும். இருந்தாலும் சொல்றேன். நாங்க எடுத்த ஃபோட்டோஸ், வீடியோஸ்லாம் இன்ஸ்டா
க்ராம்ல இருக்கு. அவன் எனக்கு அனுப்பின மெயில் எல்லாம் ஜிமெயில்ல இருக்கு. அதையெல்லாம் காமிச்சு, உண்மையச் சொல்லி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்களும் எங்க காதலுக்கு சாட்சி சொல்லணும்” என்றாள் வேகமாக.
மஹிமா, “ஏய் லூசு…இப்ப அதுக்கு என்ன அவசரம்? நீ எப்படியும் மூணு மாசம் வேலைல ஜாயின் பண்ண முடியாது. நீ உங்க வீட்டுல ரெஸ்ட்ல இருந்துட்டு, சென்னைக்கு வந்து ஜாயின் பண்ணு. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்றாள்.
“ஓகே. ஆனா நான் அப்படியே விட்டுருவேன்னு மட்டும் நினைக்காதீங்க…” என்றவளின் தோளில் கை வைத்த மஹிமா, “சரி சரி…உங்கம்மாப்பா வர்றாங்க” என்று கூற… அறை வாசலுக்குள் நுழைந்த பெற்றோரைப் பார்த்த நந்தினி தனது கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
கௌதமின் அறை. பூஜாவின் தோளில் தலை சாய்த்திருந்த ரேணுகாவின் தலைமுடியைக் கோதியபடி படுக்கையில் படுத்திருந்த கௌதமையே பார்த்துக்கொண்டிருந்தாள் பூஜா. அவள் கன்னத்து கண்ணீர் உலர்ந்துபோயிருந்தது. கௌதம் கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருந்தான். பூஜாவின் தோளிலிருந்து நிமிர்ந்த ரேணுகா, “அம்மா அப்பால்லாம் இன்னும் ஊர்லதான் இருக்காங்களா?” என்றார்.
“ஆமாம்…இன்னைக்கிதான் பால்தெளி. அது முடிச்சுட்டு நாளைக்கிதான் கிளம்புறாங்க” என்றாள் பூஜா. பூஜாவின் தாத்தா இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இறந்துபோயிருந்தார். அதற்காக அவர்கள் நாகப்பட்டினம் போயிருந்ததால், மூர்த்தி பூஜாவின் தந்தை சந்திரகுமாரிடம் தகவல் தெரிவிக்கவில்லை. நேற்று இரவுதான் சொன்னார். உடனே பூஜா கிளம்பி வந்துவிட்டாள்.
“எப்ப டிஸ்சார்ஜ் பண்றாங்க?” என்றாள் பூஜா, கௌதமைப் பார்த்துக்கொண்டே.
“வெளிக்காயம்ல்லாம் பெருசா ஒண்ணும் இல்லை. அதனால… மண்டே டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் ரேணுகா.
திங்கள்கிழமை காலை கெளதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். கெளதமின் பெற்றோர் நந்தினி, அருண், மஹிமாவிடம் விடைபெற்றுக்கொண்டனர். நந்தினி டிஸ்சார்ஜ் ஆகிச் சென்ற பிறகு, சென்னை வந்து சந்திப்பதாக அருண் கூறினான்.
கெளதமும் அவன் பெற்றோரும் பூஜாவும் காரில் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது மாலை இருட்டிவிட்டது. சென்னை நகருக்குள் கார் நுழைந்தபோது, கௌதம் ஒரு புதிய நகரத்தில் நுழைவதைப் போல் ஆச்சர்யத்துடன் கண்கள் விரியப் பார்த்தான். “இவ்ளோ பெரிய ஊரா? இவ்ளோ காரா? இந்த ஊரு பேரு என்ன சொன்னீங்கப்பா?” என்றான். இந்த மூன்று நாள் மருத்துவமனை பழக்கத்தில், கௌதம் மூர்த்தியையும் ரேணுகாவையும் ‘அப்பா…அம்மா…’ என்று அழைக்க ஆரம்பித்திருந்தான்.
“சென்னை”
“ரொம்பப் பெரிய சிட்டியா?”
“ம்…இதுதான் தமிழ்நாட்டோட கேப்பிட்டல்” என்றவுடன் “கேப்பிட்டல்” என்று முணுமுணுத்தான்.
டிராஃபிக்கில் கார் ஊர்ந்து ஊர்ந்து, எம்ஆர்ஸி நகரை அடைந்தபோது, இரவு எட்டு மணியாகிவிட்டது. அந்தத் தனி வீட்டின் வாசலில் கார் நின்றது. சிறுவயதிலிருந்து தான் ஓடி விளையாடிய வீட்டை கௌதம் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தான். வேகமாக கேட்டைத் திறந்துவிட்ட வாட்ச்மேன் கந்தசாமி, கௌதமைப் பார்த்து சிரிக்க…கௌதம் சிரிக்கவில்லை. கார் போர்ட்டிகோவில் நிற்க… கந்தசாமி வேகமாக ஓடிவந்து கார் கதவைத் திறந்துவிட்டு, “இப்ப உடம்பு பரவாயில்லையா தம்பி?” என்றார் கௌதமிடம். கௌதம் ஒன்றும் பதில் சொல்லாமல் காரிலிருந்து இறங்கினான். கந்தசாமி ரேணுகாவைப் பார்க்க…“இப்ப பரவால்ல கந்தசாமி” என்றார் ரேணுகா.
கௌதம் காரிலிருந்து இறங்கிச் சுற்றிலும் பார்த்தான். மூர்த்தியும், ரேணுகாவும், பூஜாவும் கௌதமை ஆர்வத்துடன் கவனித்தனர். வீட்டுக்கு வந்தவுடன் கௌதமுக்குப் பழைய நினைவுகள் வந்துவிடாதா என்று ஒரு நப்பாசை. கௌதம் அங்கே ஓரமாக நிறுத்தியிருந்த ட்யூக் 390 பைக்கைப் பார்த்தவுடன் கந்தசாமி, “நீங்க இன்னைக்கி வர்றீங்கன்னு பைக்கைத் தொடச்சு வச்சேன் தம்பி” என்றார். கௌதம் ஒன்றும் சொல்லாமல் மெலிதாகச் சிரித்தான். மெதுவாக அவன் பைக்கை நோக்கி நடக்க… மூர்த்தியும் ரேணுகாவும் லேசாகப் பரபரப்படைந்தனர். அவன் மிகவும் ஆசைப்பட்டு மூர்த்தியுடன் சண்டை போட்டு, நான்கு நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்து, ரெண்டேகால் லட்ச ரூபாய்க்கு வாங்கிய பைக் அது.
கௌதம் பைக் சீட்டை ஆர்வத்துடன் தடவிக்கொடுத்துவிட்டு, “அழகா இருக்குல்ல? யாரு பைக் இது?” என்று கேட்க… கந்தசாமி அதிர்ச்சியுடன் ரேணுகாவைப் பார்த்தார். “நான் அப்புறம் சொல்றேன் கந்தசாமி” என்று முணுமுணுப்பாகக் கூறிய ரேணுகா, “உன்னுதுதான்” என்றார் கௌதமிடம்.
“இதெல்லாம் எனக்கு ஓட்டத் தெரியுமா? இட்ஸ் இன்ட்ரெஸ்ட்டிங்” என்ற கௌதம் வீட்டு வாசலை நோக்கி நடந்தான். வீட்டிற்குள் நுழைந்த கௌதம் அந்தப் பெரிய ஹாலையும், ஹாலின் நடுவில் மேலிருந்து தொங்கிய சான்ட்லியரையும், மாடியேறிச் செல்லும் படிக்கட்டையும் பார்த்துவிட்டு, “நம்ம பெரிய பணக்காரங்களா?” என்றான்.
“கொஞ்சம் பணக்காரங்க.”
ஹாலிலிருந்த டிவியை கௌதம் உற்றுப் பார்க்க…உடனே ரேணுகா பரபரப்புடன் டிவியை ஆன் செய்தாள். சேனலை மாற்றிக்கொண்டே வந்தாள். ஒரு சேனலில் கௌதமுக்குப் பிடித்த நடிகர் அஜித் தோன்ற… நிறுத்தினாள். அஜித் வெள்ளை சட்டை, நரைத்த மீசை, தாடியுடன் ஒரு சிறுமியுடன் மழையில் நனைந்துகொண்டிருக்க…
“கண்ணாண கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…” என்ற பாடல் வரிகளைக் கேட்டபோது  மூர்த்தியும் ரேணுகாவும் அவனைக் கூர்ந்து கவனித்தனர்.
‘விஸ்வாசம்’ படம் ரிலீஸானபோது கௌதம், ஐநாக்ஸில் முதல் நாள், முதல் காட்சி பார்த்துவிட்டு வந்தான். டிவியில் பாடல் தொடர்ந்து ஒலித்தது.
“புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப் போல நீவ வா…”.
என்று பாடல் வரிகளும் கௌதமின் நிலையும் சேர்ந்து அந்தப் பாடல் இப்போது முற்றிலும் புதிதாக ரேணுகாவிற்குத் தோன்றியது. இப்போதாவது கௌதமுக்கு நினைவு திரும்பிவிடாதா என்பதுபோல் அனைவரும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டென்று கௌதம் டிவியில் அஜித்தைக் காண்பித்து, “நல்ல அழகா இருக்காரு. யாரு இவரு?” என்று கேட்டவுடன் அவர்களின் அத்தனை உணர்வுகளும் சட்டென்று அறுந்தன.
“உன் ரூமுக்குப் போலாம்” என்று மாடிப்படியேறிய போது  டிவியிலிருந்து, “ஆரிர ராரோ… ராரோ…ராரோ… ஆரிர ராரோ…” என்று மெலிதாக ஒலித்தது.
மாடியில் தனது அறையில் நழைந்த கௌதம் சுவரில் ஒட்டப்பட்டிருந்த விராட் கோலி, தோனி, ஆலியா பட் போஸ்டர்களை அந்நியமாகப் பார்த்தபடி நின்றான்.
ரேணுகாவும் பூஜாவும் அறைக்கதவைத் திறந்து கொண்டு மாடிக்கு வர… சிலுசிலுவென்று காற்றடித்தது. காற்றில் பறந்த நெற்றிமுடியை ஒதுக்கியபடி பூஜா, “நீங்க கவலைப்படாதீங்க ஆன்ட்டி. நான் தினம் வந்து கௌதமைப் பாக்குறேன். அவன் படிச்ச செட்டிநாடு ஸ்கூல், அண்ணா யுனிவர்சிட்டின்னு எல்லா இடத்துக்கும் அழைச்சுட்டுப் போய் காமிக்கிறேன்’ என்று கூற… ரேணுகா அவளை நன்றியுடன் பார்த்தார். பூஜா, அறைக்குள்ளிருந்த கௌதமைக் காதலுடன் 
பார்த்தாள்.
(தொடரும்)

x