பாப்லோ தி பாஸ் 34: காட்டுக்குள் 30 நாட்கள்..!


அரசியல்வாதிகள், அராஜகவாதிகள்… சாதனையாளர்கள், சதிகாரர்கள்… வெற்றியாளர்கள், வெறியர்கள்… கருணையாளர்கள், கொலைகாரர்கள்… கொள்கைவாதிகள்,  கொள்ளைக்காரர்கள்… கொடையாளர்கள், கடத்தல்காரர்கள்… என உலகை ஆட்டிப் படைத்த அத்தனை பேரையும் இலக்கியங்கள் வாயிலாகவும், திரைப்படங்கள் வாயிலாகவும் பதிவு செய்வது மனிதர் மரபு.
இந்தப் பட்டியலில் பாப்லோ எஸ்கோபாரும் விடுபடவில்லை. பாப்லோவைக் குறித்து இதுவரை பல புத்தகங்கள் வந்திருக்கலாம். எனினும், நான்கு புத்தகங்கள் உண்மைக்கு மிகவும் நெருக்கமானவை.

முதல் புத்தகம், ‘கில்லிங் பாப்லோ’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் மார்க் பவ்டென் எழுதி 2001-ல், வெளியானது.
இரண்டாவது புத்தகம், பாப்லோவின் காதலி விர்ஜீனியா எழுதிய ‘லவிங் பாப்லோ, ஹேட்டிங் எஸ்கோபார்’ எனும் புத்தகம். ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட இது 2007-ல், வெளியாகி 2018-ல், ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது. 
மூன்றாவது புத்தகம், பாப்லோவின் அண்ணன் ராபெர்ட்டோ எஸ்கோபார் எழுதியது. ‘எஸ்கோபார்: ட்ரக்ஸ், கண்ஸ், மணி, பவர்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தப் புத்தகம் 2009-ல், வந்தது.

நான்காவது புத்தகம், பாப்லோவின் மகன் எழுதியது. ‘பாப்லோ எஸ்கோபார் – மை ஃபாதர்’ எனும் அந்தப் புத்தகம் 2016-ல், வந்தது. 
இந்தப் புத்தகங்களை அடிப்படையாக வைத்துத்தான் பாப்லோ குறித்த படங் களும் எடுக்கப்பட்டன. 
விர்ஜீனியாவின் புத்தகத்தை அடிப்படையாக வைத்து, ’லவின் பாப்லோ’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று 2011-ல், வெளியானது. இதில் பாப்லோவாக, ஆஸ்கர் விருது வென்ற ஜேவியர் பார்தெம் நடித்தார். விர்ஜீனியாவாக நடித்தது யார் தெரியுமா? ஜேவியரின் மனைவியும் நடிகையுமான பெனிலோப் க்ரூஸ்.

பவ்டெனின் புத்தகத்தை அடிப்படையாக வைத்து, அதே தலைப்பில் ஜோ கர்னாஹன் எனும் அமெரிக்க இயக்குநர் படம் எடுக்கப் போவதாக அறிவிப்புகள் 2007-ல், வெளியாகின. ஆனால், இன்று வரை படம் வெளிவரவில்லை.
அதன் பிறகு 2014 -ல், ’எஸ்கோபார்: பாரடைஸ் லாஸ்ட்’ எனும் படம் வெளியானது. நேரடியாக பாப்லோவின் வாழ்க்கையைச் சொல்லும் படங்களைத் தவிர, வேறொருவரைப் பற்றிய படத்தில் பாப்லோவை ஒரு கேரக்டராகக் காட்டிய ‘ப்ளோ’ (2001 – மெதஜின் கார்ட்டெலின் ஓர் உறுப்பினரான ஜார்ஜ் ஜங் என்பவரைப் பற்றிய படம்), டாம் க்ரூஸ் நடித்த ‘அமெரிக்கன் மேட்’ (2017 – பாப்லோவுக்காக வேலை செய்து பின்னர் பாப்லோவையே அமெரிக்காவிடம் ஒளிப்பட ஆவணமாகச் சிக்க வைத்த முன்னாள் சி.ஐ.ஏ. பேரி  சீல் பற்றிய படம்) ஆகியவையும் வெளிவந்துள்ளன.

இவை தவிர, நேஷனல் ஜியாகரஃபிக், எச்பிஓ போன்ற தொலைக் காட்சிகள் பாப்லோவைப் பற்றிய ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளன. பாப்லோவின் மகன் யுவான் பாப்லோவின் பார்வையில் சொல்லப்படும் ‘சின்ஸ் ஆஃப் மை ஃபாதர்’ (2009) என்ற ஆவணப்படமும் வெளியானது.

ஆனால், இவை எதுவுமே பாப்லோவின் வாழ்க்கையை, அவனை வீழ்த்த நடை பெற்ற சூழ்ச்சிகளை முழுமையாகச் சொல்லவில்லை. 2015-ல், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ மூல மாக வெளியான ‘நார்கோஸ்’ எனும் தொடர், அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது.
மொத்தம் மூன்று சீஸன்கள். ஒரு சீஸனுக்கு 10 எபிசோட்கள். ஒவ்வொரு எபிசோடும் சுமார் ஒரு மணி நேரம் என பாப்லோவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கச்சிதமாகச் சொன்னது ‘நார்கோஸ்’ தொடர்.

ஆனால், இதிலும் பல விடுபடல்கள் இருக்கின்றன. பாப்லோவின் வாழ்க்கையை அவனது குழந்தைப் பருவத்திலிருந்து காட்டாமல், அவனைநேரடியாகவே ஒரு கடத்தல்காரன் என்றே நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். இந்தத் தொடரின் இறுதி வரையில், பாப்லோவுக்கு அண்ணன் ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படவே இல்லை. இரண்டாவது சீஸனின் இறுதி எபிசோட்களில் பாப்லோ வின் காதலி விர்ஜீனியா கொல்லப்படுவது போலக் காட்டியிருப் பார்கள். ஆனால், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். 
இப்படி பல விஷயங்களைச் சொல்லியும் சொல்லாமலும், பாதி உண்மையைச் சொல்லி, பாதி கற்பனையைச் சேர்த்து என, படைப்பாளர்களுக்கான சுதந்திரத்தை இத்தொடரின் இயக்குநர்கள் க்ரிஸ் ப்ரான்காடோ, கார்லோ பெர்னார்ட் மற்றும் டவுக் மிரோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மூன்று சீஸன்கள் என்றாலும், முதல் இரண்டு சீஸன்கள் மட்டுமே பாப்லோவின் கதை சொல்லப்படுகிறது. மூன்றாவது சீஸனில், கலி கார்ட்டெலை எப்படி அமெரிக்க டிஇஏ ஏஜெண்ட் டுகள் முடக்கினார்கள் என்பது சொல்லப்படுகிறது. 
இரண்டாவது சீஸனின் இறுதியில், நிஜ டிஇஏ ஏஜெண்ட்டு களான ஸ்டீவ் மர்ஃபி மற்றும் ஜேவியர் பீனா ஆகியோர் சின்ன ரோலில் வந்துபோவார்கள்.

நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த வெற்றிகரமான தொடர்களில் இதுவும் ஒன்று. இதுவரை வேறு படங்களில் பாப்லோவாக நடித்தவர்களைக் காட்டிலும் இந்தத் தொடரின் நாயகன் வாக்னர் மவ்ராதான் அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தி, அதற்கான நியாயத்தைச் செய்திருக்கிறார். ஜேவியர் பீனாவாக, பெட்ரோ பாஸ்கலின் நடிப்பும் அசத்தல்..!

இப்படியாக இறந்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான் பாப்லோ. அவனைக் குறித்து இன்னும் பல படங்கள், புத்தகங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், பாப்லோ என்பவன் முரண்களின் போதை..!

தமிழிலும் பாப்லோ..!

இப்பேற்பட்ட கடத்தல்காரனை தமிழ் சினிமாவும் விட்டு வைக்குமா என்ன? பாப்லோவின் கடத்தல் ‘ஸ்டைல்’ குறித்து ஏற்கெனவே ‘பில்லா’, ‘அயன்’ போன்ற பல படங்கள் வந்திருந்தாலும், பாப்லோவைக் குறித்த நேரடியான ரெஃபரன்ஸ் ‘கோலமாவு கோகிலா’ (2018) படத்தில் வருகிறது.

கழுத்தில் பேண்டேஜுடன் இருக்கும் போதைப் பொருள் கடத்தல் தலைவனுக்குக் கீழ் ‘பாபி’ எனும் கேரக்டர் ஒன்று சஃபாரி சூட் அணிந்துகொண்டு நயன்தாராவை வேலை வாங்கும். அந்த ‘பாபி’யை  “என் அக்காவுக்காகப் பார்க்கிறேன் மாமா” என்று அடிக்கடி பயமுறுத்தும் மச்சான் கேரக்டரும் உண்டு.

அந்த பாபி, நயன்தாராவால் சுட்டுக் கொல்லப்படுவான். அவனைக் கொல்லச் சொல்வதே, ‘பாய்’ (ஹரீஷ் பராடி) எனும் கேரக்டராக இருக்கும். பாபி தங்கியிருக்கும் வீட்டில் ஒரு லாக்கர் இருக்கும். அந்த லாக்கரைத் திறந்து அதிலிருக்கும் துப்பாக்கியை எடுத்து பாபியை நயன்தாரா சுட வேண்டும். இதுதான் சீன்.

நயன்தாரா அந்த லாக்கரைத் திறக்கும்போது, அவருக்கு இடதுபுறத்தில் அந்த லாக்கரின் கதவைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அதில் பாப்லோவின் படம் ஒட்டப்பட்டிருக்கும். ஏன்..? படத்தில்தான் நயன்தாரா ‘கோலமாவு’ (கொக்கைனுக்கு தமிழில் உருவாகியிருக்கும் குறியீட்டு வார்த்தை) கடத்தும் கும்பலிடம் சிக்கியிருப்பாரே… அதனால்..!

(நிறைந்தது)

x