இது ஒரு ஃப்ளாஷ் பேக் கேன்ட்டீன்!


கா.சு.வேலாயுதன்

கடந்துபோன காலகட்டத்தை மீட்டெடுத்து, கண்முன்னே வைத்ததுபோல் இருக்கிறது ஈரோடு ஆர்கேவி சாலையில் உள்ள பரணி சில்க்ஸ் ஜவுளிக் கடை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது மொத்தக் கடையும். பித்தளை பாத்திரங்கள், அந்தக் காலத்து அலமாரிகள் என்று பரவசமூட்டுகின்றன பழங்காலப் பொருட்கள்.

கடைக்குள் நுழைந்து, ஆடைகள் விற்பனை செய்யப்படும் பகுதியைக்கூட கவனிக்காமல் பழைய பொருட்களைப் பார்த்து வியந்துகொண்டிருந்த என்னிடம், “நாலாவது மாடிக்குப் போங்க சார். அங்கதான் இன்னும் ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இருக்கு” என்று வழியனுப்புகிறார்கள் கடை ஊழியர்கள். ஆச்சரியம் விலகாத பார்வையுடன் நான்காவது மாடிக்குச் சென்றேன். அது வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்படும் உணவகம்.

உணவகத்தின் வாசற்படியில் நம் பள்ளிக்காலத்தில் பயன்படுத்தியது போன்ற சிலேட்டுகள் வரவேற்கின்றன. அன்றைய ஸ்பெஷல் மெனுக்கள் பற்றிய தகவல்கள் அவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து திரும்பினால் ஒரு கண்ணாடி அலமாரி. அதன் மேல் பகுதியில் குட்டியாய் ஒரு பைக். கீழே அரையடி உயரம் உள்ள ஜமீன்தார் - ஜமீன்தாரிணி பொம்மைகள். அதற்கு நேர் எதிரே இடதுபுறம் பிரிட்டீஷார் காலத்து மர சைக்கிள் ஒன்று. கூடவே டிரங்குப் பெட்டிகள். திண்டுக்கல் பூட்டு, சாவிக் கொத்துகள், அதை மாட்டப் பயன்படும் கைவினை வேலைப்பாடுடன் கூடிய ஹேங்கர் எனக் கண்ணில் படும் இடமெல்லாம் கலைப்பொருட்கள். பழம்பெரும் ஆளுமைகளின் புகைப்படங்கள்.

x