சேவையின் சிகரம்- அகர்சந்த் எனும் அற்புத மனிதர்


கரு.முத்து

திருமுதுகுன்றம் என்று போற்றப்படும் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரேயிருக்கிறது அந்த வீடு. வாசலில் ஒரு உதவியாளர். உள்ளே சுமார் பத்துப் பேர் உட்கார சோபாக்கள். பார்வையாளர் அறையில் பழைய காலத்து ‘விண்டோ ஏசி’ உருமியபடி ஓடிக்கொண்டிருக்கிறது. வீடு சற்று சாதாரணமாக இருந்தாலும், இங்கு வசிக்கும் அகர்சந்த் ஜெயின் மிக மிக அசாதாரணமான மனிதர். அறக் கொடையாளர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர், அப்பேர்பட்ட மனிதரைச் சந்திக்கத்தான் அவரது வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

உதவி கேட்டு வந்திருக்கும் பலர், பார்வையாளர் அறையில் காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் அவரது அறைக்குள்ளே செல்கிறேன். ‘இது ஜெயின் இல்லம், யாரையும் குறை கூற வேண்டாம்’ என்ற வாசகத்துக்குக் கீழ் அமர்ந்திருந்த அகர்சந்த், பார்ப்பதற்கு வங்கி குமாஸ்தா போல் அத்தனை எளிமையாக இருக்கிறார். “கொஞ்சம் காத்திருங்கள். வந்திருப்பவர்களைப் பார்த்துவிடுகிறேன்” என்று அன்பொழுகும் குரலில் சொல்கிறார்.

சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த வாசுமதி, தனது கணவர் மணிமாறனுடன் வந்திருக்கிறார். கணவரின் இதயத்தில் பிரச்சினையிருப்பதால், ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக அவர் சொல்ல, சென்னையில் உள்ள எம்.எம்.எம் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பிவைக்கிறார் அகர்சந்த். அந்த மருத்துவ மனையில் இவரது கடிதத்துடன் வருகிறவர்களுக்கு முன்னுரிமையும் கட்டண சலுகையும் உண்டு. இப்படி அடுத்தடுத்துப் பலர் வருகிறார்கள். அத்தனை பேருக்கும் உதவுகிறார் அகர்சந்த்.

x