குள.சண்முகசுந்தரம்
திருமங்கலம் இடைத்தேர்தலில் களப்பணி ஆற்றியமைக்கு வெகுமதியாக மகன் மு.க.அழகிரியை 2009-ல், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆக்கினார் கருணாநிதி. பத்து ஆண்டுகள் கழித்து அவரது வழியில், மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார் என்று சொல்லி மகன் உதயநிதிக்கு கட்சியின் இளவரசாக, இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதில் ஸ்டாலினுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ... ஆனால், துர்கா ஸ்டாலினுக்கு அதீத விருப்பம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். ஆனால், அழகிரி அன்றைக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளராகப் பிரகடனம் செய்யப்பட்டபோது திமுகவினர் மத்தியில் இருந்த உற்சாகமும் ஆரவாரமும் இப்போது இல்லை. காரணம், இதுதான் இப்படித்தான் நடக்கும் என ஏற்கெனவே கட்சியினர் தீர்மானித்து வைத்திருந்ததுதான். அதனால் இதைப் பெரிதுபடுத்தாமல், உதயநிதியின் மகன் இன்பநிதியை ‘வருங்காலமே’ என விளித்துப் பகிரப்படும் மீம்களையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்களால் வேறென்ன செய்ய முடியும்?
திமுகவைப் பொறுத்தவரை இளைஞரணி செயலாளர் பதவி என்பது கட்சித் தலைவருக்கான ஸ்டெப்னி பதவிதான். அப்படிப் பார்க்கையில் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்பதை இப்போதே உணர்த்தி கழகத்தினரை அதை அங்கீகரிக்கவும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.