கண்ணான கண்ணே- 21


குழந்தை வளர்ப்பு எவ்வளவு இனிமையானது, அதைச் சிரத்தையோடு செய்யாமல் சிலாகித்து செய்ய வேண்டியது எப்படி என்பதற்கான ஆலோசனைகளைத்தான் நாம் கடந்த வாரம் பார்த்தோம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு, தூங்கும் பழக்கத்திலும் ஒழுக்கம், போதுமான அளவு விளையாட்டு என்பதைப் பரிந்துரைத்திருந்தோம்.

இவற்றில் சுணக்கம் ஏற்படும்போது என்ன மாதிரியான அச்சுறுத்தல்களைக் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைச் சற்றே விரிவாக இந்த அத்தியாயத்தில் கவனிப்போம்.

குழந்தைகளை அச்சுறுத்தும் தொற்றாநோய்கள்…

குழந்தைகளை அச்சுறுத்தும் தொற்றாநோய்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது ஃபேட்டி லிவர் (Fatty Liver) எனப்படும் கல்லீரல் சுருக்க நோய். ட்ரைகிளைசரைட்ஸ் (Triglycerides) எனும் கொழுப்பு படிவதன் காரணமாக கல்லீரல் பெருத்துவிடும். இப்படி கொழுப்பு படிந்த கல்லீரலையே ஃபேட்டி லிவர் என்கிறோம். பொதுவாக மது அருந்துபவர்களுக்கே இந்த நோய் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகக் குழந்தைகளைத் தாக்குகிறது. 6 வயது சிறாரைக்கூட தாக்கும் நோய் இது. காரணம் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட உணவுப் பதார்த்தங்களை அதிகமாக உண்பது, ஒழுங்கற்ற தூக்கப் பழக்கவழக்கம்.

யார் பொறுப்பு?

குழந்தைகளை இத்தகைய தொற்றா நோய்கள் தாக்குவதற்கு யார் காரணம் என்பதை ஆராய்ந்தால் பெற்றோரை மட்டும் நோக்கியே விரல்களை நீட்ட இயலாது. குழந்தைகளை நாம் உடற்பருமன் தாக்கும் (obesogenic environment) சூழலில்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால் பெற்றோர் மட்டுமல்லாமல், அரசாங்கம், அதிகாரிகள், உணவுத் தொழிற்சாலைகள், விளம்பர நிறுவனங்கள் என எல்லோருக்குமே இதில் பங்கு இருக்கிறது.

இத்தகைய அபாயகரமான சுற்றுச்சூழலிலிருந்து குழந்தைகளைத் தற்காத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளைப்  பட்டியலிடுகிறேன். இது அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்களுக்குமானது.

1. நகரங்களின் மிக மோசமான திட்டமிடுதல் முக்கியப் பிரச்சினை. குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காக்களோ, பசுமையான இடங்களோ போதிய அளவில் இல்லாமல்தான் இன்றைய நகரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. அரசியல்வாதிகளும் இதில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உங்கள் எதிர்கால வாக்காளர்கள்தான் இன்றைய குழந்தைகள். அவர்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அடித்தளம் அமைத்துத்தர வேண்டாமா? எதிர்கால வாக்குகளைக் கருதி நீங்கள் சற்றே சுயநலமாகச் சிந்தித்துகூட நன்மை செய்யலாம்.

2. குழந்தைகளைக் கவரும் நொறுக்குத் தீனிகள் விற்பனையில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை. கண்டதையும் விழுங்கும் குழந்தைகள் உடற்பருமனால் அவதிப்படுகின்றனர். அரசு அதிகாரிகளே... குழந்தைகளைத் தாக்கும் உடற்பருமன் நோய் வெடிகுண்டு போன்றது. அதனால், உடனே தலையிட்டு அதைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

3. தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குழந்தைகளுக்கு இழைக்கும் தீங்கைப்புறந்தள்ளிவிட  முடியாது. தொழிற்சாலைகளில் இருந்து போதிய அளவு சுத்திகரிக்கப்படாமல் சுற்றுப்புறங்களில் திறந்துவிடப்படும் கழிவுகள் குறைந்தது 5 கிலோமீட்டர் தூரத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நிலத்தடிநீரும், நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. சுத்தமான காற்று மனிதனின் அடிப்படை உரிமை. ஆனால், அதற்கே ஊறு செய்வதாக இருக்கின்றன தொழிற்சாலைகள். தொழிலதிபர்கள் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கமும் அதிகாரிகளும் தொழிலதிபர்களும் சற்றே பொறுப்புணர்வுடன் இயங்கினால் நம் குழந்தைகளைத் தொற்றாநோய்களிலிருந்து காப்பாற்றலாம். இன்றைய குழந்தைகளே எதிர்கால வாக்காளர்கள், எதிர்கால வாடிக்கையாளர்கள். இதைக் கருத்தில்கொண்டாவது அரசாங்கமும் தொழிலதிபர்களும் செயல்படலாம்.

பெற்றோர் கவனத்திற்கு…

சரி, இப்போது பெற்றோர்கள் எப்படிப் பிள்ளைகளை அபாயகரமான தொற்றாநோய்

களிலிருந்து காக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைப் பட்டியலிடுகிறேன்.

1. தூக்கம், நம் உடலின் அனைத்து உள் உறுப்புகளும் சீராகச் செயல்பட மிகவும் அவசியமானது. கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவை சீராக இயங்க வேண்டுமானால் தூக்கம் சீராக இருக்க வேண்டும். ஃபேட்டி லிவர் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம் தூக்கமின்மை. இதைக் கவனிக்காமலேயே விட்டால் சர்க்கரை நோய்க்கும் வித்திடும். ஃபேட்டி லிவர் தாக்கியவர்களுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரைப்பது தூக்கம். ஆதலால், உங்கள் குழந்தைகள் தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று ஒரே நேரத்தில் விழிப்பதை வழக்கமாக்கச் செய்யுங்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் (வார இறுதிநாளாக இருக்கலாம்) வழக்கான நேரத்தைவிட ஒரு மணி நேரம் பின் தூங்கி, காலையில் சற்றுத் தாமதமாக எழ அனுமதிக்கலாம். மற்றபடி சீரான தூக்கம் ஒரு மருந்து என்பதைக் குழந்தைகள் அறியச் செய்யுங்கள்.

2. நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து முறையாவது உங்கள் குழந்தைகள் சூரிய நமஸ்காரம் செய்யட்டும். இதற்கு விடுமுறை கிடையாது. சூரியன் உதிக்கும் நேரத்திலாவது அல்லது அஸ்தமன நேரத்திலாவது இதைச் செய்ய வையுங்கள்.

3. தினமும் 90 நிமிடங்கள் விளையாட்டு. இது மிக முக்கியமானது. இதற்கு ஈடு இணையும் கிடையாது. பள்ளி முடிந்த பின்னர் 90 நிமிடங்கள் விளையாட்டை உறுதி செய்யுங்கள். பள்ளியில் நடைபெறும் விளையாட்டு வகுப்பை இதில் கழிக்கத் தேவையில்லை. 90 நிமிடங்கள் முழுமையாக ஓடியாடும் விளையாட்டாக இருக்கலாம். இல்லாவிட்டால் சிறிது நேரம் நடன வகுப்பு, சிறிது நேரம் மைதானத்தில் விளையாட்டு, சைக்கிளிங் அல்லது நீச்சல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

4. செல்போன், டிவி என எதுவாக இருந்தாலும் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. ஞாயிறு விடுமுறை என்றால் கூடுதலாக நேரம் தருவது என்பது கூடவே கூடாது. உங்கள் வீட்டுப் படுக்கையறையிலும் உணவு மேஜை உள்ள பகுதியிலும் டிவி கூடாது.

5. பாக்கெட் உணவுகளுக்கு மிகக் கடுமையாக மறுப்பு கூறுங்கள். இதில் தயக்கம் வேண்டாம். கெட்ச் அப், நாச்சோஸ், சிப்ஸ், கோலா வகை பானங்கள், சாக்லேட், பீட்சா இவற்றிற்கெல்லாம் கெடுபிடி காட்டுங்கள். விளைநிலத்திலிருந்து வராத சமையலறையில் சமைக்கப்படாத உணவு எதுவாக இருந்தாலும் அது நோயை வரவேற்கும் உணவு வகை என்பதைக் குழந்தைகளுக்கு அடிக்கடி எடுத்துக்கூறுங்கள்.

6. சிறு தானியங்கள், வெண்ணெய், விதம்விதமான சட்டினி வகைகள்… வளரும் குழந்தைகளுக்கு இவைபோன்ற சிறந்த உணவு இருக்க இயலாது என்பேன். காலைச் சிற்றுண்டி, மதிய உணவு அல்லது இரவு உணவு என இவற்றில் ஏதாவது ஒருவேளையாவது இவை இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். குழந்தைகளின் ஏதாவது ஒருவேளை உணவாவது அவர்களின் ட்ரைகிளைசரைட்ஸ் கொழுப்பு அளவை மட்டுப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். வெண்ணெய், நெய்யில் இருக்கும் அத்தியாவசியக் கொழுப்பு, சட்டினி வகைகளில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள், சிறு தானியங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

உடற்பருமன், ஃபேட்டி லிவர் வரிசையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் தொற்றாநோய் வரிசையில் சர்க்கரை நோய் இடம் பெற்றிருக்கிறது. குழந்தைகளைத் தாக்கும் சர்க்கரை நோய் பற்றியும், அதிலிருந்து குழந்தைகளைத் தற்காத்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் அடுத்த வாரம் அறிவோம்.

(வளர்வோம்… வளர்ப்போம்)

x