பேசும் படம் - 30: போரை நிறுத்திய புகைப்படம்!


உலகில் அதிக நாட்கள் நடந்த போர்களில் வியட்நாம் போரும் ஒன்று. 1955-ம் ஆண்டு தொடங்கிய இப்போர் 1975 வரை நீடித்தது. 1954-ல், பிரெஞ்சு ஆதிக்கத்தை வெற்றிகொண்ட வடக்கு வியட்நாமின் அரசு, அதன்பிறகு வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிந்து கிடந்த வியட்நாமை ஒன்றாக இணைக்க நினைத்தது. வடக்கு வியட்நாமின் இந்த முயற்சிக்கு கம்யூனிஸ நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தெற்கு வியட்னாம், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உதவியுடன் வடக்கு வியட்நாமுக்கு எதிராகப் போரில் குதித்தது. இப்போரில் 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அப்போதைய சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா இடையிலான பனிப்போராக வியட்நாம் போர் மாறியது.

சுமார் 20 ஆண்டுகாலம் நீடித்த இந்தப் போரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் பலியானார்கள். ஏராளமான உயிர்களைப் பலிவாங்கிய இந்தப் போரை நிறுத்துவதில் இங்கே நீங்கள் காணும் படம் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்பட நிபுணரான நிக் உட், சாய்கான் நகரத்துக்கு அருகே அமைந்துள்ள தரங் பாங் என்ற இடத்தில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தை எடுத்த தருணத்தைப் பற்றிக் கூறும் நிக் வுட், “வியட்நாம் போரின்போது தெற்கு வியட்நாமுக்காகப் போரிட்டுக்கொண்டிருந்த விமானப்படைகள் தவறுதலாக தங்கள் பகுதியில் உள்ள தரங் பாங் பகுதியில் குண்டு வீசிச் சென்றன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை நான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நாங்கள் இருக்கும் பகுதியை நோக்கி மக்கள் பெருந்திரளாக ஓடிவந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, தன் உடலில் ஆடையே இல்லாமல் அலறி அடித்தபடி எங்களை நோக்கி ஓடிவந்தார். அவரது நிலை என்னை ஒருகணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னதான் வலியோ, அச்சமோ இருந்தாலும், ஒரு பெண்குழந்தை இப்படி ஆடையே இல்லாமல் ஓடி வருவாளா என்று ஒருகணம் அதிர்ந்து நின்றேன். அதேநேரத்தில் குண்டுவெடிப்பின் தீவிரத்தை இந்தக் காட்சி உலகம் முழுமைக்கும் விளக்கும் என்ற காரணத்தால் அவளைப் படம் பிடித்தேன்.

நான் படமெடுப்பதைப் பற்றியெல்லாம் அந்தப் பெண் கவலைப்படவே இல்லை. ‘உடம்பெல்லாம் கொதிக்கிறது... உடம்பெல்லாம் கொதிக்கிறது’ என்று மாறி மாறிச் சொன்னவாறே என்னை நெருங்கினாள் அந்தச் சிறுமி. அவளது முதுகைப் பார்த்தபோதுதான், அவரது விபரீத நிலை எனக்குப் புரிந்தது. குண்டுவீச்சால் ஏற்பட்ட தாக்கத்தால், அவரது முதுகு முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் ஏற்பட்ட வலியைத் தங்க முடியாமல் அந்தச் சிறுமி தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தாள்.

ஒருகணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு பக்கெட் நீரை எடுத்து, அவள் மீது கொட்டினேன். விசாரித்தபோது தனது பெயர் கிம் புக் என்று சிறுமி கூறினாள். அவளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றேன். குண்டுவீச்சு காரணமாக அவளது உடலில் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவள் பிழைப்பது கடினம் என்றும் அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சக பத்திரிகையாளர்கள் சிலரின் உதவியுடன் அருகில் உள்ள அமெரிக்க சிகிச்சை மையம் ஒன்றில் அவளைச் சேர்த்தேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவள் உயிர் பிழைத்தாள். இந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது” என்கிறார்.

அன்றைய தினம் உட் எடுத்த புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி புயலைக் கிளப்பியது. இந்தப் போரின் தீவிரத்தைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோஷம் அதிகரித்தது. அமெரிக்காவின் மனசாட்சியை இப்படம் உலுக்கிய நிலையில், அந்த ஆண்டு இறுதியில் வியட்நாம் போரில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது. அதே நேரத்தில், போரின் கோர முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டிய இப்படத்துக்கு 1973-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.

நிக் உட்

வியட்நாமில் உள்ள லாங் அன் எனும் ஊரில் 1951-ம் ஆண்டு பிறந்தவர் நிக் உட் (nick ut). அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்படக்காரராக இருந்த இவரது சகோதரர் ஹின் தாஹ், ஒரு குண்டு விபத்தில் பலியாக, அவருக்கு பதில் நிக் உட், தனது 16-வது வயதில் அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தில் புகைப்பட நிபுணராக சேர்க்கப்பட்டார். வியட்நாம் போர் தொடர்

பான பல்வேறு படங்களை எடுத்துள்ள இவர், இச்சமயங்களில் 3 முறை குண்டடியும் பட்டுள்ளார். வியட்நாம் போருக்குப் பிறகு, டோக்கியோ, தென் கொரியா ஹனோய் உள்ளிட்ட பல இடங்களில் இவர் புகைப்பட நிபுணராகப் பணியாற்றியுள்ளார்.

x