அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்பிப்புக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இதைத் தெரிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
வரவேற்கத்தக்க இந்த அறிவிப்புடன், மேலும் பல நல்ல அம்சங்களையும் அமைச்சரின் அறிவிப்பில் காண முடிகிறது. அரசு கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்ற அணுகுமுறை என்பதைக் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டிருப்பது கல்வியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேசமயம், தாய்மொழி வழிக் கல்வி மேம்பாட்டுக்கு மேலும் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அரசு இதற்கும் செவி சாய்க்க வேண்டும்.
செங்கோட்டையனின் பல அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறையில் அரசின் சிறப்பு கவனம் குவிவதை உணர்த்துகின்றன. அறிவியல் ஆர்வம், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், 44 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகங்கள் திட்டம், 223 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாணவர்களின் வருகை குறித்த தகவல் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் ஆக்கபூர்வமானவை. 2019-20 நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
உற்சாகம் தரும் இதுபோன்ற நடவடிக்கைகளுடன் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மாணவர்கள் இடைநிற்றலைத் தடுப்பது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு இலக்குகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுதான் வருங்காலத் தூண்களின் வளமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கும்!