பி. சுவாமிநாதன்
காஞ்சி மகா பெரியவாளின் ஒவ்வொரு செயலுக்கும் உத்தரவுக்கும் கண்ணசைவுக்கும் மிக மிக சாமான்யர்களான நம்மால் காரணம் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடிக்கவும் முற்படக் கூடாது.
ஆனால், மகானின் எந்த ஒரு செயலும் உத்தரவும் கண்ணசைவும் உலக நலனை முன்னிட்டுத்தான் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தன்னை தரிசிக்க வந்த உள்ளூர் மூதாட்டிக்கு அடுத்தடுத்து இரண்டு பெரிய பணிகளை வெகு சாதாரணமாகக் கொடுத்தார்.
முதல் பணி, அரிசி குருணையையும் வெல்லத்தையும் கலந்து காஞ்சி நகரத்தின் தெருவோரங்களில் எங்கெல்லாம் எறும்புப் புற்றுகள் தென்படுகின்றனவோ, அங்கெல்லாம் இந்தக் கலவையை உணவாகத் தூவி விட வேண்டும். இதற்குத் தேவையான அரிசிக் குருணையும், வெல்லமும் ஸ்ரீமடத்தில் இருந்து மூதாட்டிக்கு நித்தமும் தரப்பட்டது.
இரண்டாவது பணி, காஞ்சிபுரத்தில் சிறியது, பெரியது என்கிற வேறுபாடு பார்க்காமல் ஊரில் இருக்கிற எல்லா ஆலயங்களுக்கும் சென்று அனைத்து சந்நிதிகளிலும் தீபம் போட வேண்டும். இதற்கான எண்ணெயும், திரியும் ஸ்ரீமடத்தில் இருந்தே வழங்கப்பட்டது.
இந்த இரண்டு பணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு செவ்வனே முடித்து விட்டார் மூதாட்டி. மகா பெரியவாளின் குருவருளால் தனக்கு இப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்ததே என்கிற பூரிப்பு; ஆனந்தம்.
ஆலயத்துக்கு விளக்கேற்றும் பணியை, நித்தமும் கோயில் கோயிலாகத் தேடிச் சென்று காஞ்சி மாநகரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தீபம் ஏற்றி விட்டேன் என்பதை நடமாடும் தெய்வமான மகானிடம் பவ்யமாகத் தெரிவித்தார்.
சுயநலம் இல்லாதவர்களையும், பொதுக்காரியங்களுக்காகப் பணி புரிகின்றவர் களையும் பார்த்தால், மகா பெரியவா உற்சாகமாகி விடுவார்.
மூதாட்டி செய்திருக்கிற இரண்டு காரியங்களும் மேலே சொன்ன ரகம்.
கண்களில் ஒரு பெருமிதத்துடன் மூதாட்டியைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான். ‘‘எல்லா தெருவுக்கும் போய் எறும்புகளுக்கு இரை (சாப்பாடு) போட்டிருக்கே. காஞ்சிபுரத்துல இருக்கிற எல்லா கோயில்களுக்கும் போய் விளக்கேத்தி வெச்சிருக்கே... புண்ணியம்தான் ஒனக்கு. இப்ப காஞ்சியில இருக்கிற ஒவ்வொரு சந்து பொந்தும் ஒனக்கு அத்துப்படி ஆகி இருக்கும். தபால் ‘டெலிவரி’ பண்றதுக்கு ‘போஸ்ட்மேனு’க்கு ஏதாவது ‘டவுட்’னாகூட ஒன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்’’ என்று சொல்லிச் சிரித்து, மூதாட்டிக்கு பிரசாதம் தந்தார். ‘போயிட்டு வா’ என்பது போல் உத்தரவும் வழங்கினார்.
பெரியவாளின் அன்பிலும் கருணையிலும் நனைந்தார் மூதாட்டி. அவரின் கண்கள் பனிக்க ஆரம்பித்தன.
மகானுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீமடத்துக்கு வருவதை மூதாட்டி நிறுத்தவில்லை. வழக்கம்போல் வருவதும், தன் இயல்பான காரியங்களைச் செய்துவிட்டுப் போவதுமாக இருந்தார்.
ஓரிரண்டு நாட்கள் கடந்திருக்கும்.
அன்றைய தினம் மாலைப் பொழுது. மகா பெரியவா வழக்கம்போல் தன் ஆசனத்தில் சர்வேஸ்வர சொரூபமாக அமர்ந்திருந்தார்.
சுமார் முப்பது நாற்பது பக்தர்கள் காணப்பட்டார்கள். ரொம்பவும் ரம்மியமாகத் தென்பட்டது அந்தச் சூழ்நிலை.
அப்போது ஒரு தனவந்தர் ஸ்ரீமடத்துக்குள் நுழைந்தார். பார்த்தாலே செல்வந்தர் என்பதைத் தெரிவிக்கும் அலங்காரம். கழுத்தில் தங்கச் சங்கிலிகளும் கைகளில் தங்கக் காப்பும் விரல்களில் மோதிரங்களும் மின்னின. மனிதரின் தோற்றத்தையும், அவர் உள்ளே நுழைகிற ஆர்ப்பாட்டத்தையும் பார்த்தால், ஆடம்பரமும் அகங்காரமும் அதிகம் தென்பட்டது.
ஸ்ரீமடத்துக்குள் தான் நுழைவதை எல்லோரும் கவனிக் கிறார்களா... தன்னைப் பார்த்து முகம் வியக்கின்றார்களா... தனது பணக்காரத் தன்மை குறித்துப் பேசுகிறார்களா என்றெல்லாம் ஓரக் கண்ணால் இடமும் வலமும் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அவரது நடையிலும் முகபாவத்திலும் அகங்காரமும் செருக்கும் அதிகம் காணப்பட்டன.
மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டி ருந்த அடியவர் ஒருவர் தனவந்தரின் வருகையைப் பார்த்து ‘யாரோ முக்கிய ஆசாமியாக இருக்கும் போலிருக்கு’ என்று அவரை நோக்கி ஓடிச் சென்றார்.
தனவந்தரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அவரை கர்மசிரத்தையாக பெரியவா அருகே அழைத்து வந்தார்.
இதை எதிர்பார்த்துதானே அந்த தனவந்தரும் சற்று கர்வத்துடன் உள்ளே நுழைந்திருக்கிறார்?! தான் உள்ளே நுழைந்ததும், ஒரு சிறப்புக் கவனிப்பு கிடைக்காதா என்ற எண்ணத்தில்தானே வந்திருக்கிறார்?!
மடத்துச் சிப்பந்தி மூலம் ‘ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’ கிடைத்ததும், தனவந்தர் முகத்தில் பெருமிதம்!
காஞ்சி மகானுக்கு முன்னே வந்தார். இரு கரங்களையும் கூப்பி வணங்கி, நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றார், கைகளைக் கூப்பியபடி. அப்போதும் கர்வம் வெளிப்பட்ட தோரணை.
அருகே அமர்ந்திருந்த பக்தர்கள், ‘இவர் யாராக இருக்கும்? இத்தனை ஆடம்பரமாக ஒரு துறவியின் சந்நிதிக்கு வந்திருக்கிறாரே... பற்றற்ற ஒரு துறவியைத் தேடி வருபவர் அந்தத் துறவிக்கு முன்னால் தன் பகட்டை இப்படி எல்லாம் வெளிப்படுத்தலாமா?’ என்கிற முகச் சுளிப்புடன் இவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தன் முன்னால் வந்து நிற்கிற தனவந்தரை ஏறெடுத்துப் பார்த்தார் மகாமுனி.
மகான் தன்னைக் கவனிக்கிறார் என்று தெரிந்ததும், முகத்தில் கொஞ்சம் பவ்யம் காட்டினார் தனவந்தர். ‘‘பெரியவா... உங்க ஆசி வேண்டி வந்திருக்கேன்’’ என்றார் ரொம்பவும் குழைசலாக.
தனவந்தரை மேலும் கீழும் பார்த்தார் சுவாமிகள். மகான் முகத்தில் புன்னகை அப்படியே தங்கி இருந்தது.
தன் பெயரையும், தான் எந்த ஊர் என்பதையும் சொல்லி விட்டு, ‘‘நீங்க சொன்னபடி ஊர்ல நல்ல காரியங்களை அப்பப்ப பண்ணிண்டு இருக்கேன் பெரியவா’’ என்றார்.
தலையை மேலும் கீழும் அசைத்து, ‘அப்படியா...’ என்றவாறு தனவந்தரைப் பார்த்தார் மகான்.
தனது செயல்பாடுகள் பற்றிப் பெரியவாளே வியந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற பெருமிதம் தனவந்தருக்கு ஏற்பட்டது. ‘‘சமீபத்துல சகஸ்ர போஜனம் செஞ்சேன். அதோடு லட்ச தீபமும் போட்டேன்’’ என்றார்.
சகஸ்ரபோஜனம் என்றால் ஆயிரம் பேருக்கும் உண விடுவது. லட்சதீபம் என்றால், ஒரு லட்சம் திருவிளக்கு களை ஏற்றி வைப்பது.
ஒரு தர்மம் செய்தால், அதைப் பற்றி வெளியே விளம் பரப்படுத்தக் கூடாது. ‘நான்தான் தர்மம் செய்தேன்’ என்று மனதளவில்கூட நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
‘தர்ம கார்யங்களை நான் செய்தேன்’ என்று அதன் மூலம் பேரையும் புகழையும் தேட முற்படக் கூடாது.
மகா பெரியவா இன்னமும் அந்த தனவந்தரை தீர்க்க மாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தனவந்தருக்குப் பெருமை பிடிபடவில்லை. கொஞ்சமும் அகம்பாவம் குறையாத முகத்தோடு காணப்பட்டார். தனது காரியத்தை மகா பெரியவா தன் திருவாயால் பாராட்டுவார் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்.
தனவந்தர் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான்.
தன்னைப் பார்த்து இரு கரம் உயர்த்தி ஆசி புரிந்து விட்டு, ‘அடேங்கப்பா... ஆயிரம் பேருக்கு நீ சாப்பாடு போட்டிருக்கியா? ரொம்ப உத்தமமான காரியத்தைப் பண்ணி இருக்கே. அப்புறம் என்ன சொன்னே... லட்சம் தீபம். அடடா... பகவானையே பிரகாசமாக வெச்சுட்டே. கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு.
உன்னைப்போல் நல்ல உள்ளம் கொண்ட தர்மவான் யாரு இருக்கா இந்த லோகத்துல... யாராலும் செய்ய முடியாத ஒரு பிரமாதமான காரியத்தை நீ பண்ணி இருக்கே... உன்னை எத்தனை பாராட்டினாலும் தகும். நீ இன்னும் நன்னா இருக்கணும்’ என்றெல்லாம் மகா பெரியவா சொல்ல வேண்டும். அதோடு, ஸ்ரீமடத்தின் சார்பாக ஒரு சால்வை போர்த்தி கவுரவிக்க வேண்டும். மகான் தன் திருக்கையால் பிரசாதம் தந்து தன்னை வழியனுப்ப வேண்டும். அவ்வளவுதான்!
இத்தனை எதிர்பார்ப்பும் அந்த தனவந்தரின் மனசுக் குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒருவர் மனசில் என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது சாதாரண மனிதர்களான நமக்கு விளங்காது. ஆனால், மகான்களுக்கு எல்லாமே வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
தனவந்தரின் மனசுக்குள் மண்டிக் கிடக்கிற ‘விளம்பர வியாதி’யை மகா பெரியவா கண்டுபிடித்து விட்டார்.
வியாதிக்கு ஒரு மருந்து தர வேண்டும். அது வியாதியை முற்றிலும் விரட்டுகிற தன்மையுடன் இருக்க வேண்டும். மீண்டும் அந்த வியாதியே வரக் கூடாது என்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ‘ஸ்ட்ராங் டோஸ்’ கொடுத்தால்தான் சரிப்படும்.
காஞ்சி மகானும் தனவந்தரைப் பார்த்துத் திருவாய் மலரத் துவங்கினார்.
(ஆனந்தம் தொடரும்)