ஹாட் லீக்ஸ்: சென்ற இடத்தில் செந்திலுக்கு எதிர்ப்பு!


சென்ற இடத்தில் செந்திலுக்கு எதிர்ப்பு!

செந்தில்பாலாஜி பெரும் கூட்டமாக வந்து கழகத்தில் இணைந்ததால் கரூர் மாவட்ட திமுகவில் அப்போது யாரும் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், முன்னாள் மாவட்டச் செயலாளரான மறைந்த வாசுகி முருகேசனின் ஆதரவாளர்கள் இப்போது லேசாக எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள். வாசுகியின் பிறந்த நாளின்போது ஆதரவாளர்கள் பலரும் ‘வாசுகி முருகேசனின் எதிரியான செந்தில் பாலாஜிக்கு மாவட்டச் செயலாளர் பதவியா? உண்மையான திமுக ரத்தம்தான் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவலைப் பரப்பினார்கள். அத்துடன், ‘வாசுகியின் குடும்பத்தில் ஒருவருக்குதான் பொறுப்பு வழங்கப்படும்’ என்று வாசுகியின் மரணத்தின்போது ஸ்டாலின் சொல்லிச் சென்றதையும் நினைவுபடுத்தி இருக்கிறார்கள்.

சொந்தக் காசுலயா சொன்னத செய்வாரு?

புதிதாக பொறுப்பேற்ற எம்பி-க்களில் அநியாயத்துக்கு சுறுசுறுப்பு காட்டுகிறார் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி-யான ராமநாதபுரம் நவாஸ்கனி. தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்த ராமநாதபுரம் ரயில் நிலைய விரிவாக்கம், பாதாளச் சாக்கடைத் திட்டம், நரிப்பையூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக இதுவரை ஒரு டஜன் இடங்களை ஆய்வு செய்திருக்கிறாராம் நவாஸ். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “இடம் பார்த்தால் போதுமா... திட்டங்கள நிறைவேற்ற அதிகாரம் வேண்டாமா. சொந்தக் காசப் போட்டா சொன்னத செய்யப் போறாரு?” என்று தாமரைக் கட்சிக்காரர்கள் அவரைக் கிண்டலடிக்கிறார்கள்.

x