பாப்லோ தி பாஸ் 32: தி லாஸ்ட் பர்த்டே..!


1993...

அந்த வருடத்தின் ஆரம்பம் முதலே பாப்லோவுக்கு எல்லா திசைகளிலிருந்தும் சிக்கல்  வந்துகொண்டேயிருந்தது. வியாபாரம் முழுமையாக நொடித்துப் போனது. அவனுடன் இருந்த  சிகாரியோக்கள் பலர் கொல்லப்பட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டார்கள் அல்லது பாப்லோவின் போட்டியாளர்களிடம் தஞ்சமடைந்தார்கள்.

அதுவரையில் பாப்லோவுக்கு மட்டும்தான் ஆபத்து இருந்தது. ஆனால் அந்த வருடம் முழுவதும், பாப்லோவின் குடும்பத்தைத் தாக்கத் தொடங்கினார்கள் எதிரிகள். அவர்கள் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தினார்கள். அதிலிருந்து பாப்லோவின் குடும்பம் தப்பித்துச் சென்றாலும், அவர்கள் போன இடமெல்லாம் குறிவைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

அந்த வருடம் நவம்பரில், பாப்லோ, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெர்மனியில் தன் மனைவியையும் குழந்தைகளையும் தஞ்சமடைய வைக்கத் திட்டமிட்டான். அடுத்த சில நாட்களில், அவர்கள் ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கியதுதான் தாமதம்… அவர்களை அந்நாட்டு போலீஸார் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

அவர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார்கள். அவர்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக எந்த ஒரு உடைமையும் இல்லை. ஜெர்மனியில் குடியேறுவதற்கு அவர்களிடம் அதிகாரபூர்வமான ஆவணங்களும் இருந்தன. ஆனாலும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அதற்குக் காரணம் அவர்களது உடலில் ஓடும் பாப்லோவின் ரத்தம். இருந்தாலும் ஜெர்மனி அவர்களுக்கு உதவி செய்யவே விரும்பியது. ஆனால், கொலம்பியாதான் அதற்கு முட்டுக்கட்டையாக நின்றது. எனவே, அவர்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

அவர்கள் கொலம்பியாவுக்குத் திரும்பியவுடன் பொகோட்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிறை வைக்கப்பட்டார்கள். அந்த ஹோட்டல் கொலம்பிய போலீஸுக்குச் சொந்தமானது. போலீஸாரின் பார்வையில்தான் அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். பாப்லோவின் பார்வையிலோ, அவர்கள் பிணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதுவும் தீங்கு நடந்துவிடக் கூடாதே என்ற பரிதவிப்பு அவனிடம் இருந்தாலும், அவனால் செய்ய முடிந்தது எதுவுமில்லை.

ஒரு பக்கம், தன் எதிரிகள் எல்லாம் அவனை நெருங்குகிறார்கள். இன்னொரு பக்கம், தன் குடும்பம் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டது. இந்த நிலையில், அவன் பித்துப் பிடித்தது போல இருந்தான். பல நாள் வெட்டப்படாத தலை முடியும், சவரம் செய்யப்படாத முகமும் அவனை யாரென்றே தெரியாத அளவுக்கு மாற்றியிருந்தன.

அந்த வீட்டில் அவனும் அவனுடைய கடைசி சிகாரியோ லிமானும்தான் இருந்தார்கள். லிமானுக்கு மூடநம்பிக்கைகள் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. பாப்லோவுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், அதைப் பார்த்துச் சிலாகிக்கவே செய்தான்.

நவம்பரின் கடைசி நாளில், பாப்லோ பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெரிய ஈ, அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. கையால் ஈ ஓட்டிப் பார்த்தான். அது கைக்குச் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் அவனைத் தொந்தரவு செய்தது. பேப்பரைச் சுருட்டி அதைக் கொல்ல முயன்றான். ஆனாலும் தப்பித்துவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து அந்த ஈ, அவனது வலது காதில் வந்து அமர்ந்தது.

“பேத்ரோன்… இது நல்லதுக்கில்ல. இது கெட்ட சகுனம் போலத் தெரியுது. என்னமோ தப்பா நடக்கப் போறதா எனக்குத் தோணுது…”

லிமான் சொன்னதைக் கேட்டவாறே மறுபடியும் அந்த ஈயைக் கொல்ல முயன்றான். அது அவனிடமிருந்து தப்பித்து, மீண்டும் அவன் காலில் வந்து அமர்ந்தது. பிறகு, லிமான், அறையின் ஜன்னலைத் திறந்துவிட, அது வெளியேறியது. பாப்லோ சிரித்துக்கொண்டான்.

டிசம்பர் 1.

பாப்லோவின் 44-வது பிறந்தநாள். வருடந்தோறும் தன் குடும்பம், நண்பர்கள், சிகாரியோக்கள் ஆகியோருடன் கொண்டாடியவன், அன்று தனிமை யில் இருந்தான். அதுதான் தன்னுடைய கடைசி பிறந்தநாளாக இருக்கும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை.

பாப்லோ தங்கியிருந்தது, அவனது உறவினர் லுஸ்மில்லாவின் வீடு. அவளது முகவரிக்கு, பாப்லோவின் மகளும், அண்ணனும் வாழ்த்து அட்டைகளை அனுப்பியிருந்தனர். அன்று  முழுவதும் அந்த அட்டைகளையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருந்தான்.

அன்று இரவு பலதரப்பட்ட ஆபத்துகளுக்கிடையில், தனது தாய் ஹெர்மில்டாவைச் சந்திதான்.

“என்ன பாப்லோ… இப்படி ஆகிடுச்சே..?”

“விடுமா... எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும். மெதஜின்ல உன்னைப் பார்க்கிறது இதுதான் கடைசியா இருக்கும்னு நினைக்கிறேன்...”

“ஏன்..?”

“இன்னும் கொஞ்ச நாள்ல, நாங்க காட்டுக்குள்ளாற போய், புதிய அமைப்பை உருவாக்கப் போறோம். அப்புறம் கொஞ்ச நாள்ல, ‘அன்ட்டியோகியா ஃபெடரல்’ அப்படின்னு ஒரு புதிய சுதந்திர தேசத்தை அறிவிப்போம். அந்த தேசத்துக்கு நான்தான் அதிபர்.”

அதைக் கேட்டு, அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள்

ஹெர்மில்டா. அவளிடமிருந்து விடைபெற்றான் பாப்லோ.

டிசம்பர் 2.

ரேடியோ மூலம் ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக் கும் தனது குடும்பத்துடன் தொடர்புகொள்ளும்போது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குக் குறைவாகவே பேச வேண்டும் என்பது பாப்லோவுக்குத் தெரியும். பாப்லோவின் குடும்பத்துக்கும் தெரியும். ஆனால் ஏனோ, அன்று அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறினான் பாப்லோ.

“அப்பா… ‘செமானா’ பத்திரிகையிலிருந்து 40 கேள்விகள் அனுப்பியிருக்காங்க…” யுவான் பாப்லோ சொன்னான்.

“சொல்லு கிரிகோரி…”

யுவான் கேள்விகளைச் சொல்ல, பாப்லோ பதில் சொல்லிக் கொண்டிருந்தான். நான்கைந்து கேள்விகள் ஆகியிருக்கும். திடீரென்று அந்த வீட்டின் கதவுகள் தட்டப்பட்டன.

“யுவான்… நான் அப்புறம் கூப்பிடுறேன்…” இணைப்பைத் துண்டித்தான் பாப்லோ.

கதவுகள் வேகமாகத் தட்டப்பட்டன. அன்று லுஸ்மில்லா, பாப்லோவுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கடைக்குச் சென்றிருந்தாள். அன்றிரவு, பாப்லோ அங்கிருந்து தப்பிக்கத் திட்டமிட்டிருந்தான்.

யாரும் கதவைத் திறக்காததால், கதவு உடைக்கப்பட்டது. போலீஸார் உள்ளே வந்தனர். பாப்லோவின் ரேடியோ தொடர்பை ஒட்டுக்கேட்டு, அவன் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வந்தார்கள்.

பாப்லோவும் லிமானும் அந்த வீட்டின் ஜன்னல் வழியாகக் குதித்து, அருகிலிருந்த வீட்டுக்கூரையின் மீது ஓடத் தொடங்கினார்கள். அப்போது ஒரு தோட்டா பறந்து வந்து பாப்லோவின் வலது காலைப் பதம் பார்த்து, வெளியேறியது. இரண்டாவது தோட்டா அவனது வலது தோள்பட்டையில் பாய்ந்து வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கியது. அவன் மயங்கிச் சரிந்தான்.

உலகம் இருண்டுவிட்டது போலத் தோன்றியது அவனுக்கு. உடலெங்கும் வியர்வை வழிந்தது. மேலும் கீழுமாக மூச்சிரைத்தது. பார்வை மங்கியது. தாகத்தில் தவித்தான். அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஓடின. அப்போது மூன்றாவது குண்டு அவனது வலது காது வழியே பாய்ந்தது. அவனது உடல் அசைவற்றிருந்தது.

பாப்லோ இறந்துவிட்டான்..!

அந்த மூன்றாவது தோட்டா..!

பாப்லோ கொல்லப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு கதைகள் இன்று வரையிலும் உலாவுகின்றன. கொலம்பிய அரசு ஒருவிதமாகச் சொல்ல, பாப்லோவின் குடும்பத்தினர் இன்னொரு விதமாகச் சொல்கிறார்கள்.

பாப்லோவைக் கொன்ற மூன்றாவது தோட்டா, ‘நாங்கள் சுட்டதுதான்’ என்று போலீஸ் தரப்பு கூற, பாப்லோவின் அண்ணனும் மகனும் பாப்லோவே அந்த மூன்றாவது தோட்டாவைத் தனக்குள்  செலுத்திக் கொண்டுதான் செத்துப் போனான் என்கிறார்கள்.

 “எப்போதும் அந்த அமெரிக்க ஏஜென்ட்டுகளின் பிடியில் என் உயிர் போகாது” என்று சொல்லி வந்தவன் பாப்லோ. அதுவரையிலான பாப்லோவின் ஆளுமையைக் கணக்கில் கொண்டு பார்த்தால், அவனது குடும்பம் வைக்கும் வாதத்தில் பெருமளவு உண்மை இருக்க வாய்ப்புண்டு.

(திகில் விலகும்...)

x