குள.சண்முகசுந்தரம்
டெல்லிக்கும் சென்னைக்குமாய் பரபரப்பாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக விவகாரங்களைக் கவனிக்கும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் என சந்திப்புகளைத் தொடரும் அதிமுக அமைச்சர்கள், தமிழகத் திட்டங்களுக்கு நிதி கேட்டு அமைச்சர்களைச் சந்திப்பதாக வெளியில் சொல்கிறார்கள். ஆனால், இந்தச் சந்திப்புகளின் பின்னணியில் வேறு சில முக்கிய அஜெண்டாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை பெரிதும் நம்பி களத்தில் இறங்கியது பாஜக. "ஊழல் குற்றச் சாட்டுகளிலும் உட்கட்சிக் குழப்பத்திலும் சிக்கித் தவிக்கும் அந்தக் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்” என இங்கிருக்கும் ஒரு சில பொறுப்பாளர்கள் சொன்னதை எல்லாம் மீறி, ஓட்டு வங்கியைக் கணக்கில் வைத்து ஐந்து சீட்களுக்கு சம்மதித்து அதிமுகவுடன் உடன்பாடு கண்டது பாஜக. அதேபோல், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அடிமட்டத் தொண்டனின் கருத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிமுகவும் பாஜகவுடன் கைகுலுக்கியது. ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக முனைப்புக்காட்டி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட அதிமுக, மக்களவைத் தேர்தலில் தன்னை நம்பி வந்த பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் படுதோல்விக்குள் தள்ளியது.
இத்தனையும் செய்துவிட்டு அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர், “பாஜக கூட்டணியால்தான் அதிமுகவுக்கும் இத்தனை பெரிய சரிவு” என பேட்டி கொடுத்தார்கள். இதெல்லாம் பாஜக தலைமையைக் கோபப்படுத்திவிடுமோ என அலறிய அதிமுக தலைமை, அப்படி பேட்டி கொடுத்தவர்களை அழைத்து “நாவடக்கம் தேவை” என்றது. அதனால் மறுநாளே அவர்கள் அந்தர்பல்டி அடித்தார்கள். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி தேவையில்லை என்ற கருத்தை தமிழக பாஜகவினரும் இப்போது முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.