பி. சுவாமிநாதன்
ஓ ய்வு பெற்றவர்களையும் வயதானவர்களையும் முன்னிலைப்படுத்தி அவர்களுக்காக மகா பெரியவா சொன்ன தகவல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் முதியோர்களும் தன் எதிரே அறிவுரை கேட்க அமர்ந்திருப்பது போல் நினைத்துக்கொண்டு அவர்களுக்குப் பெரியவா சொன்ன மேலும் சில விஷயங்களைப் பார்ப்போம்.
‘‘காலைப் பொழுதில் உங்களுக்கு உண்டான நித்யப்படி பூஜைகள் உள்ளிட்ட காரியங்களை முடித்து விட்டால் மதியத்துக்கு மேல் நிறைய அவகாசம் கிடைக்கும். அந்த வேளை உங்களுக்குக் கிடைத்திருக்கிற பொக்கிஷம் போன்ற நேரம். எனவே, நேரத்தைக் கொஞ்சமும் வீணடிக்காமல் அந்த வேளையில் பரோபகார சிந்தனையோடு செயல்பட வேண்டும் (பரோபகாரம் என்றால் பலன் கருதாமல் பிறருக்கு உதவுவது).
அடுத்தவர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஓய்வு நேரமே நமக்குக் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டு ஒவ்வொரு தினத்தையும் உபயோகமாகச் செலவிட வேண்டும்.
சத் சங்கம் தொடர்பான பல விஷயங்களை, கதைகளை நேரில் போய்க் கேட்டும், படித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடக்கூடாது. உங்களுக்குத் தெரிந்த நல்லனவற்றையும், சத் சங்க கதைகளையும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இன்னொன்றும் அவசியம். வாழ்க்கையில் நீங்கள் எந்தத் தொழிலை, உத்தியோ கத்தை ஓய்வுக்கு முன் மேற்கொண்டு வந்தீர்களோ, அதை நாலு ஏழை மாணவர் களுக்கோ, இளைஞர்களுக்கோ இலவசமாகச் சொல்லிக் கொடுக்க முன் வர வேண்டும். அதோடு நீங்கள் கற்றுக்கொடுத்த ‘சப்ஜெக்ட்’ சம்பந்தமாக ஏதேனும் பரீட்சைக்கு இந்த ஏழை மாணவர்கள் செல்கிறார்கள் என்றால், இவர்கள் அதில் தேர்வு ஆவதற்கு நீங்கள் கூடுதலாகப் பிரயத்தனப்பட வேண்டும். அவர்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும்.
ஒருவேளை நீங்கள் வாங்குகிற ‘பென்ஷன்’ தொகை உங்களது செலவினங்கள் போக கொஞ்சம் தாராளமாக இருந்தால், இந்த ஏழை மாணவர்களில் எத்தனை பேருக்கு உங்களால் அன்னதானம் செய்ய முடியுமோ, அதையும் சேர்த்துப் பண்ணுங்கள். வித்யா தானத்தோடு அன்னதானமும் சேர்ந்தால் அமோகம்தானே! வறுமையில் இருக்கின்றவர்களுக்கு உணவிடுவது என்பது உள்ளுக்குள் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
இவற்றுக்குப் பெயர்தான் பரோபகாரம். ‘நம்மாலும் மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியும்’ என்பது ஆன்மாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆன்மாவை எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று பார்க்க வேண்டும்.
உங்களைச் சார்ந்து வாழும் குடும்பத்துக்கு மட்டும் சொத்து சேர்த்து வைத்தால் போதாது. குடும்பம் தவிர வெளி மனிதர்கள் சிலரின் வயிறையும் குளிரப் பண்ணுங்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இப்படி எந்தவிதமான ஆதரவும் இல்லாதவர்கள்தான் சமூகத்திலே திருட்டு, வழிப்பறி என்று பிற்காலத்தில் தடம் மாறிப் போகிறார்கள். அவர்களுக்கு இருக்கிற வறுமைதான் இப்படி மோசமான விதங்களில் செயல்பட அவர்களை யோசிக்கச் செய்கிறது.
வசதியும் வாய்ப்பும் இருக்கின்றவர்களுக்குப் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல உள்ளம் இல்லாத காரணத்தால்தான், வறுமையில் வாடுகின்றவர்கள் தவறான பாதையில் தடம் மாறிப் பயணிக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் எல்லோரும் பரோபகார சிந்தனையோடு வாழ்ந்திருக்கிறார் கள். அப்படி வந்தவர்களின் வாரிசாக வாழுகின்ற நாம் இந்தச் சிந்தனையை விட்டு விடக் கூடாது. நமக்கென்று இருக்கும் கடமையை உணர்ந்து கொள்ள வேண்டும்.’’
பூலோக வாழ்க்கை பூர்த்தியாகி, கடைசிக் காலத்தில் மேலுலகம் போகின்றபோது நாம் வைத்திருக்கிற வங்கிக் கையிருப்பைப் பார்த்தோ, நாம் சேர்த்து வைத்திருக்கிற சொத்து வகையறாக்களைப் பார்த்தோ சொர்க்கம் வாய்க்காது. எந்த அளவுக்கு நற்காரியங்கள் செய்திருக்கிறோம்... பிறரை சந்தோஷப்படுத்தியிருக்கிறோம்... புண்ணியம் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பன போன்றவற்றை எல்லாம் பார்த்துத்தான் மீண்டும் பிறவியே இல்லாத நிலை அமையும்.
எனவே, வாழுகின்றபோதே பிறருக்கு உதவிட வேண்டும் என்கிற நற்குணத்தை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைத்தான் மகா பெரியவா வெகு அழகாக, வயதான வர்களை முன்னிறுத்திச் சொல்கிறார்.
தர்மம் செய்கிற விஷயத்தில் அந்த எண்ணத்தை ஒரு போதும் நாம் ஒத்திப் போட்டுவிடக்கூடாது என்பார் காஞ்சி முனிவர்.
‘‘எப்போதும் எமன் உன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் தர்ம காரியங்களைச் செய்து விடு’’ என்பார் அந்தக் கருணாமூர்த்தி.
இதையே இன்னும் எளிமையாக ஒரு ஸ்லோகத்தின் மூலமாக அறிவுறுத்துவார்.
அந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்: ‘‘புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்றால், பரோபகாரம் பண்ணு. பாவத்தை மூட்டைக் கட்டிக் கொள்வதென்றால், மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு.’’
அதாவது, வாழுகின்றபோது நீ சேமிக்கிற புண்ணியம் தான் உன்னைக் காப்பாற்றும். ஒருவேளை பிறரது வயிற்றெரிச்சலையும், பொல்லாப்பையும் சம்பாதித்தால் நம் கணக்கில் ஏறுவது பாவம்தான் என்பதை மறந்து விடக்கூடாது.
இதோடு இன்னொரு விஷயத்தையும் நடமாடும் தெய்வமான மாமுனிவர் சொல்கிறார்:
‘‘தானம், தொண்டு இவற்றால் மற்றவர்களுக்குத்தான் லாபம். ஒருவேளை அவர்கள் லாபம் அடைந்தாலும், அடையாவிட்டாலும் நமக்கும் ஒரு விதமான லாபம் இருக்கிறது. அது என்ன லாபம் தெரியுமா? மனதின் அகங் காரம் குறையும். ஆம்! பிறருக்கு உதவுவதன் மூலமே அதில் கிடைக்கிற ஆனந்தத்தின் மூலமே நம் அகங்காரம் குறையும்.
சங்கமாக, ஒரு குழுவாக எல்லோரும் சேருவதால் சமூகத்தில் அந்யோன்னியம் தானாகவே உருவாகும். கிணறு வெட்டுவதை விட குளம் வெட்டுவது சிறந்தது. குளம் வெட்டுவதற்கு ஊரில் உள்ள பலரது உழைப்பும் தேவை. எல்லோரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் மனசில் இருக்கக் கூடிய அகம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவது போல் நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே, அதுவே போதும். இந்த ஈரமும் அன்பும்தான் கடவுளை நாம் உணர்வதற்கு வழி வகுக்கும்.’’
கடவுளை உணர ஈர நெஞ்சம் தேவை என்பதையும் அதை அடைவதற்கான வழியையும் சிறு குழந்தைகூட புரிந்துகொள்ளும் வகையில் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் காஞ்சி மகான்!
அகம்பாவமும் அகங்காரமும் நம்மை விட்டு ஒழிந்தால் தான், இறைவனுடைய பரிபூரணமான அனுக்ரஹம் கிடைக்கும்.
மகா பெரியவா தொடர்பான அற்புதமான ஒரு நிகழ்வை இப்போது பார்க்கலாம்.
பெரியவாளுக்கு ஏழை பக்தர், பணக்கார பக்தர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அந்தக் கருணைத் தெய்வத்தின் சந்நிதியில் எல்லோருக்கும் ஒரே மரியாதை.
காஞ்சிபுரத்தில் ஒரு மூதாட்டி வசித்து வந்தார். ரொம்பவும் ஏழை. ஏதோ தான் சேமித்து வைத்திருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தை வைத்து, பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். இரண்டே இரண்டு புடவைதான் மூதாட்டியின் கையிருப்பு. ஒன்றை உடுத்தி இருப்பார். இன்னொன்று உலர்ந்து கொண்டிருக்கும்.
ரொம்பவும் சிக்கனமான வாழ்க்கை. எல்லாம் கைக்கும் வாய்க்குமாக இருக்கும். ஆனாலும் மடி, ஆசாரம் இவை அனைத்திலும் கர்ம சிரத்தையாக இருப்பார் அந்த மூதாட்டி. கோயில் காரியங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், ஆசையோடு செய்வார்.
மகா பெரியவா மீது அளவு கடந்த பக்தி. அதில் கஞ்சத்தனம் இல்லை. தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் ஸ்ரீமடத்துக்கு மூதாட்டி செல்வார். மகான் அமர்ந்து திருக்காட்சி தரக்கூடிய இடத்தைக் கூட்டிச் சுத்தம் செய்து, ஜலம் தெளித்து, கோலம் போட்டு, மூலையில் பெரிய அகல் விளக்கை ஏற்றி வைப்பார்.
தான் ஏழ்மை நிலையில் இருந்தாலும், பெரியவாளிடம் எந்த ஒரு சலுகையையும் மூதாட்டி எதிர்பார்த்தது இல்லை. பெரியவா இருக்கிற இடம் அருகேகூட செல்ல மாட்டார். எட்ட நின்றபடியே அந்த கருணா சமுத்திரத்தை தரிசிப்பார். மகானை நித்தமும் இரு வேளைகளில் தரிசிப்பதே தனக்குப் பெரிய பாக்கியம் என்று ஆனந்தப்படுவார்.
ஒருநாள் மாலை மகா பெரியவாளின் தரிசனத்துக்காக மூதாட்டி வந்திருந்தார்.
வழக்கம்போல் செய்ய வேண்டியவற்றைச் செய்து விட்டு ஒரு அகல் விளக்கையும் மூலையில் ஏற்றி வைத்தார்.
மகானின் திருவருட் பார்வை மூதாட்டியின் மீது விழுந்தது.
கடைசியில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்தார் பெரியவா. ஒரு சொடக்குப் போட்டார்.
மூதாட்டி படபடப்புடன் ஸ்வாமிகளைப் பார்த்தார். தன்னைத்தான் அழைக்கிறாரா, அல்லது வேறு யாரையேனும் அழைக்கிறாரா என்று குழப்பம்.
மீண்டும் இந்த மூதாட்டியைப் பார்த்துத் தன் அருகே வருமாறு சைகை செய்தார் மகான்.
தவிர, ஒரு சிப்பந்தியிடமும் தகவல் சொல்லி மூதாட்டியை அருகே அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
மகா பெரியவாளின் அனுக்ரஹம் தனக்குப் பரிபூரணமாகக் கிடைத்து விட்டது என்கிற சந்தோஷத்துடன் மூதாட்டி ஓட்டமும் நடையுமாக வந்தார்.
மூதாட்டியை மகான் அழைத்தது எதற்காக?
(ஆனந்தம் தொடரும்)