அந்தச் செய்தியைப் படித்த பின்பு ‘இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை’ என்று தான் ஆயாசமாகவும் சலிப்பாகவும் உணர்ந்தேன். பெரம்பலூரில் அந்த இளம்பெண் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொள்ளும் டிக்டாக் வீடியோ பற்றிய செய்தி அது. அன்று காலையில் இருந்தே இத்தகவல் என்னைப் போன்றே நிறைய பேரை பாதித்துவிட்டது.
கோவையிலிருந்து ஒரு பண்பலை வானொலியின் நெறியாளர் அழைத்தார். ‘‘என்ன சார் இது டிக்டாக் பயன்பாட்டின் உச்சம் இப்படி உயிர் விடுவதற்குத்தானா... என்ன மாதிரியான உளவியல் இது?” எனக் கவலையோடு கேட்டார்.
ஒவ்வொன்றாகக் கருத்துகளை எடுத்துச் சொல்லி முடித்தபிறகும் மனசுக்குள் ஒரு இருள். எல்லாப் புறமும் சாலைகள் இருந்தும் நாம் போகும் வழி எது எனப்புரியாத நிலை. எங்கே போகிறோம் நாம்? திகட்டத் திகட்ட தொழில்நுட்பம். அள்ள அள்ள அற்புதங்கள். பயன்பாட்டிற்கும், மிகைப்பயன்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம் புரிவதற்குள் அப்பழக்கத் திற்கு அடிமையே ஆகி விடுகிறோம்.
அந்தப் பெண்மணி செய்த காரியமென்ன? கணவன் வெளிநாட்டில் இருந்து பொருளீட்ட இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு தனியாக இருக்கிறார். வீட்டு வேலையும் சீக்கிரம் முடிந்த பின் இவரைப்போன்றே உள்ள பல இளம் குடும்பத்தலைவிகள் செய்யும் அதே காரியத்தைத்தான் இவரும் செய்கிறார். இணையமும் ஸ்மார்ட்போனும் அவருக்கு உயிராகிப் போகிறது. நண்பர்களுடன் அளவளாவுதல், முகநூல், வாட்ஸ் - அப் என்று வளர்ந்து டிக்டாக் செயலியில் வந்து நிற்கிறார்.
ஆஹா எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. நமக்குப் பிடித்த பாடல்களுக்கு உதடு மட்டும் அசைத்து, நமக்குப் பிடித்த நடன அசைவுகளைக் கொடுத்து அரை நிமிடம் எடுத்த வீடியோவை ஒரு மணி நேரம் ‘எடிட்’ செய்து பதிவேற்றம் செய்தால்…அப்பப்பா எத்தனை லைக்குகள், எத்தனை ஹார்ட்டின்கள், ஸ்டார்கள்..!தனிமை போயே போச்சு அப்பெண்மணிக்கு.
தினமும் டிக்டாக். தினமும் மகிழ்ச்சி. தனிமை இனி இல்லை என்னும் அளவிற்கு பிஸி. எப்போதும் பிஸி.குழந்தைகள் பள்ளியை விட்டு வந்தாலும் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும், நாம இதிலே இன்னும் ரெண்டு வீடியோ ஷூட் பண்ணிப் போடற வேலை இருக்கு என்று இவர்கள் இதில் பிஸி ஆகி விடுகின்றனர்.
அருகிலிருக்கும் உறவினர் குழந்தை ‘ஆன்ட்டி’ என்று அழைக்கும் போது வராத மகிழ்ச்சி, எங்கேயோ ஐந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் ஒரு விடலைப்பையன் ‘ஹாய்’ என்று ஒரு மெசேஜைத் தட்டிவிடும்போது வந்து விடுகிறதே... ஏன்?
ஹெவியாகப் போட்டுக்கொண்ட மேக்-அப் மற்றும் அலப்பரையாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பது ஒவ்வொருவருக்கு ஒரு உணர்வைக் கொடுக்கும்.
மனிதர்கள் பலவிதம். அவர்தம் ஆளுமை, குணாதிசயங்கள் பலவிதம். நான் சூப்பர் என்பதை நீங்கள் “கிரிமினல் வேஸ்ட்” என்பீர்கள். நான் பயந்துபோய் பார்க்காமல் தவிர்த்த வீடியோவை “ச்ச்ச்சோ ஸ்ஸ்வீட்” என்று உச்சி முகர்வீர்கள் நீங்கள். உலகியலின் அடிப்படையே இந்த உணர்வு வேறுபாடுகள்தான். அது இயல்புதான். தவறேதுமில்லை.
ஆனால், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு இது போன்ற காரியங்கள் போகும்போது, குடிப்பழக்கத்தைப் போலவே தானும் கெட்டு தம் குடும்பமும் பாதிக்கும் சூழலை இப்போதெல்லாம் நிறைய பார்க்கிறோம்.
அந்தப் பெண்மணி விஷம் குடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது கூட நமக்குத் தோன்றும். இவர் தெரிந்துதான் குடிக்கிறாரா... இல்லை விளைவுகளைப் பற்றிக்கூடப் புரியாமல் தன் கோபத்தைப் பதிவு செய்ய வேண்டும், அதை அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் (impulsivity) மட்டும்தான் பிரதானமாக இருந்ததா?
நடைமுறை நிஜங்களைக் கடந்த ஒரு நிழல் வாழ்க்கைதான் நமக்குப் பிரதானமாய்ப் போய்விட்டதா? குழந்தைகளின் வாழ்க்கை என்ன ஆகும் என்ற சிந்தனை கூட அவருக்கு இல்லாமல் போகும் அளவுக்கு என்ன கோபம் அது?
டிக்டாக் செயலியைப் பயன்படுத்தியது அதிகம் என்பது புரிகிறது. அதற்காக அவர் கணவன் மற்றும் உறவினரின் கண்டிப்புக்குக்கூட ஆளாகி இருக்கலாம். அதற்காக விஷம் அருந்தும் முடிவுக்கு வருவதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ஒரு மிரட்டல் விட்டுப் பார்க்கலாமே என்பதற்காகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள் சிலர். சில பல ஆளுமைக் கோளாறுகளில் (personality disorders) இது போன்ற நடத்தையை நாம் காணலாம்.
ஆனால், இங்கே தன் அன்றாடக் கடமைகள் கூட மறக்கும் அளவிற்கு நம்மை இது போன்ற செயலிகள் இழுத்துச் செல்கின்றன என்பதுதான் கவலை தரும் விஷயம். இணையம் என்னும் பெருங்கடலுக்குள் கைப்பேசி வழி யாக விழுந்து விட்ட இவரைப்போன்ற சிலருக்கு ‘மரணம் வாழ்வின் முடிவு’ என்று உணரக்கூட முடியாமல் நிஜ வாழ்வுடனான தொடர்பறுந்து போய் ஒரு சின்னத்திரையின் முன்பு எல்லாமே முடிந்து போய் விடுகிறது.
நம் திறமையைக் காட்டி வெளியுலகிற்கு நம்மை அறிவிக்கும் ஒரு தளமாக இருக்க வேண்டிய இது போன்ற செயலிகள் தற்போது தடம் மாறிப் பயணித்துக்கொண்டிருப்பது எல்லோருக்குமே புரியும். அதிலும் டிக்டாக் விபரீதங்கள் மரணத்தில் கொண்டுபோய் விடுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
துப்பாக்கியை நண்பரின் முகத்துக்கு நேரே நீட்டி முழக்கி வசனம் பேசி வீடியோ எடுக்கிறார் அவரது நண்பர். துப்பாக்கி வெடிக்கிறது. நண்பர் உயிர் போகிறது. என்ன இது?
விளையாட்டுக்காக கத்தியைக் கழுத்தில் வைத்துக்கொண்டு வீடியோ எடுக்க முயல்கிறார் ஒருவர். கத்தி உண்மையிலேயே கழுத்தைக் கீறி விடுகிறது.
டிக்டாக்கில் அளவின்றியும், ஆபாசமாகவும் வீடியோ பதிவேற்றுகிறார் என்று சொல்லி மனைவியைக் கொலை செய்து விடுகிறார் ஒரு கணவன்.
சாதிவேற்றுமையை மையப்படுத்தி ஒரு இளைஞர் வீராவேசமாகப் பேசியதை டிக்டாக்கில் பதிவேற்றுகிறார் அவர் நண்பர். விஷயம் தீவிரமடைந்து இரு நண்பர்களையும் போலீஸ் தேடுகிறது. கடுப்பாகிப் போன சம்பந்தப்பட்ட நபர் வீடியோவை வெளியிட்டதற்காகத் தன் நண்பரைக் கொலை செய்து விடுகிறார்.
ஒரே மோட்டார்சைக்கிளில் மூன்று மாணவர்கள் முழு வேகமாகப் போவதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டே வர... ‘சடக்’ கென்று ஒரு சத்தம்.மோட்டார்சைக்கிள் ஒரு பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொள்கிறது. நின்றுபோன இளைஞரின் இதயத்துடிப்போடு செல்போன் பதிவும் நின்று விடுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இன்னும் பரிதாபம். ஒரு டிராக்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் தாவி ஏற முயல்கிறார் ஒருவர். தவறிப்போய் கீழே விழ, டிராக்டர் அவர் மேலே ஏறி இறங்கி மரணிக்கிறார் அந்நபர். டிக்டாக்கில் தன் சாகசத்தை வெளியிட வீடியோ எடுத்தபோது உயிரை விட்டிருக்கிறார் இவர்.
கடன் தொல்லை தாங்க முடியாமல் தன் மனைவியுடன் பேசி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார் இன்னொருவர்.
டிக்டாக் செயலி ஆகட்டும், முகநூல் வாட்ஸ் - அப் போன்ற செயலிகளாகட்டும் தகவல் தெரிவிப்பதற்கான ஒரு வழியாக அவற்றைப் பயன்படுத்துவது ஏற்புடையதே. ஆனால், அவற்றிற்கு முழுவதும் அடிமை ஆகி முழுநேரமும் அதே கதியாய்க் கிடந்து தானும் கெட்டு தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சிரமம் கொடுப்பவர்கள்தான் இப்போது நம் கவலையே.
இதுபோன்ற செயலிகள் வேண்டும் என்று சிலர்வாதாடினால் இவை வேண்டாம் என்று பலர் வாதாடுகின்றனர். முடிவுறா எத்தனையோ விவாதங்களுள் ஒன்றாக மாறி விடுகின்றன இதுபோன்ற வாதங்களும்.
பதின்ம வயதினரும், முப்பத்தைந்து வயதுக்குள் உள்ளவர்களும்தான் ‘டிக்டாக்’ செயலியை நிறைய பயன்படுத்துகிறார்கள். இதில் படிப்பு முதலான விஷயங்கள் கெட்டுப்போவது மட்டுமின்றி இணையவழி பாலியல் தொந்தரவுகளுக்கும் நிறைய பெண்கள் ஆளாகின்றனர்.
அதீதமாகத் தங்களை மேக்-அப் செய்து கொள்வதிலும், திருப்தி வரும் வரை வீடியோக்களைப் பதிவேற்றிக்கொண்டே இருப்பதிலும் கணிசமான நேரத்தைச் செலவிடுகின்றனர் பலர். டிக்டாக்கில் வீடியோ பதிவிடும்போது தம்மை தம் ஆதர்ச நடிகராகவும், pub g போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது தம்மை போர்வீரர்களாகவும் நினைத்துக்கொள்கிறார்கள் பலர்.
போதுமான லைக்குகள் மற்றும் பிற அங்கீகாரங்களைப் பெறத் தவறும்போது மனச்சோர்வு, மனஅழுத்தம்போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். தங்கள் படங்களை வெளியிடுவதன் மூலம் பாலியல் சம்பந்தமான போலிப்படங்களால் பாதிக்கப்படுவதும் பொது வெளியில் கிண்டல், கேலி, வசவுக்கு (cyberbullying) ஆளாவதால்தற்கொலை முடிவுக்கும் போகின்றனர் பலர்.
செயலியே வேண்டாம் என்று சொல்வதை விட உங்கள் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்பவர்களும் உண்டு. நீங்கள் ஏன் அப்படிப்பட்ட வீடியோக்களாகத் தேடிப் போகிறீர்கள்? நல்ல நாகரிகமான ‘பெர்ஃபார்மன்ஸ்’ மூலமாக டிக்டாக்கில் ஓரிரவில் உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லாம் உண்டு. முப்பது செகண்டுகளுக்குள் உங்கள் திறமையைக் காட்டி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் இது போன்ற செயலிகளைத் தடை செய்ய நினைப்பது முட்டாள்தனம். ‘ஆடத்தெரியாத நாட்டியக்காரி அம்பலம் கோணல் என்றாளாம்’ என்று சொல்வார்கள். அப்படி இருக்கிறது இந்தக் கதை என்கின்றனர் வேறு சிலர்.
மீண்டும் சொல்கிறோம். மனித மனதுக்கே உரிய இயல்பான விருப்பங்களும் அபிலாஷைகளும் தற்போதைய இணையமிகு உலகில் வேறு மாதிரியாக வெளிப்படுகின்றன. ஏற்கெனவே உளவியல் ரீதியாக ஆளுமைக் கோளாறு, மனச்சோர்வு முதலான பாதிப்புகள், மது முதலான போதைப்பழக்கங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இணையத்தில் புழங்கும்போது தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. நாம் எதற்கு அடிமையாவோம் என்று நமக்கே தெரியாது. ஆனால், அதை நாம் புரிந்து கொள்ள முயலத்தான் வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சிக்கல்களிலிருந்து சற்றேனும் தப்பிக்க வழி கிடைக்கும்.
(இணைவோம்)