கௌதமும் நந்தினியும் சென்ற வேன் பள்ளத்தாக்கில் விழுந்ததைப் பார்த்துவிட்டு, பின்னால் அருண் வந்த வேனில் இருந்தவர்கள் அலறினர். டிரைவர் வேகமாக பிரேக்கைப் போட்டார். வேன் நிற்பதற்குள் அருண் கதவைத் திறந்துகொண்டு, பதற்றத்துடன் கீழே குதித்தான்.
அருணும் மற்றவர்களும் பீதியுடன் அலறியபடி ஓடினர். பள்ளத்தாக்கைப் பார்த்த அருண், “அய்யோ…” என்று கத்த… அனைவரும் கீழே பார்த்தனர். அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கும் புதர்ச்செடிகளுக்கும் நடுவே கிடுகிடுவென்று ஆழமாக இறங்கிய பள்ளத்துக்கு நடுவே, சிதைந்த நிலையில் வேன் விழுந்துகிடப்பது தெரிந்தது.
பள்ளத்தாக்கில் கிடந்த வேனிலிருந்து ஓலக்குரல்கள் மெலிதாகக் கேட்டன. அழுகையுடன் ஒலித்த ஒரு பெண்ணின் குரல் அலறலாகக் கேட்டது. “இது… நந்தினிடா…” என்று கத்திய அருணும் இன்னும் இரண்டு பேரும், பாதையே இல்லாத ஆபத்தான அந்த மலைச்சரிவில் இறங்கப் பார்க்க… மற்றவர்கள் அவர்களைத் தடுத்தனர். “விடுங்கடா… அது நந்தினியோட குரல்டா” என்ற அருணின் குரல் அழுகையாக மாற, மஹிமா அழுதபடி அருணின் தோளில் சாய்ந்தாள். பெண்கள் சத்தமாகக் குரல் எழுப்பி அழ ஆரம்பித்தனர். அருண் உடைந்துகிடந்த கம்பித் தடுப்பில் சாய்ந்தபடி தலையில் அடித்துக்கொண்டு அழ… ,“அழாத அருண். யாருக்கும் ஒண்ணும் ஆயிருக்காது” என்ற மஹிமா சட்டென்று குரல் உடைந்து மேலும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
டிரைவர் ஓரமாகச் சென்று மொபைலில் யாருக்கோ தகவல் கொடுத்தார். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, டூரிஸ்ட் வேன்…என்று அனைத்து வாகனங்களும் ஓரம்கட்டி வண்டிகளை நிறுத்தி வந்து விசாரிக்க…பத்தே நிமிடத்தில் அந்த இடம் ஜேஜே என்று ஆகிவிட்டது. அனைவரும் பள்ளத்தாக்கில் எட்டிப்பார்த்துப் பேசிக்கொண்டனர். டூரிஸ்ட் வேனில் வந்திருந்த கல்லூரி மாணவர்கள், வேகமாக மொபைலில் போட்டோ எடுத்தனர். சிலர் கம்பித்தடுப்பு அருகில் நின்றபடி செல்ஃபி எடுத்து அவசர அவசரமாக ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாவிலும் ஏற்றிவிட்டுப் பிறகுதான், “என்ன? ஏது?” என்று விசாரித்தனர்.
அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த வனத் துறை ஜீப் நிற்க… ஜீப்பைப் பார்த்துவிட்டு அருணும், மற்ற பயிற்சியாளர்களும், “சார்…” என்று கத்தியபடி ஜீப்பை நோக்கி ஓடினர். ஜீப்பிலிருந்து காக்கிச் சீருடை அணிந்த ரேஞ்சரும் ஃபாரஸ்ட்டரும் இறங்கினர். அனைவரும், “சார்… சார்” என்று கத்த… ரேஞ்சர், “என்னாச்சு? யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்க” என்றார். அருண் குரல் தொண்டையை அடைக்க, “எங்களோட வந்த வேன் கீழ விழுந்துடுச்சு சார்…” என்று கூற… ரேஞ்சர் தலையில் கையை வைத்துக்கொண்டு பள்ளத்தாக்கை எட்டிப் பார்த்தார்.
“வேன்ல எத்தனை பேரு?” என்றார்.
“டிரைவரோட சேர்த்து பத்தொம்போது பேரு சார்” என்று மஹிமா கூற…ரேஞ்சர் ஃபாரஸ்ட்டரைப் பார்த்து வரிசையாக ஆணைகள் பிறப்பித்தார்.
“முதல்ல கல்லட்டி செக்போஸ்ட்டுக்கு போன் போட்டு, பிஎஸ்ஜி ஆம்புலன்ஸ வரச்சொல்லு. அப்புறம் ஃபயர் சர்வீஸுக்குச் சொல்லிட்டு, லோக்கல் போலீஸுக்கும் சொல்லிடு. நான் கல்லட்டி ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்றேன்” என்று மொபைலை எடுத்தார்.
இரண்டு மணி நேரம் கழித்து அந்த இடமே முற்றிலுமாக மாறியிருந்தது. அரசு இயந்திரம் எழுந்து நின்றுவிட்டால், யானை எழுந்ததுபோல் என்று சொல்வார்கள். கலெக்டர், எஸ்பி, டிஎஃப்ஓ… என்று அடுத்தடுத்து அங்கு வந்து சேர்ந்தனர். அருகிலிருந்த கிராமங்களிலிருந்து இளைஞர்கள் வரிசையாக பைக்குகளில் வர…திரண்டிருந்த ஜனங்களைப் போலீஸார் லத்தியால் தள்ளி ஓரமாக நிறுத்தினர். சாலையில் நின்ற கார்களை, பேருந்துகளை நகர்த்தச் சொல்லி மைக்கில் அறிவித்தனர். மீட்புப் பணியாளர்கள் மலைச்சரிவிலிருந்த மரம், செடி, கொடிகளை வெட்டி, பாதை உருவாக்க ஆரம்பித்தனர்.
தகவல் தெரிந்து, பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தை மறைத்துக்கொண்டு செய்தி சேனல்காரர்கள் குவிந்துவிட்டனர். அருணையும் மற்றவர்களையும் வளைத்து வளைத்து வீடியோ எடுத்தனர். அழுபவர்களுக்கு க்ளோஸ்அப் ஷாட் வைத்தனர். டிரைவரை பேட்டி எடுத்தனர். ஒரு நிருபர், “கடந்த எட்டு மாதங்களுக்கு முன்புதான், இதே இடத்தில் நடந்த கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் மரணமடைந்தனர். தற்போது ஹைக்ரோ இன்ஃபோடெக் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 18 பயிற்சியாளர்கள் மசினகுடிக்குச் சுற்றுலா செல்வதற்காக வந்தபோது…” என்று தமிழக இல்லங்களில் ‘லைவ்’வாகப் பரபரப்பை ஏற்றிக்கொண்டிருந்தார்.
பாதையை ஏற்படுத்திக்கொண்டு மீட்புப் படையினர் இறங்கியபிறகு, காவல் துறையினர் அருணை மட்டும் தங்களோடு அழைத்துக்கொண்டு இறங்கினர். வானம் இருட்டிக்கொண்டு, எந்நேரமும் மழை பெய்யலாம் போல இருந்தது. சரிவில் கஷ்டப்பட்டு இறங்கி வேனை நெருங்க… அருணுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வர…கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினான். வேன் முற்றிலும் தலைகீழாக விழுந்து, டயர்கள் மேலே இருந்தன. வேன் மோதி விழுந்த மரக்கிளைகள், வேனின் அனைத்துப் பக்கங்களிலும் கிடந்தன. வேனின் கண்ணாடிகள் சில்லுசில்லாக உடைந்திருந்தன. மீட்புக் குழுவினர் வேனைச் சுற்றியிருந்த மரம் மற்றும் புதர்ச்செடிகளை அகற்றத் தொடங்கினர்.
வேனுக்குள்ளிருந்து “ஹெல்ப்… ஹெல்ப்…’ என்று சத்தம் கேட்க… அருணின் அடிவயிறு சுருண்டது. போலீஸ் மைக்கில், “வேன்ல இருக்கிறவங்கள்லாம் பயப்படாதீங்க. ரெஸ்க்யூ டீம் வந்துட்டோம்” என்றவுடன் வேனிலிருந்து அனைவரும் “சார்…சார்…” என்று அவலக்குரல் எழுப்பினர். அப்போது படபடவென்று மழை பெய்ய ஆரம்பிக்க… ஒரு போலீஸ்காரர் வானத்தைப் பார்த்துக் கெட்ட வார்த்தையால் திட்டினார். இரண்டே நிமிடங்களில் மழை அவர்களைத் தொப்பலாக நனைத்துவிட்டது.
முகத்தில் வழிந்த மழைநீரைத் துடைத்தபடி, அருண் உடைந்திருந்த வேன் ஜன்னல் வழியாக யாராவது தெரிகிறார்களா என்று பார்த்தான். மழையிருட்டில் அரைகுறையாகச் சிலருடைய கை கால்கள் மட்டும் தெரிந்தன. கதவு ஜாம் ஆகிவிட்டதால் திறக்க முடியவில்லை. உடனே, கடப்பாரையால் வேன் கதவை உடைக்க ஆரம்பித்தனர். அப்போது மழை இன்னும் ஆவேசத்துடன் பெய்ய… அதைப் பொருட்படுத்தாமல் வேலையைத் தொடர்ந்தனர். வேனுக்குள்ளிருந்து சிலர் அழும் சத்தம் கேட்டது. “சார்…சார்” என்று ஆளுக்காள் கையை நீட்டினர்.
வேன் கதவு திறக்கப்பட… உள்ளே இரண்டு காவலர்கள் நுழைந்தனர். முதலில் வெளியே தூக்கிவிடப்பட்ட இளைஞன் வினோத். அவன் முகத்தில் கண்ணாடித் துண்டுகள் கீறி ரத்தம் வழிய… வலது கை உடைந்து தொங்க…வலியில் ஈனஸ்வரத்தில் அனத்திக்கொண்டிருந்தான். வினோத்தைப் பார்த்தவுடன் அருண், “வினோத்…” என்று அழுகையுடன் அலறினான். அருகிலிருந்த டாக்டர், “தம்பி…. அவங்களே பேனிக்ல இருப்பாங்க. நீங்க எமோஷனாகி, இன்னும் அவங்களுக்கு திகில் ஏத்தாதீங்க” என்று கூற…அருண் அழுகையை அடக்கினான்.
வினோத் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்ட கணத்தில், அருண் பாய்ந்து சென்று அவன் கையைப் பிடித்துக்
கொண்டான். வினோத்தின் முகத்தில் ரத்தத்தோடு சேர்ந்து வழிந்த மழைநீரைத் துடைத்துவிட்டான். வினோத் பேச முடியாமல் வேனின் உள்ளே கையைக் காட்டினான். டாக்டர் வினோத்தின் நாடித் துடிப்பு, இதயத் துடிப்பைப் பார்த்துவிட்டு, “நோ ப்ராப்ளம்….. இஞ்சுரீஸ்தான்” என்று அனுப்பினார். தொடர்ந்து வரிசையாக வர்ஷா, மனோஜ், சந்திரகுமார்… என்று அனைவரையும் காயங்களுடன் வெளியே தூக்க…அருணின் மனம் சற்று அமைதியானது. யாருடைய உயிருக்கும் பிரச்சினை இல்லை. காயங்கள்தான்.
அப்போது காவலர்கள் வெளியே தூக்கிய கிரண் ராவின் உடல், எந்த அசைவுமின்றி இருந்ததைப் பார்த்தவுடன் அருணுக்கு பகீரென்றது. கிரண் ராவின் நாடித் துடிப்பையும் இதயத் துடிப்பையும் பார்த்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். அருணைப் பார்த்து, “ஸாரி…” என்றபடி தன் முகத்தில் வழிந்த மழைநீரைத் துடைத்துக்கொண்டார். அருண், “கிரண்…” என்று கதறியபடி, மழையில் நனைந்துகொண்டிருந்த கிரணின் உடல் மீது பாய்ந்தான். காவலர்கள் அவனை விலக்கிவிட்டு ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு மேலே ஏறினர். அருண் அப்படியே சேற்றில் அமர்ந்து, தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
கிரணைத் தொடர்ந்து வெளியே தூக்கப்பட்ட ஸ்வேதா, வினோதினி, தினேஷ், ஜான்... என்று அனைவரும் உயிரற்ற உடலாகவே வெளியே வர... அடுத்தடுத்த துக்கங்களைத் தாங்க முடியாமல், அருண் அழும் சக்தியையே இழந்துவிட்டான். அடுத்தடுத்து சடலங்களாகவே வந்ததால், கௌதமும் நந்தினியும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கொஞ்சம், கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தான். டிரைவரும் உயிரின்றி பிணமாக எடுக்கப்பட…அருண் முற்றிலும் நம்பிக்கையை இழந்துவிட்டான்.
பதினான்காவது மற்றும் பதினைந்தாவது ஆட்களாக கௌதமும் நந்தினியும் ஒரே சமயத்தில் வெளியே தூக்கப்பட்டனர். அருண் பதற்றத்துடன் அருகில் சென்று பார்த்தான். சடசடவென்று மழைத் துளிகள் இருவர் மீதும் அதிவேகமாக விழுந்தபோதும், ரத்தம் வழிந்தோடிய இருவரின் உடலிலும் எந்த அசைவுமில்லை.
(தொடரும்)