பாப்லோ தி பாஸ் 30: காட்டுக்குள் 30 நாட்கள்..!


 ரேடியோவில் கரகர குரல் பெண் செய்தி வாசித்தாள்.

“லா கதீட்ரல் சிறையிலிருந்து தப்ப முயன்ற பாப்லோ கைது செய்யப்பட்டான்...”

அந்தச் செய்தியைக் கேட்டு சிரித்துவிட்டு, தன் கோப்பையிலிருந்த காபியை அருந்தினான் பாப்லோ. அவன் இருந்தது ஒரு காட்டுக்குள்..!

அவர்கள் அங்கிருந்து தப்பித்து முழுமையாக 48 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் ஊடகங்களிலும், அரசு மட்டத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான வதந்திகள் பரவின.

சிலர், பாப்லோ கைது செய்யப்பட்டான் என்றார்கள். சிலர், தானாகவே முன் வந்து பாப்லோ சரணடைந்தான் என்றார்கள். சிலர் அவன் தப்பிய போது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தான் என்றார்கள். அந்தச் சிலரில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் போட்டியாளர்களும் பொதுமக்களும் அடங்குவர். ஆனால் அந்த வதந்திகளுக்கு எல்லாம் ஆதாரங்கள் கேட்ட போது, பலரும் இன்னொன்றைச் சொன்னார்கள்: ‘பாப்லோ தப்பியிருக்கவும் வாய்ப்புண்டு..!’.

அப்படி அவர்கள் சொன்னபோது பாப்லோவின் மீது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டத்தில் பயமும், போட்டியாளர்கள் மத்தியில் விரோதமும், பொதுமக்களிடையே மரியாதையும் பெருகியது.

பாப்லோவும் அவனது அண்ணன் ராபர்ட்டோவும் அவர்களது சிகாரியோக்களும் அந்த இரவில் தப்பித்தது பெரிய விஷயம்தான். ஏனென்றால், மலை உச்சியிலிருந்த கதீட்ரல் சிறையிலிருந்தும் போலீஸாரிடமிருந்தும் தப்பிக்க வேண்டுமென்றால், அவர்கள் தங்களின் ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். காரணம், கரணம் தப்பினால் மரணம். ஆம்… அவர்கள் இறங்கி நடந்த பாதை, செங்குத்தான குன்று. அடுத்து நீங்கள் வைக்கும் ஒரு அடி, உங்களை வாழவைக்கவும் செய்யலாம், வாரிவிடவும் செய்யலாம் என்கிற ரீதியில் அமைந்தது அவர்களின் பயணம்.

சில இடங்களில் உயரமான மற்றும் திடகாத்திரமான சிகாரியோக்கள் தங்களின் தோள்கள் மீது இன்னொருவரை நிற்கவைத்து, ஏணிப்படியாக இருந்து மற்றவர்கள் இறங்குவதற்கு உதவி செய்தார்கள். அடர்ந்த காட்டுக்குள் யாரும் வழி தப்பிவிடக் கூடாது என்பதால், எல்லோரும் மனிதச் சங்கிலியாக ஒவ்வொருவரின் கைகளை மற்றவர்கள் பிடித்துக்கொண்டு நடந்தார்கள். இருட்டு, பனி மூட்டம் என எல்லா தடைகளையும் கடந்து சென்றுகொண்டேயிருந்தார்கள். பாதை நீண்டு கொண்டேயிருந்தது.

ஒன்றரை நாள் நடைக்குப் பிறகு, எல் சாலடோ எனும் கிராமத்துக்கு வந்தார்கள். வியர்வை வழிந்து, தூசு படிந்திருந்த அவர்களின் முகங்களை மக்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிலும் பாப்லோவின் ஒளிப்படம், பொதுவெளியில் வந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. தவிர, அவனது உடல் எடையும் கூடிவிட்டிருந்தது. எனவே, ‘நான்தான் பாப்லோ’ என்று அந்த ஊர் காவல் நிலையத்தில் போய் பாப்லோ சொன்னாலே ஒழிய, போலீஸாரால் கூட அவனை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுவிட முடியாதிருந்தது.

அங்கே இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டு தங்களின் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சில இடங்களில் அவனை அடையாளம் கண்டுகொண்ட ஒன்றிரண்டு பேர், அவனுக்கும் அவனது சகாக்களுக்கும் உணவும் இடமும் கொடுத்தார்கள். அடுத்த 30 நாட்களுக்குப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

***

“செம்மயா வாழ்ந்திருக்கான்யா...”

கொஞ்சம் ஆச்சரியம் கலந்த நக்கலுடன் சொன்னான் ஜேவியர் பீனா. ஐந்தடி உயரம். சதுர முகம். ட்ரிம் செய்யப்பட்ட மீசை. கட்டுமஸ்தான உடல். அரைக் கை நீல நிற சட்டை,  பழுப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் உடலைக் கவ்வியிருந்தது. இடுப்பின் இடதுபுறத்தில் துப்பாக்கி செருகப்பட்டிருந்தது.

“நிஜமா… இது நிச்சயம் சிறை இல்லை. அரண் மனை மாதிரி. இல்ல… அரண்மனையேதான்…!”

ஸ்டீவ் மர்ஃபி பதிலளித்தான். வெள்ளை நிறம். செவ்வக முகம். ஒற்றை நாடி உடல். சிவப்பு நிற டீ-சர்ட்டும், நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவனது வலதுபுற இடுப்பில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் இருவருமே அமெரிக்காவின் டி.இ.ஏ. ஏஜென்ட்டுகள். முதன்முதலில் பாப்லோவின் ஒளிப்படம் வெளியான பத்திரிகையின் ஆர்க்கைவை எடுத்தது, பாப்லோ சிறையிலிருந்தபோது அவனைப் படமெடுத்த போட்டோகிராபரிடமிருந்து அந்த நெகட்டிவ்களை வாங்கியது முதற்கொண்டு, பாப்லோவும் மெக்சிக்கனும் நிகராகுவாவிலிருந்து போதைப் பொருள் கடத்துவதை பேரி சீலைவிட்டுப் படமெடுக்க வைத்தது, லா கதீட்ரலுக்குள் லாரியின் மூலம் கொண்டு வரப்படும் பாலியல் தொழிலாளர்கள், பணம், சரக்கு போன்றவற்றை அந்த லாரியின் ஓட்டுநரை விட்டே படமெடுக்க வைத்தது வரை, பாப்லோவை இப்படி உயிருக்காக ஓடவிட்டதில் இந்த இரண்டு ஏஜென்ட்டுகளின் பங்களிப்பு நிறைய..!

பேருக்குத்தான் அவர்கள் கொலம்பிய அரசுக்கு உதவியாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் கொலம்பியாவில், கொலம்பிய அதிகாரிகளுக்குத் தெரியாமல் தாங்களாகவே சுதந்திரமாக பல தில்லுமுல்லுகளைச் செய்து, பெரும்பாலான நேரம் கொலம்பிய சட்டத்துக்குப் புறம்பாக விதிகளை மீறி, பல அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு, பல உண்மைகளை அவர்கள் வெளிக்கொணர்ந்தார்கள்.

பாப்லோ தப்பித்த அடுத்த நாளில், அவர்கள் இருவரும் கதீட்ரல் சிறையில் ஆய்வு மேற்கொண்டி ருந்தார்கள். அங்கிருந்த வசதிகளை எல்லாம் பார்த்து விட்டுத்தான் ஜேவியர் பீனா அப்படிச் சொன்னான்.

அடுத்து அவர்கள் பாப்லோவின் அறையை ஆராய்ந்தார்கள். அந்த அறையின் ஒரு பகுதியைத் தன் அலுவலக அறையாக வைத்திருந்தான் பாப்லோ. அங்கு அவனைப் பற்றி இதுகாறும் வெளியான செய்திகள், நாளிதழ்களிலிருந்து வெட்டி, கத்தரித்து தேதிவாரியாக ஒட்டப்பட்டிருந்தன. அவனுடைய ரசிகர்களிடமிருந்து வந்த கடிதங்கள் ஒரு லாக்கரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சுவற்றில் லத்தீன் அமெரிக்கப் போராளி சே குவேராவின் ஆளுயர படம் மாட்டப்பட்டிருந்தது. அலமாரிகளில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் ஆல்பங்களும், கிரஹாம் க்ரீன், கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ், நதீன் கார்டிமெர், ஸ்டீஃபன் ஸ்வீக் போன்றோரின் புத்தகங்கள் ஆகியவை இருந்தன. இன்னொரு அலமாரியில் பாப்லோ விரும்பி அணியும் ’நைக்கி’ ஷூக்களும், நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அந்த அறையில் ஜேவியர் பீனாவும், ஸ்டீவ் மர்ஃபியும் பல்வேறு விதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அந்தச் சிறையில் தாங்கள் நடத்திய ஆய்வு, அந்த அறையில் தாங்கள் சேகரித்த பொருட்கள் ஆகியவற்றை வைத்து பாப்லோவைப் பற்றிய ஒரு ‘பெர்சனாலிட்டி அசெஸ் மென்ட்’ தயார் செய்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பினார்கள். தன் எதிரிகளை பூண்டோடு அழிப்பதற்கு முன் இப்படியான ‘அசெஸ்மென்ட்’ செய்வது அமெரிக்காவின் வழக்கம்..!

எப்படித் தப்பித்தான் பாப்லோ..?

அத்தனை பாதுகாப்புக்கு மத்தியில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் பாப்லோவால் தப்பிக்க முடிந்தது, கொலம்பிய அரசுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கும் அதிர்ச்சியைத் தந்தது. இதனால் கொலம்பிய அரசின் மீது அமெரிக்காவின் நம்பிக்கை குறைந்தது. கொலம்பியாவின் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றின் மீது அந்த நாட்டு மக்களுக்கிருந்த மரியாதையும் சரிவடைந்தது. அப்போது அமெரிக்காவில் பிரபலமான ஜோக் ஒன்று பரவலானது. அது:

“கதீட்ரல் சிறையிலிருந்து பாப்லோ தப்புவதற்கு எத்தனை பேரின் உதவி தேவைப்பட்டது..?”

“400 பேர்..!”

“அப்படியா… எப்படி..?”

“ஒருத்தர் ஜெயில் கதவைத் திறந்துவிட… மிச்சம் 399 பேர், பாப்லோ தப்பிச் செல்வதை வேடிக்கை பார்க்க..!”

(திகில் நீளும்)

x