கா.சு.வேலாயுதன்
கீரியை நேரில் கண்டிருக்கிறீர்களா? திடீரெனச் சாலையின் குறுக்கே ஓடும் கீரிப்பிள்ளைகளை சிலர் பார்த்திருக்கலாம். நொடியில் ஓடிப் புதர்களில் மறைந்துவிடும். வித்தைக்காரர்களும் சட்டவிரோத வியாபாரிகளும் கொண்டுவரும் கீரிகளைத்தான் அதிகம் பார்த்திருப்போம். அதுவும் பரிதாபமான நிலையில்! அப்படிப்பட்ட கீரியை அட்டகாசமான ஆக்ஷன் போஸ்களில் படம்பிடித்து அசத்தியிருக்கிறார் வடவள்ளி சுப்பிரமணியன். பறவைகளையும் கானுயிர்களையும் படம் பிடித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுவரும் பறவைக் காதலர் இவர்.
பழுப்பும் கறுப்புமான முடிக் கற்றைகள், செந்நிறக் கண்களுடன் மூக்கை விடைத்து, கோரைப் பற்களைக் காட்டிச் சீறும் சீற்றத்தில் சிறுத்தையை மிஞ்சுகிறது இந்தக் கீரி. அதன் பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுப்பிரமணியனுக்கு ஏக வரவேற்பு. இப்படியெல்லாம் கீரியை யாருமே பார்த்திருக்க முடியாது என்று பலரும் வியக்கிறார்கள்.
அவரைச் சந்தித்தபோது நானும் அதைத்தான் கேட்டேன். “எப்படி இந்த மாதிரி கீரியை போட்டோ எடுத்தீங்க?”