கே.கே.மகேஷ்
மத்திய அமைச்சரவையில் அதிமுக புறக்கணிப்பட்டது தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள் இரட்டைத் தலைமை தொடர்பான சர்ச்சையைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் அதிமுக எம்எல்ஏ-வான மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா. இந்தத் தீ தற்காலிகமாக அணைக்கப்பட்டாலும், செல்லப்பாவின் கருத்தையொட்டி அதிமுகவுக்குள் எழும்பிய அலை இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கிறது.
செல்லப்பாவின் வழியில் குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான ராமச்சந்திரனும் குமுறியதால் மிரண்டு போனது அதிமுக தலைமை. இதையடுத்து உடனடியாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி., எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்னதாக இரட்டைத் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் அதைப்பற்றி மூச்சுவிடவில்லை. பேருக்கு நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள், “கட்சி விவகாரங்கள் குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது” என்று கட்சியினருக்கு கடிவாளம் போட்டுவிட்டு கூட்டத்தைக் கலைத்தார்கள்.
கூட்டம் முடிந்து வெளியில் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிரித்துக் கொண்டே வந்தோம்... சிரித்துக் கொண்டே செல்கிறோம்” என்று செய்தியாளர்களைக் கலாய்த்தார். இதை வைத்துப் பார்த்தால் சீரியஸான விஷயங்கள் எதுவும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பதும், பிரச்சினையைக் கிளப்பத் தயாராய் இருந்தவர்களை முன்கூட்டியே அழைத்துப் பேசி கூல் படுத்திவிட்டார்கள் என்பதையும் உணர முடிகிறது.