கா.சு.வேலாயுதன்
கோவை கொடீசியா-பபாசி புத்தகத் திருவிழாவில் தொழிலாளர்களுக்கான கவிதைப் போட்டி. ‘தலம்’ எனும் தலைப்பில் பலர் கவிதை வாசிக்கிறார்கள். ஒடிசலான தேகம் கொண்ட அந்த கிராமத்து இளைஞரும் மேடை ஏறுகிறார். அடுத்த சில நொடிகளில் கணீர் குரலில் அவர் வாசிக்கும் கவிதைக்கு மொத்த அரங்கமும் கைதட்டுகிறது. முதல் பரிசும் அவருக்குத்தான்!
அடுத்தது, திருப்பூரில் ஒரு கவிதைப் பயிற்சிப் பட்டறை. கண்ணீர்த் ததும்ப அந்த இளைஞர் வாசிக்கும் கவிதையைக் கேட்டு நெகிழ்ந்து நிற்கிறது அரங்கம். இதயம் திறந்து பேசும் மொழியில் எளிய சொற்களில், வாழ்வின் நிதர்சனம் பேசும் அந்தக் கவிஞரின் பெயர் கதிர்வேலு. விவசாயிகள், தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்க்கையைத் தனது கவிதைகளில் பேசும் கதிர்வேலு, அடிப்படையில் ஒரு கட்டுமானத் தொழிலாளர். கவிதை எழுத மட்டுமல்ல... இவருக்கு குறும்படம் எடுக்கவும் தெரியும்!
“காங்கயம் பகுதியில கட்டிட மேஸ்திரியா வேலைபார்க்குறேன் சார். என் மனைவியும் கட்டிடத் தொழிலாளிதான். அவருக்குத் தினக்கூலி 350 ரூபாய். எனக்கு மேசன்வேலைங்குறதால 800 ரூபாய் கிடைக்கும். கஷ்ட ஜீவனம்தான். கலை மேல இருக்கிற ஆர்வம்தான் கஷ்டத்தையெல்லாம் தாண்டி இயங்க வைக்குது” என்கிறார் கதிர்வேலு.