என்.சுவாமிநாதன்
தூத்துக்குடியின் புறநகர் பகுதியான தாளமுத்து நகரில் இருக்கிறது அந்த சின்னஞ்சிறு உணவகம். தகர ஷீட்களாலான அந்த உணவகத்துக்குள் நுழைந்ததுமே சட்னி, சாம்பார், குருமா மணம் சுண்டியிழுக்கிறது.
“வாங்கண்ணே… என்ன சாப்பிடுறீங்க” என்று இலையைப் போட்டு புன்னகைக்கிறார் திருநங்கை காயத்ரி. அவர் நடத்தும் இந்த உணவகத்தின் பெயர் ‘நங்கை டிபன் சென்டர்’.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் அதையும் எதிர்கொண்டு தங்கள் திறமையாலும் உழைப்பாலும் முன்னுக்கு வரும் திருநங்கைகள் பலர் இருக்கிறார்கள். பல சவால்களை உத்வேகத்துடன் கடந்து சொந்தமாக உணவகம் தொடங்கி நடத்தும் காயத்ரி, அவர்களில் ஒருவர்.