இங்கே விவேகானந்தர்கள் உருவாக்கப்படுகிறார்கள்!


கே.கே.மகேஷ்

நாங்கள் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில், வேட்டி கட்டிய இளைஞர்கள் நூற்றி சொச்சம் பேர் திடீரெனத் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பின்னாடி ஜல்லிக்கட்டு காளை எதுவும் வருகிறதோ என்று ஒரு கணம் பயந்துபோனேன். அப்படி எதுவும் இல்லை. கடைசியாக ஓடிவந்தவனை கெட்டியாகப் பிடித்து, “தம்பி ஏன் ஓடுறன்னு சொல்லிட்டு ஓடு” என்றபோது, “பெல் அடிச்சிடுச்சி சார்” என்று திமிறிக்கொண்டு ஓடினான்.

மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்தான் நான் கண்ட இந்தக் காட்சி! ஓடியவர்களின் காலை கவனித்தேன், செருப்பில்லை. வகுப்பறையில் மட்டுமல்ல, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே செருப்பணியக் கூடாதாம். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான், உணவுக்கூடத்தைப் பார்த்தேன். வேட்டி கட்டிய மாணவர்கள் அத்தனை பேரும் வரிசையாக தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து (டேபிள், சேர் கிடையாது) சோறு சாப்பிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு சமஸ்கிருதத்தில் ‘பிரம்மார்ப்பணம்’ செய்தார்கள். உணவுக்கூடத்தில் கீச் மூச் சத்தமில்லை. அப்பளத்தைக்கூட சத்தமின்றி நொறுக்கினார்கள். சோற்றைக் கவனித்தேன். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தது.

சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவவந்த ஒரு பையனிடம் பேச்சுக்கொடுத்தேன். “இது ரைஸ்மில் தீட்டுன அரிசி கிடையாதுண்ணே, கைகுத்தல் அரிசி மாதிரி லேசா உமி நீக்குன அரிசி. இதென்ன பிரமாதம், எங்களுக்கு டீ, காபி எதுவும் கெடையாது தெரியுமா? மால்ட் (சிறுதானிய மாவு) கஞ்சியைத்தான் குடுப்பாங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு கூட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது.

x