கன்று ஒண்ணு வெச்சிருக்கேன்!
விசிக எம்பி-யான ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் வாக்குக்கேட்டுச் சென்றபோது, “நமது தொகுதிக்குள் என்னால் முடிந்தவரை மரக் கன்றுளை நட்டு பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்தார். அதன் முதல்படியாக உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குள் நன்றி சொல்ல வந்த ரவிக்குமார், கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் மரக் கன்றுகளை வழங்கி கணக்கைத் தொடங்கியிருக்கிறார். “இதப்போல மற்ற வாக்குறுதிகளையும் மறக்காம நெனப்புல வெச்சிருந்தா நல்லது” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..!
கொங்கு அமைச்சர் ஒருவர், முன்பெல்லாம் தொகுதி மக்களிடமும் தம் கட்சிக்காரர்களிடமும் பாந்தமாய் பேசுவாராம். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு யாரைப் பார்த்தாலும் நெருப்பாய் தகிக்கிறாராம். “நூறு கோடிக்கு மேல வாரி இறைச்சேனே... எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு என்னைய ஏமாத்திப் போட்டீங்க” என்று வெளிப்படையாகவே வார்த்தைகளைக் கொட்டும் அவர், “போனது போச்சு... இப்ப நம்ம கட்சியில இருக்கிற இந்தப் பகுதி எம்எல்ஏ ரெண்டு பேரு 15 கோடிக்கு விலை போயிட்டதா பேச்சு வருது. அவனுகள கேட்டா, ‘இல்லவே இல்லை’ன்னு சத்தியம் பண்றானுக. எனக்கு சந்தேகமா இருக்கு. அவனுக யாரைச் சந்திச்சாங்க... என்ன பண்ணப் போறானுகன்னு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லுங்க” என்று கட்சிக்காரர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறாராம்.