இணையச் சிறையின் பணயக் கைதிகள் 16: இணையத்துக்கு ஏன் அடிமையாகிறோம்?


ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாவதாக இருந்தாலும் சரி… வேறு பழக்கங்களுக்கு அடிமையாவதாக இருந்தாலும் சரி… சில பிரத்யேகமான குணாதிசயங்கள் இருக்கின்றன.

அப்பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருத்தல்; பயன்படுத்தும் அளவும் நேரமும் அதிகரித்துக்கொண்டே இருத்தல்; எப்போது பார்த்தாலும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருத்தல்; பயன்படுத்தாமல் இருப்பதை நினைத்தாலே ஒரு வித பதற்றம் சூழ, நிலையில்லாமல் தவித்தல்; போதை சற்றுத் தெளியும்போதோ அல்லது அப்பழக்கத்தைச் செய்ய முடியாமல் போகும்போதோ withdrawal symptoms என்று சொல்லப்படுகின்ற ‘மீண்டு வரும்போது ஏற்படக்கூடிய அறிகுறிகளை’ அனுபவித்தல் என ஒரு அடிமைத்தனம் ஏற்பட்டுவிட்டதற்கான நிலையை மருத்துவம் பகுப்பாய்வு செய்கிறது.

இவற்றிற்குச் சற்றும் மாறுபாடு இல்லாமல் இருக்கின்றன இது போன்ற ‘நடத்தை அடிமைத்தனங்கள்’(behavioural addictions). ஒரு விஷயம் திரும்பத் திரும்ப செய்யப்படும்போது பழக்கமாகிறது. அப்பழக்கமே திரும்பத் திரும்ப செய்யப்படும்போது அடிமைத்தனத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

எல்லாவித அடிமைத்தனங்களுக்கும் காரணம் மூளைதான். ஒரு விஷயத்தைச் செய்யும்போது இன்ன மாதிரியான மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை மனம் அனுபவிக்கிறது. மூளை பதிவுசெய்துகொள்கிறது. அம்மகிழ்ச்சியை அனுபவிக்க, திரும்பத் திரும்ப அதைச் செய்து ஒரு கட்டத்தில் அம்மகிழ்ச்சியே முழு நேரத் தேவையாகிப்போய், ஒரு பொருளுக்கோ அல்லது பழக்கத்துக்கோ நாம் அடிமையாகிறோம்.

இணைய அடிமைத்தனமும் இப்படித்தான். இணையம் என்ற வார்த்தைக்குள் எல்லாமும் அடங்கிவிடுகிறது. ஸ்மார்ட்போன் மூலமாக, மடிக்கணினி மூலமாக என்று பல விதங்களில் இணையத்தில் உலவுகிறோம். ஃபேஸ்புக்கே கதி எனக் கிடந்தாலும் சரி, இணைய வழிச் சூதாட்டங்களில் ஆழ்ந்து, அளவில்லாத பணத்தைச் சூறை விட்டாலும் சரி, முழு நேரமும் நீலப் படங்களில் மூழ்கி, உடலாலும் உள்ளத்தாலும் நோயாளியாக மாறுவதானாலும் சரி, கற்பனைக் கதாபாத்திரங்களுடனான வீடியோ கேம்களிலேயே நாள் முழுவதும் ஆழ்ந்து, கடமை, குடும்பம் என எல்லாவற்றையும் இழந்தாலும் சரி…சூத்ரதாரி இணையம்தான். எல்லாவித சூறாவளிக்கும் ஆரம்பப் புள்ளி அதுதான்.

இதுபோன்ற காரியங்களைச் செய்யும்போது மூளையில் உள்ள ரிவார்டு சென்டரில் ‘டோப்பமைன்’ (dopamine) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். மகிழ்ச்சிக்கான ஒரு வேதிப்பொருள் அது. இணையத்தில் நமக்குக் கிடைக்கும் பலவிதமான உணர்வுகள் மகிழ்ச்சியை அளிப்பதால், அதைத் திரும்பத் திரும்ப மனம் விரும்புகிறது .ஒரு கட்டத்தில் அதே அளவு மகிழ்ச்சியைப் பெற, இன்னும் அந்த போதை கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது.

உதாரணமாக, மது அருந்தப் பழகிய ஒருவர், நாட்கள் செல்லச் செல்ல ஏன் அதிகமாகக் குடிக்கிறார்? அவருக்கு முன்பெல்லாம் ஒரு குவார்ட்டர் பாட்டில் குடித்தால் ஏற்பட்ட போதை, இப்போது இரண்டு குவார்ட்டர் பாட்டில்கள் குடித்தால்தான் ஏற்படுகிறது என்று சொல்கிறார். இதைத்தான் ‘சகித்துக்கொள்ளும் தன்மை’(tolerance) என்கிறோம். மருந்துப் பொருட்களுக்கே உண்டான பிரத்யேகக் குணம் இது. காலம் செல்லச் செல்ல முன்பு பயன்படுத்திய அளவானது, எப்போதும் கொடுக்கும் விளைவைக் கொடுக்காது. ஆகவே, சம்பந்தப்பட்ட பொருளை இன்னும் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிவரும். மது முதலான போதைப் பழக்கங்களுக்கும் சரி, இணையத்தை முன்னிட்டு நாம் புழங்கும் அனைத்துப் பயன்பாடுகளுக்கும் சரி… இது பொருந்தும்.

ஒவ்வொரு முறை இணையம் வழியாகப் பயணப்படும்போதும், பலவிதப் புதுத் தகவல்களும் அனுபவங்களும் அவற்றால் ஏற்படும் புளகாங்கிதமும் நம்மை மீண்டும் மீண்டும் அந்தப் பக்கம் வரத் தூண்டும். உதாரணத்திற்கு, சூதாட்டத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒருமுறை தோற்கிறார். மனம் சோர்ந்துவிடுகிறது.

சரி, ஒரே முறை முயற்சி செய்வோம் என்று அடுத்து எதையாவது அடகு வைத்து ஆடுகிறார். என்ன ஆச்சரியம்! விட்ட காசை மறுபடி எடுத்துவிடுகிறார். தளர்ந்த மனம் சுறுசுறுப்படைகிறது. மீண்டும் சிலிர்த்துக்கொண்டு விளையாட, துரதிருஷ்டம் வந்து எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விடுகிறது. மீண்டும் சோர்வு, மீண்டும் முயற்சி. மீண்டும் வெற்றி, மீண்டும் முயற்சி…என்று அந்தச் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். காரணம், வெற்றி பெற ஒரு வாய்ப்பும் உறுதியாக இருக்கிறது. தோல்வி அடைவதற்கான வாய்ப்பும் சர்வ நிச்சயமாகக் கலந்தே இருக்கிறது. இப்படியான பலவித சாத்தியக்கூறுகள்தான் (probability) சூதாட்டத்துக்கும் அடிப்படை; நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் அதீத இணையப் பயன்பாட்டுக்கும் அடிப்படை.

ஒரு தகவல் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு தகவல் துக்கத்தைத் தருகிறது. துக்கம் வேண்டாம் என்று இணையத்தை விட்டுப் போனவர்கள், வேறொரு சந்தர்ப்பத்தில் உள்ளே வர, ஒரு இன்ப அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். ‘ஆஹா’ என்ற துள்ளலுடன் கொஞ்ச காலம் உலா வந்து, மீண்டும் ஒரு அடி வாங்கிய பின் தம்மைச் சுருக்கிக்கொள்கிறார்கள். இப்படி இனிப்பும் கசப்புமாக அனுபவங்கள் கிடைத்தாலும், இணைய உலா என்பது பல நல்ல விஷயங்களையும் பல கெட்ட விஷயங்களையும் ஒருங்கே வைத்திருப்பதை நாம் உணர்ந்துகொள்ளவும், நமக்கு நாமே எச்சரித்துக்கொள்ளவும் வேண்டும்.

இணையப் பயன்பாடு என்பது…

கணினி, மடிக்கணினி, டாப்லெட்டுகள், ஸ்மார்ட்போன் என்று பலவிதக் கருவிகள் மூலமாக இணையம் அணுகப்பட்டாலும் சிறப்புக் கவனம் பெறுவது என்னவோ ஸ்மார்ட்போன்கள்தான். சமூக வலைதளங்களை அணுகுவதற்குப் பெரிதும் உதவுபவை இவைதான்.

ஸ்மார்ட்போனைப் பொறுத்தமட்டில் பேசுவது, இணையத்தில் தகவல்களைத் தேடுவது என்பதைத் தாண்டி ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பார்ப்பதில்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதிலும் விடுமுறை நாட்கள் என்று வந்துவிட்டால் போனிலேயே மூழ்கிப்போய் சாப்பாடு, தூக்கம் எல்லாம்கூட இரண்டாம்பட்சமாகி விடுகிறது பலருக்கு.

“எப்போதாவதுதான் மது அருந்துவேன். ஆனால், குடிக்க ஆரம்பித்தால் நாலு நாள் என்றாலும் பாட்டில் பாட்டிலாக உள்ளே போய்விடுகிறது” என்பார்கள் சிலர். அதை binge drinking என்று சொல்கிறோம். திடீரென்று அசைவம் சாப்பிட ஒரு வெறி ஏற்பட்டு, ஒரு வாரம் முழுக்க அசைவத்தையே ஒரு பிடி பிடிப்பவர்கள் உண்டு. இப்படி ஒரு வேகத்தில் ஒரு பழக்கத்தை மிதமிஞ்சிச் செய்வதற்கு bingeing என்று பெயர். சமூக வலைதளப் பயன்பாடும் இதற்கு விதிவிலக்கல்ல. பல மணி நேரம் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்-அப்புமே கதி என்று இருப்பவர்களை இப்போதெல்லாம் ஆங்காங்கு பார்க்க முடிகிறது.

அப்படி ஒன்றும் அலைபேசியே கதி என்று இருப்பவனல்ல நான் என்கிறீர்களா? அல்லது கொஞ்சம் அதிகமாகத்தான் பயன்படுத்துகிறேன்… ஆனால், அடிமைத்தனம் என்றெல்லாம் சொல்ல முடியாது என்பவரா நீங்கள்? கீழே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லிக்கொள்ளுங்கள். அத்தனை கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்பதே உங்கள் பதிலாக இருப்பின், உங்கள் சமூக வலைதளப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

1. சமூக வலைதளங்களைப் பற்றியே நிறைய நேரம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது நாம் அதில் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையோடு நேரம் கடத்துகிறீர்களா?

2. சமூக வலைதளங்களைப் பார்க்கப் பார்க்க, ‘இன்னும் இன்னும்’ என்று தொடர்ந்த உணர்வு உந்துதலில் இருக்கிறீர்களா?

3. சொந்தப் பிரச்சினைகளை மறக்க, சமூக வலைதளங்களை நாடுகிறேன் என்பவரா நீங்கள்?

4. நானும் அடிக்கடி முயற்சி செய்துதான் பார்க்கிறேன்…ம்ஹூம்… ச.வ.தளங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள முடியவில்லை என்று புலம்புபவரா?

5. சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியவில்லை என்றால், இருப்பு கொள்ளவில்லை, படபடப்பாக உணர்கிறேன் என்று சொல்பவரா நீங்கள்?

6. செய்யும் தொழிலிலோ, படிப்பிலோ எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உங்கள் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டதாக உணர்கிறீர்களா?

ஆறு கேள்விகளுக்கும் உங்கள் பதில் ‘ஆம்’ என்பதாக இருந்தால் உஷார் ஆகிக்கொள்ளுங்கள். இந்த வலைதளங்களைப் பயன்படுத்தி, மெள்ள மெள்ள அவற்றிற்கு ஒரு அடிமை போல ஆகிக்கொண்டு வருகிறீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

(இணைவோம்)

x