பிறந்தநாள் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட நந்தினியின் வாயிலிருந்து உதிரப்போகும், ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான் கௌதம். நந்தினி, “தேங்க்ஸ்” என்று கூற…பால்கனியிலிருந்து அருண், “ஹச்…” என்று தும்மினான். திரும்பி அவனை முறைத்த கௌதம், “வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா?” என்றான் நந்தினியிடம். சில வினாடிகள் யோசித்த நந்தினி, “குட்நைட்” என்று கூற… வாழ்க்கையே வெறுத்துப்போன கௌதம், “அருண்… போலாமாடா?” என்றான்.
இரண்டு நாட்கள் கழித்து ‘தமிழ் எத்னிக் டே’ வந்தது. ‘எத்னிக் டே’ என்பது, பயிற்சி காலத்தில் ஏதேனும் ஒரு நாளை, ஒரு குறிப்பிட்ட மொழிக்காரர்கள் சேர்ந்து கொண்டாடுவதாகும். அன்று அந்த மொழிக்காரர்கள் அந்த மாநிலப் பாரம்பரிய உடைகளை உடுத்திக்கொண்டு, அந்த மாநிலப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவார்கள். அம்மாநிலம் சார்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
‘தமிழ் எத்னிக் டே’ அன்று காலையில் சீக்கிரமே எழுந்துவிட்ட கௌதம், தம்மடிப்பதற்காக ஸ்மோக்கிங் ஜோன் சென்றுகொண்டிருந்தான். நந்தினியின் பிளாக்கை கடக்கும்போதுதான் கவனித்தான். நந்தினி அவ்வளவு காலையில் தலைக்குக் குளித்துவிட்டு, வெள்ளை நிற பாவாடையும், ரோஸ் நிறத்தில் தாவணியும் அணிந்துகொண்டு, அவளுடைய பிளாக் முன்பு, கலர் கோலப்பொடியால் பெரிதாக ‘தமிழர் தினம்’ என்று எழுதிக்கொண்டிருந்தாள்.
அவள் அருகில் நெருங்கிய கௌதம், ‘ஹாய் தமிழ்ப் பெண்ணே…..” என்றான். நிமிர்ந்து அவனைப் பார்த்த நந்தினி உற்சாகத்துடன், “ஹாய் தமிழ்ப் பையா…” என்றபோதுதான் கவனித்தான். பாவாடை, தாவணியில் அவள் கூடுதல் அழகுடன் இருந்தாள். பாரம்பரிய உடைகள் அழகிகளை, பேரழகிகளாக்கிவிடுகின்றன. நெற்றியில் லேசாக வியர்வைத் துளிகள் அரும்பியிருக்க…முகத்தில் ஆங்காங்கே கலர் கோலப்பொடி தீற்றலாக ஒட்டியிருக்க...அட்டகாசமாக இருந்தாள் நந்தினி. மீண்டும் குனிந்து முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு எழுந்தாள். புறங்கையால் அவள் நெற்றியைத் துடைத்தபோது சிவப்புப் பொடி அவள் நெற்றியில் ஒட்டிக்கொண்டு இன்னும் அழகாகத் தோன்ற… “முகத்துல கலர் பொடி ஒட்டிருக்கு” என்றான் கௌதம். “எங்க?” என்று துடைக்கக் கையை எடுத்தவள், இரண்டு கைகளிலும் கலர் கோலப்பொடி இருப்பதைப் பார்த்துவிட்டு, எப்படித் துடைப்பது என்று தெரியாமல் விழித்தாள்.
“நான் வேணும்னா துடைக்கட்டுமா?”
“ம்…ஆனா தொடாம துடைச்சுவிடணும்” என்றாள் குறும்புச் சிரிப்புடன். கௌதமும் சிரிப்புடன், “சரி…” என்று அருகில் நெருங்கினான். “ஏய்… யாராச்சும் பாப்பாங்க. அங்க வா…” என்று அருகிலிருந்த விக்கி மரத்தைக் காட்டினாள். விக்கி மரத்தின் மறைவுக்குச் சென்றவுடன், கௌதம் கீழே பச்சை நிற விக்கிப் பழங்களுக்கு நடுவே கிடந்த சிறு குச்சியை எடுத்தான். அதன் நுனியில் தனது கர்ச்சீப்பைச் சுற்றினான். நந்தினி புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவள் அருகில் நெருங்கிய கௌதம், குச்சியின் முனையில் இருந்த கர்ச்சீப்பால் அவள் நெற்றியிலிருந்த சிவப்புப் பொடியைத்
துடைத்தான். அப்படியே மூக்கிற்கு வர… கர்ச்சீப்பில் இருந்த சிவப்பு பொடி, மூக்கிலிருந்த மஞ்சள் பொடியுடன் கலந்து வித்தியாசமான நிறத்தைக் காட்டியது. அப்படியே உதட்டுக்கு இறங்க…உதட்டின் பச்சைப் பொடியோடு சிவப்பும், மஞ்சளும் சேர… அவள் உதடுகள் மெலிதாகத் துடித்தன. கௌதம் உதட்டிலிருந்து குச்சியைக் கன்னத்துக்கு நகர்த்த… கண்கள் மூடிக் கிறங்கிய நந்தினி சட்டென்று அவன் கையைப் பிடித்து தள்ளிவிட்டு, “ஏய்… வேண்டாம். என்னமோ பண்ணுது” என்றாள்.
“என்னமோன்னா?”
“என்னன்னமோ…”
“என்னன்னமோன்னா?”
“அது… என்னன்னன்னன்னமோ” என்ற நந்தினி அவன் தோளைத் தள்ளிவிட்டு ஓடினாள்.
அன்று காலை பயிற்சி வகுப்புக்கு வந்தபோது, நந்தினி வெள்ளை தாவணி, பச்சைப் பாவாடை அணிந்திருந்தாள். காதுகளில் ஒரு சிவப்புக் கல் ஜிமிக்கி. இடுப்பு வரை நீண்ட கூந்தலைப் பின்னாமல், காதோர முடிகளைச் சேர்த்துக் கட்டியிருந்தாள். நடுவே இரண்டு முழம் மல்லிகைப்பூவைத் தலைகீழ் ‘ப’வடிவில் சூடியிருந்தாள். வேட்டி, சட்டையிலிருந்த கௌதமைப் பார்த்தவுடன், “வேட்டி உனக்கு நல்லாருக்கு” என்று கூறிவிட்டு, தனது இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டாள். கௌதம் திரும்பித் திரும்பி நந்தினியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்று வழக்கமான செஷன் கிடையாது. ‘தமிழ் எத்னிக் டே’ என்பதால் அனைவரையும் பாடச் சொன்னார்கள். முதல் ஆளாக நந்தினிதான் எழுந்து வந்தாள். மேடையில் நின்ற நந்தினியின் அழகை கௌதம் பிரமிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தான். அவள் கௌதமைப் பார்த்து தனது வசீகரமான குரலில், “பாக்காதே… பாக்காதே…” என்று பாட ஆரம்பிக்க… கௌதம் இரண்டு கை விரல்களாலும் தனது விழிகளை விரித்து அவளை உற்றுப் பார்த்தான். அவள் இந்நூற்றாண்டு பெண்கள் மறந்துபோன ஒரு வெட்கச் சிரிப்புடன், “ஹையய்யோ பாக்காதே…” என்று பாட… கௌதம் சட்டென்று கண்களை மூடிக்கொண்டான். உடனே நந்தினி பாடுவதை நிறுத்திவிட்டாள். மாணவர்கள் சலசலப்புடன் பேச ஆரம்பித்தனர். ஆனாலும், நந்தினி பாடவேயில்லை. கௌதம் சட்டென்று கண்களைத் திறந்து அவளைப் பார்க்க… நந்தினி சந்தோஷச் சிரிப்புடன் தொடர்ந்து பாட ஆரம்பித்தாள்.
“நீ பாத்தா பறக்குறேன்… பாத மறக்குறேன்…
பேச்சக் கொறைக்கிறேன் சட்டுன்னுதான்”
என்று கௌதமைப் பார்த்துக்கொண்டே பாடப் பாட… அவர்கள் மானசீகமாக ஒரு தனி உலகிற்குள் நுழைந்தனர். பாடி முடித்தவுடன் கௌதமின் அருகில் வந்த நந்தினி, “எப்படி பாடினேன்?” என்பது போல் இரண்டு விழிகளையும் உயர்த்திக் கேட்க… கௌதம், “சூப்பர்” என்றான்.
மைதானத்தில் உறியடி நிகழ்ச்சி நடந்தபோது, கௌதம் சரியாகப் பானையை உடைத்தான். அப்போது பானையிலிருந்த பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கீழே விழ…நந்தினி ஓடிவந்து சிறிது பூக்களை தனது கைகளில் ஏந்திக்கொண்டாள். பசங்கள் கௌதமை தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு நடக்க… நந்தினி அந்தப் பூக்களை, தனது இரண்டு கன்னங்களிலும் தேய்த்தபடி கௌதமையே உற்றுப் பார்த்தாள்.
மதியம் ஆண்கள் ஃபுட்கோர்ட்டை நோக்கி நடந்தபோது, ஒரு மறைவிலிருந்து தமிழ்ப் பெண்கள் அண்டாவிலிருந்து மஞ்சள் தண்ணீரை சொம்பில் மொண்டு ஊற்றினார்கள். இதை எதிர்பார்த்திராத பசங்கள் தெறித்து ஓடினார்கள். நந்தினி கௌதமைத் துரத்திக்கொண்டு ஓடினாள். ஒரு மரத்தடிக்குப் பின்னால் அவனை மடக்கி, நந்தினி மஞ்சள் தண்ணீரை ஊற்ற…கௌதம் சொம்பைப் பறித்து மீதமிருந்த தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றினான். அவள் முகமெங்கும் மஞ்சள் நீர் அழகாக வழிய… கௌதம் தனது வலது உள்ளங்கையைக் குவித்து, அவள் கீழ்த்தாடையிலிருந்து சொட்டிய மஞ்சள் நீரைப் பிடித்தான். பின்னர், அதைத் தீர்த்தம் போல் கண்களில் ஒற்றிக்கொண்டு, வாயில் வைத்து அருந்தி, மீதித் தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொள்ள… நந்தினி ரசித்துச் சிரித்தாள்.
அன்று முழுவதும் தமிழர் தினத்தைக் கொண்டாடிய களைப்புடன் கௌதமும் நந்தினியும் ஹாஸ்டலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோது நன்கு இருட்டியிருந்தது. நந்தினி, “டயர்டா இருக்குல்ல? ஆனா சந்தோஷக் களைப்பு” என்றாள்.
சட்டென்று கௌதம், “ஆமாம். ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச மாதிரி ஒரு சந்தோஷக் களைப்பு” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொள்ள…நந்தினியின் முகம் சிவந்துபோனது. சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்ட நந்தினி ஒன்றும் பேசவில்லை.
“ஸாரி… என்னை அறியாம வந்துடுச்சு”
“இட்ஸ் ஓகே…” என்றபோது லேசாக மழை தூற ஆரம்பித்தது. அவர்கள் அருகிலிருந்த மரத்தடியில் ஒதுங்கியவுடன், வேகமாக மழை பெய்ய ஆரம்பித்தது. சில வினாடிகள் மழையைப் பார்த்த கௌதம், “ஆனா நான் சொன்னப்ப… உன்னோட வெட்கம் ரொம்ப அழகா இருந்துச்சு” என்று கூற… நந்தினி மீண்டும் வெட்கப்பட்டாள். “மறுபடியும் வெட்கம்” என்று கௌதம் கூற,“ஏய்…” என்ற நந்தினி
தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். இப்போது மழை வேகமெடுத்தது. மரத்தடியில் நின்றுகொண்டிருந்தாலும் இருவரும் நனைய ஆரம்பித்தனர்.
கௌதம் நந்தினியின் முகத்திலிருந்து இரண்டு கைகளையும் மெதுவாக விலக்க… பாதி விலக்கிய பிறகு அவள் கைகளை விலக்கவில்லை. இரண்டு அரை விழிகளும் மூக்கும் நடு உதடுகளும் மட்டும் தெரிந்த நந்தினியின் முகம், ஒரே முகத்தில் அழகின் வெவ்வேறு சாத்தியங்களைக் காட்டியது. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கௌதம், “ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணும்ன்னு நினைச்சுட்டிருக்கேன்” என்றவுடன், சட்டென்று கைகளை விலக்கிய நந்தினியின் முகத்தில் குப்பென்று ஒரு சந்தோஷம். “சொல்லு” என்றாள்.
சில வினாடிகள் தடுமாறிய கௌதம், “அது வந்து… சொல்லத் தயக்கமா இருக்கு. உன் கைல எழுதிக் காமிக்குறேன்” என்று கூற… நந்தினி தனது உள்ளங்கையை நீட்டினாள். உள்ளங்கையில் தன் விரலை வைத்துவிட்டு அவள் முகத்தைப் பார்க்க… கௌதமுக்கு எழுதவே தோன்றவில்லை. “உன் முகத்தைப் பாத்தா எழுதவே தோணல” என்றான்.
நந்தினி ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் திரும்பி, முதுகைக் காண்பித்தாள். கௌதம் அவள் முதுகை மூடியிருந்த ஈரக்கூந்தலை விலக்கினான். பச்சை நிற ஜாக்கெட்டுக்கு மேற்புற வெற்று முதுகில், அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த மூன்று மல்லிகைப் பூக்கள் உதிரியாக ஒட்டிக்கொண்டிருந்தன. ஒரு மல்லிகைப் பூவை எடுத்த கௌதம், மல்லிகைப் பூ காம்பால் கழுத்துக்குக் கீழிருந்த மழைநீர் சொட்டுகளைத் தொட்டு, ‘ஐ’ என்று எழுதினான். நந்தினி திரும்பி பக்கவாட்டில் அரைக்கண்ணால் பார்த்து, “ஐ” என்றாள். அடுத்து, ‘லவ்’ என்று எழுத… நந்தினியிடமிருந்து பதில் வரவில்லை. பதற்றத்துடன் கௌதம் அவள் தோள்களில் கை வைத்தான். சட்டென்று திரும்பினாள் நந்தினி. அவனுக்கு நெருக்கமாக நின்றபடி முகத்தில் மழைச்சாரல் துளிகள் விழ… கண்களில் காதல் பொங்கி வழிய, கௌதமை நெடுநேரம் பார்த்துக்கொண்டேயிருந்தாள். இருவரது மூச்சுக்காற்றும் சூடாக உரசி, வாயு மண்டலத்தில் ஒரு புதிய காற்று கலந்தது. கௌதம் எதிர்பாராத தருணத்தில், திடீரென்று நந்தினி அவன் ஈர உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு, “ஐ லவ் யூ…” என்றாள்.
(தொடரும்)