மண்... மனம்... மனிதர்கள்! - 15


ஸ்கூலுக்குப் போகும் ஹம்ஸா சும்மா போவதில்லை.

பதின்பருவ சிட்டுத்தனத்தோடு கழுத்தையும் இடுப்பையும் அப்படியும் இப்படியுமாக ஒடித்து வளைத்து போகும் ஹம்ஸாவை கொடிக்கா சட்டை செய்வதில்லை.

‘துணிவே துணை’ ரசிகர் மன்றத்தைக் கூட்டிவைத்துக் கொண்டு ஓயாமல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதுதான் அவனுக்கு ஜோக்கு.

கொடிக்காவின் உதாசீனத்தைக் குறித்த விடலைக் கோபம் ஹம்சாவுக்கு உண்டு என்றாலும் கொடிக்காவைப் பார்க்க வரும் வெளி ஏரியா மன்றத்துப் பையன்கள் அவளை விடாமல் ஸைட் அடிப்பதால் ஒருபோல கூலாகிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும், வயதுப் பெண்ணை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்த கணக்கு வாத்தியார் சந்தானமையங்காருக்கு உஷ்ணம் எகிற ருக்மிணியை அழைத்து கடுமையாக எச்சரித்தார்.

“தோ பார் ருக்மிணி... நீயான்னா மார்கழி வீதியில் ஓடி ஓடி பாசுரமா பாடற... ஆனாப் பாரு, பெருமாளை ஏளப் பண்ணும் இந்த வீதியில உன் பையன் ஏதோ ஒரு நடிகனுக்கு மன்றம் குன்றம்னு வெச்சு அட்டகாசம் பண்ணிண்டிருக்கான்.

இது ஆபாசமில்லையா? உன் புள்ளைக்குத்தான் மாடாட்டமா படிப்பே ஏறலையே. ஏன் இன்னும் அவன இங்க வெச்சு மேச்சுண்டிருக்குற..? எங்கணாச்சும் அனுப்பி விட்டுறேன்...”

“ஐயா...”

“என்ன நொய்யா..? சொல்றேன் கேட்டுண்டுரு ருக்மிணி... இப்படியே, இங்கயே சுத்திச் சுத்தி வந்திட்டுருந்தானா உன் பேரையும் கெடுப்பான். அவனும் கெட்டு இந்த திருவல்லிக்கேணியையே நாசமாக்கிடுவான். உன் பையன் உருப்படாம போயிடுவான் ஜாக்கிரத...”

துடித்துப் போனாள் ருக்மிணி.

“ஐயா, உங்க வாயால ஏதும் வஞ்சிறாதீங்க சாமி... இனிமே அவன ஒழுங்கா பாத்துக்குறது என் பொறுப்பு . சாரதியப்பாவின் சாட்டைக்கு பயந்து வாழ்ற சனங்க சாமி நாங்க...”

பட்பட்டென்று கன்னத்தில் போட்டுக் கொண்ட ருக்மிணி அடுத்த நொடியே மகாத்மா பாத்திரக் கடையை இழுத்து மூடினாள்.
சும்மா இருக்க முடியாத கொடிக்கா, “வெளி ஏரியாவுல போயி துணி வியாபாரம் செய்யப் போறேன்...” என்று ஆரம்பித்தான் .

“ய்ஏ... யெப்பா... நீ எங்கனா போய் என்னத்தையனா செஞ்சுக்கோ. இனிமேல மாட்டுக் கொட்டா போக்குவரத்தெல்லாம் பழையபடி மாமா பகத்சிங்கே பாத்துக்கும். நீ மானத்த வாங்காம இருந்தா போதும் சாமீ...” என்ற ருக்மிணி பணத்தை வாரிக் கொடுத்தாள்.

மீர்சாகிப் பேட்டை முஸ்லிம் ஒருவருடன் சேர்ந்து துணி பிஸினஸ் செய்வதாக சில மாதங்கள் அலைந்தான் கொடிக்கா. தோதுப்பட்டு வரவில்லை.

பிறகு, பர்மா பஜார் தொடர்பு ஏற்பட்டு கேரளாவில் இருந்து வந்த ஒருவரிடம் கைக் காசையெல்லாம் ஏமாந்து அடிதடியாக்கிக் கொண்டு வந்து நின்றான்.

என்னதான் வம்பு தும்பு என்று இருந்தாலும் கொடிக்கா எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாமல் இருக்கிறானே என்பதில் ருக்மிணிக்கு ஒரு நிம்மதி. பொறுமையாக விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

கொடிக்கா, மூன்று வேளை நன்றாகத் தின்பான். பகலில், பார்த்தசாரதி கோயில் குளக்கரையில் போய் காலை விரித்து உக்கார்ந்து கொண்டு மீனுக்கு பொரி போட்டுக் கொண்டிருப்பான்.

சாயந்திரமானால் பீச்சுக்குப் போய் பழைய ஃப்ரெண்ட்ஸ்களோடு கூடி ஜெய்சங்கரின் ஜேம்ஸ் பாண்ட் சண்டை பற்றி அரட்டை அடிப்பான். பின்னிரவு போலதான் வீடு திரும்புவான்.

குண்டானில் காரக் குழம்பையும் தயிரையும் போட்டு ஒரு கட்டு கட்டிவிட்டுப் படுப்பான். காலையில் பசுக்கள் கறவை முடிந்து திரும்பும் வரை ஓங்கார குறட்டையோடு தூங்குவான்.

அயர்ந்து தூங்கும் கொடிக்காவைப் நின்று பார்த்துக் கொண்டிருந்து பெருமூச்சோடு நெட்டி முறித்துப் போவாள் ருக்மிணி.
அன்று புரட்டாசி சனிக்கிழமை.

அதிகாலை சன்னிதியில் மெல்லிய குரலில் அழுது முறைட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் ருக்மிணி.

“சாரதியப்பா, என்னமாத்தான் போகப் போறான் என் கொடிக்கா..?”

பிரகாரத்தில் படபடப்போடு சுற்றிவந்து கொண்டிருந்த ருக்மிணியை வழிமறித்தார் சந்தானமையங்கார்.

“ருக்மிணி, படிப்பு சுரணையில்லாத உன் பையன வெச்சிக்கிட்டு ஏன் இப்படி அல்லாடற...நோக்கு ஒரு ஐடியா சொல்லவா..?”
“சாமி..?”

“வேலூர்ல என் ஃப்ரெண்டு ஒருத்தன் ஃபேக்டரி ஆரம்பிக்கிறான்... அவன்கிட்ட சொல்லி உன் பையனுக்கு அழகா ஒரு நைட் வாட்ச்மேன் வேலை வாங்கிக் குடுத்துறவா..? ”

பீறிட்ட கோபத்தை அடக்கிக் கொண்ட ருக்மிணி தன்னையறியாமல் குமுறினாள்...

“எனக்குன்னு வாச்சது ஒத்த புள்ளைங்க சாமி. எங்களுக்குன்னு 70 மாடுங்க இருக்குங்க. பள்ளிகொண்டான் பக்கம் 90 ஏக்கர் நெலமிருக்கு. எவன் வீட்டு வாசல்லயோ ராவெல்லாம் தூக்கங்கெட்டு நின்னு சாக அவன நான் பெத்துப் போடல.

ஊரெல்லாம் பேச்சு வாங்கறதே அவனுக்கு வரமா போயிருச்சு... ஆனாலுங்கூட அந்த நாய்க்கு சோறாக்கி வெக்கற சக்திய சாரதியப்பா எனக்கு குடுத்திருக்காரு சாமி...”

“இல்ல ருக்மிணி... எதுக்கு சொல்லுறேன்னா...”

“வேறொண்ணும் சொல்லிறாதீங்க சாமி. இல்ல கேக்குறேன்... இந்த திருவல்லிக் கேணிக்கு என் புள்ள உறுத்தலா இருக்குறானா சாமி? சொல்லுங்க... அப்படித் தான்னா, அந்த நாய இழுத்துக்கிட்டுப் போய் சமுத்திரத்துல தள்ளி விட்டுடுறேன் சாமி. முங்கி செத்து காணாப் பொணமாப் போய்த் தொலையட்டும் சாமி. சொல்லுங்க... தள்ளி விட்றவா ? ”

பொங்கி வந்த கண்ணீரோடு வேக வேகமாகப் போனவள் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்களை எல்லாம் தூக்கித் தூக்கி சுவற்றில் எறிந்து ரணகளம் செய்தபடி அழுதோய்ந்தாள்.

கொடிக்கா திக்கில்லாமல் திரிந்து கொண்டிருந்தான்.

அது, ஒரு மழைக்காலத்து சனிக்கிழமை. காலையிலிருந்தே லேசாக தூறிக் கொண்டிருந்தது. பகல் 1 மணி போல இருக்கும்.
மழை வலுப்பதற்குள் கடையை திறந்து, தீவன மூட்டைகளை உள்ளுக்கிழுத்து வைத்துவிடலாமென்று நினைத்த ருக்மிணி மாட்டாங் குப்பத்து சரஸுவை துணைக்கு வரச் சொல்லி இருந்தாள்.

சரஸு என்றைக்கு வந்திருக்கிறாள் நேரத்துக்கு!? இனியும் பொறுக்க முடியாதென்று தன்னந்தனியாக ஓடிப்போன ருக்மிணி கடை வாசலில் அதிர்ந்து நின்றாள் .

கடையின் சாத்துப் பலகைகளில் ஒன்று திறந்து போடப்பட்டிருந்தது.

“குய்யோ... முறையோ...” வென்று ருக்மிணி கத்திக் கூப்பாடு போட, போலீஸ் வந்தடைந்தது. போலீஸைக் கண்டதும் தன் பூர்வ கிராமக் குரலெடுத்து பெருங்கூச்சல் போட்டாள் ...

“அய்யாங் கடவுளே... பூட்டிக்கினிருந்த என் கடைய ஒட்ச்சுக்கிட்டு பூந்துட்டானா திருடன். எத்தினி நாளு என் கல்லாவ தொட்டானோ..? இன்னிக்கு அவனை புடிச்சே ஆவணும். ஐயோ நான் உழைச்ச நாளெல்லாம் போச்சா...சாரதியப்பா, வீச மாட்டியா உன் சாட்டைய... அய்யாங்..? ”

கூச்சலிட்டுக் கொண்டிருந்த ருக்மிணியை சமாதானப்படுத்தியபடி லட்டிகளை சுழற்றிக் கொண்டு கடைக்குள்ளே நுழைந்தது போலீஸ்.

நுழைந்த போலீஸுக்கு அதிர்ச்சி. கல்லா திறந்து கிடக்க, உள் வலது மூலையில் இருந்த அந்தக் கதவு லேசாக திறந்திருக்க அந்தக் கதவின் அருகில், கையில் கற்றையான பணத்தோடு... ‘திரு...திரு’வென முழித்தபடி நின்று கொண்டிருந்தான் கொடிக்கா !

பாய்ந்து அமுக்கிப் பிடித்த போலீஸ் அவன் சட்டையை அவிழ்த்து பின்புறமாக இறுக்கிக் கட்டித் தரதரவென வெளியே அழைத்து வந்து நிறுத்தியது.

போலீஸின் காலர் பிடியில் இருந்த தன் மகனைக் கண்ட ருக்மிணி கர்ப்ப சதை புரள அலறினாள்...

“ஐயீய்யோ... இன்னாடாது... கொடீக்கா..? ”

அம்மாவைக் கண்டதும் கொடிக்கா எகிறிக் கொண்டு திமிறினான்.

கான்ஸ்ட்டபிளின் கையை வெடுக்கென்று உதறிவிட்டவன் உர்ரென்ற முகத்தோடு நாலா பக்கமுமாக திரும்பி முறைத்துக் கொண்டு நின்றான்.

ருக்மிணிக்கு கண்கள் மெல்ல மெல்ல சொருகிக் கொண்டே போயின.

எங்கோ ஒரு சிறு கிராமத்தில் எளிய பிறப்பாக பிறந்து, ஷேத்திர பூமியான திருவல்லிக்கேணியில் செட்டிலாகி, அல்லும் பகலுமாக பெரும்பாடுபட்டு உழைத்து சம்பாதித்த மொத்தப் பேரும் புகழும்...

ஒத்தையே ஓத்தையாக பெத்த தன் மகனால் காறி உமிழப்படுகிறதே என நொந்த ருக்மிணி சாமி வந்தவள் போல இடவலமாக தலையை உலுக்கி ஆட்டிக் கொண்டே..“சாரதீப்பா...” என்றலறி மயங்கிச் சரிந்தாள்.

நசநசக்கும் மழைத்தண்ணீர் சகதியை பொருட்படுத் தாமல் இறங்கி ஓடிவந்த மாமிகள் ருக்மிணியை தூக்கிப் பிடித்தார்கள்.
“ருக்கும்மா...நோக்கொண்ணுமில்லேடி... நாங்களெல் லாமிருக்கோம்... சத்த பாறேன்...எங்களப் பாறேன்டீம்மா...” என்று பதைபதைத்தபடி சம்பத் பட்டாச்சாரியாரின் வீட்டுத் திண்ணையில் கொண்டு போட்டுப் பெருமாள் தீர்த்தம் தெளித்து ஆசுவாசப்படுத்தினார்கள் .

மழை நின்று விட கான்ஸ்டபிள் ராஜமாணிக்கம் தன் வழக்கமான விசாரணையை ஆரம்பித்தார்...

“பாருங்க... இவன கையும் களவுமாக பிடிச்சிட்டோம். ஆனாலும், கேஸ ஸ்ட்ராங்க் பண்ணணும்னா அதுக்கு சாட்சியம் வேணும்... யாராவது முன்ன வந்து சொன்னா நல்லாருக்கும்...”

சந்தானமையங்காரின் வீட்டு வாசற் படியில் துணிந்து இறங்கி நின்றாள் ஹம்ஸா.

“யெஸ்... நான் பாத்தேன்... கொடிக்காதான் அது..!”

கொடிக்கா விருட்டென்று திரும்பி ஹம்ஸாவை முறைத்துப் பார்க்க, போலீஸ் தன் பிடியை இறுக்கியது. கழுத்தை மடக்கி எதிர்ப்பக்கம் திருப்பியபடி “பயப்படாம சொல்லும்மா...” என்றார் கான்ஸ்டபிள் ராஜமாணிக்கம்.

“யெஸ் சார், கொடிக்கா சைலன்ட்டா வந்து கடை யோட ஒரே ஒரு கதவை மட்டும் நைஸா திறந்து எடுத்து வெச்சதைப் பாத்தேன்... அவன் மட்டும் தனியா உள்ளே போனான். கண்ணாலப் பாத்தேன்...”

கொடிக்காவை அள்ளிக் கொண்டு போனது போலீஸ்.

அன்றும் மறுநாளும் கோர்ட் லீவ் என்பதால் திங்கட் கிழமை ஆஜர் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த போலீஸ், கொடிக்காவை ஸ்டேஷன் கஸ்ட்டடியிலேயே வைத்திருந்தது.

தலைவிரி கோலமாய் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடோடி வந்தாள் ருக்மிணி.

“ஐயாமாரே... இந்த ஒருதாட்டி எம்புள்ளைய மன்னிச்சு விட்டுறக் கூடாதா... எங்கையா..!? ”

“இல்ல, ருக்மிணிம்மா. இவனை வெளிய அனுப்புனா, இவனுக்கு எதிரா சாட்சி சொன்ன அந்தப் பொண்ணை சும்மா விடமாட்டான். அவங்கம்மா ரொம்ப பயப்படுறாங்க... ஸ்கூல் வேலையே வேணாம்னு எழுதிக் குடுத்துடுறோம் சார். நாங்க ஊரோடவே போயிடறோம்... எங்கள காப்பாத்துங்க சார்ன்னு கதறுறாங்க...”

“ஐயோ... அப்பேர்கொத்தவன் இல்லீங்கையா எம்புள்ள...”

“விட்டுருங்க ருக்மிணிம்மா... ஒரு தரம் உள்ள போய் வந்தாத்தான் அவனுக்கு உங்க அருமை புரியும். போயி...திருந்தி வரட்டும்...”
“ஐயையோ... அப்படீல்லாம் சொல்லாதீங்க ஐயா...காந்திய நேர்ல பாத்த வம்சங்கய்யா...” என்று வீறி வீறித் தலையில் அடித்துக் கொண்டே இன்ஸ்பெக்டரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு லாக்கப்புக்குள் ஓடோடிப் புகுந்தாள் ருக்மிணி.

லாக்கப்புக்குள் கால் மேல் காலிட்டுப் படுத்திருந்த கொடிக்கா, அம்மாவை கண்டதும் பளிச்செனெ எழுந்து அமர்ந்தான். பாய்ந்து கட்டிக் கொண்டு கதறி அழுதாள் ருக்மிணி .

வெளியே, சந்திரபோஸும் பகத்சிங்கும் இன்ஸ்பெக் டரின் டேபிளுக்கு முன்னே பணிவோடு கைக்கட்டி நின்று கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

பாரா நோட்டை செக் செய்தபடியே கேட்டுக் கொண்டி ருந்த இன்ஸ்பெக்ட்டர் நிமிர்ந்து நைச்சியமாக சொன்னார்,

“சந்திரபோஸுங்க... சுத்துவட்டாரத்துல உங்க குடும்பத்தப் பத்தி எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் உண்டுதானுங்க... ஆனா, உங்க வீட்டம்மா குடுக்குற செல்லத்துல உங்க கொடிக்கா நாசமா போயிடக் கூடாதுன்னுதான் நாங்க இப்படி ஒரு ஸ்டெப் எடுக்கப் பாக்குறோம்.... கொஞ்சம் புரிஞ்சுக்குங்க...”

சடாரென திறக்கப்பட்டது லாக்கப் கேட்.

வெளியேறி வந்து இன்ஸ்பெக்டரின் டேபிளுக்கு முன்னே நின்ற ருக்மிணி அருண்டேலின் முகம் ஜொலித்தது.

அந்த தாய் பேச ஆரம்பித்தாள் ...

(சந்திப்போம்)

x