மண்... மனம்... மனிதர்கள்! - 14


கடற்கரையை நோக்கிப் போகும் நெடுஞ்சாலையில்தான் எங்கள் வீடு இருந்தது. வேப்பம்பழ வாசனை வீசும் ரம்மியமான சாலையில் கடற்கரையின் உப்புக்காத்தும் சேர்ந்தே வீசும் என்பதால், திருவல்லிக்கேணியின் வெய்யிற் காலம் எங்களுக்குக் கொஞ்சம் டார்ச்சர்தான்.

அதிர்ஷ்டவசமாக ஒரு ஏப்ரலில் ‘பெங்களூர் லயன்ஸ் கிளப் ஆண்டு விழாவில் சீஃப் கெஸ்டாக வந்து பேச முடியுமா?’ என்றார்கள். “தோ வந்தேன்...” என்று நாலு காலில் தாவிப் போனேன்.



ஏர்போர்ட்டில் பிக்கப் செய்த லயன்ஸ் கிளப் சேர்மன் மோகன் ஜாப்ரியா காரோட்டிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

“சார், உங்களுக்கு ஒரு நல்ல லிங்க் தரேன். அவர் பேரு ருக்கு குமார். உங்க தமிழர்தான். ‘ருக்கு குரூப்ஸ்’னு கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட ஓனர். ஃபங்க்ஷனுக்கு வர்றேன்னிருக்கார். அவரை வைத்து நீங்க படம்கூட செய்யலாம்.

பெங்களூரில் அந்தாளு தொடாத பிசினஸே இல்ல. எல்லா அரசியல்வாதிகளும் ருக்கு குமாருக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். வாட்டாள் உட்பட. ஆனா, தொழிலில் ரொம்பக் கறார், படு சுத்தம்...”

மண்டபத்தில் நுழைந்து முன் வரிசையில் அமரும்போது அருகில் ஆஜானுபாகுவாக உக்கார்ந்திருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார் மோகன் ஜாப்ரியா.

“சார், இவர்தான் ருக்கு குமார்...”

ருக்கு குமாரைக் கண்ட நொடியில் இருவரும் பரஸ்பரம் உறைந்துபோனோம்.

அட, நம்ம கொடிக்கா !
***
பழைய திருவல்லிக்கேணியில்…

‘ருக்குமணி பால் நிலையம்’ ரொம்பப் ப்ரசித்தம்.

ராகவேந்திர ஸ்வாமிகள் மடத்துக்கு அருகில் சொருகு பலகைகளைக் கொண்ட உயரமான கதவில் அகன்ற திரு நாமம் வரையப்பட்டிருக்கும் கடை.

ஆச்சாரமான திருவல்லிக்கேணி வைணவப் பெண் மணிகளுக்கு ருக்குமணி பால் நிலையம்தான் பெஸ்ட் சாய்ஸ். வரிசையில் நின்று பால் வாங்கிச் செல்வார்கள்.

ஏறத்தாழ 3000 சதுர அடி உள்ள அந்தக் கடையின் உள் சுவரில், 108 திவ்ய தேசப் படங்கள் ஃப்ரேம் போடப்பட்டு நடுவாந்தரமாக மாட்டப்பட்டிருக்கும். அதன் கீழ் நித்ய நெய்தீபம் சுடர்விட்டுக் கொண்டிருக்கும்.

வலது - இடது சுவர்களில் காந்தி, நேரு, நேதாஜி, வல்லபாய் படேல், பாரதியார் என சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் பக்கத்துக்குப் பத்தாக மாட்டப்பட்டிருக்கும்.

பின்னால், உள் வலது மூலையில் லேசாக அடைக்கப் பட்ட கதவு ஒன்று இருக்கும். அதன் இருபக்கமும் மாட்டுத் தீவனங்கள் மூட்டை மூட்டையாய் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

கடையின் வெளியே இரண்டு மினி சைஸ் அண்டாக்கள் வைக்கப்பட்டு அதில் ஒன்றில் பசும்பாலும், மற்றொன்றில் எருமைப்பாலும் நுரையோடு இருக்க, அதன் மேல் சுத்தமான வெள்ளை நிற சல்லாத்துணி எந்த நேரமும் போர்த்தப்பட்டிருக்கும்.

அந்தக் கடையின் சொந்தக்காரி ருக்குமணி அருண் டேல். கடும் உழைப்பாளி. நெற்றியில் சூர்ணம் பளிச் சென்று துலங்க கழுத்தில் கருகமணியோடு எந்த நேரமும் புன்னகைத்திருப்பாள்.

சொந்த ஊர் வேலூர் பக்கம், ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் வழியாக ஒருமுறை காந்தி கடந்து போனார் என்பதனால் தேச பக்தி அங்கே பீறிட்டுவிட, அன்று தொட்டு தேசாபிமானிகளின் பெயர்களைத் தங்களுக்கு சூட்டிக்கொள்ளத் துவங்கினார்கள் அந்த ஊர் மக்கள்.

திருவல்லிக்கேணி மக்களுக்கு ருக்குமணி மேல் தனி அபிமானம் இருந்தது. 70 கறவைகளுக்குச் சொந்தக்காரி ருக்குமணி . செவ்வாய், வெள்ளிகளில் குளத்தங்கரையில் பசுக்களை வரிசையாக நிப்பாட்டி வைத்து குடம் குடமாகத் தண்ணீர் கொட்டிக் குளிப்பாட்டுவாள்.
ஆண்டாள் பாசுரங்களைப் பாடிக்கொண்டே மஞ்சளைக் குழைத்து மடிகளில் பூசியபின், அகண்ட பாத்திரத்தில் சாம்பிராணி போட்டு பசுக்களை சுற்றி அவள் நடந்துவரும்போது ஏதோ ஆயர்பாடியே உயிர்த்தது போலிருக்கும்.

பார்த்தசாரதிப் பெருமாள் என்றால் அவளுக்கு உயிர். பெருமாளை நெக்குருக “சாரதியப்பா” என்றுதான் அழைப்பாள்.
சொந்த கிராமத்திலிருந்து தேர்ந்த கறவையாளர்களை அழைத்து வந்து சம்பளத்துக்கு அமர்த்தியிருந்தாள். அத்தனை பேரிடமும் கறாராகச் சொல்லி வைத்திருந்தாள்.

“நல்லா கேட்டுங்கங்கப்பா... திருவல்லிக்கேணி முழுக்க நாமதான் பால் சப்ளை பண்றோம். நம்மள சுத்தி பள்ளி வாத்தியாருங்க, அரசாங்க அதிகாரிங்கன்னு எல்லாரும் இருக்காங்க. அதையெல்லாம் விட சாரதியப்பாவுக்கு சேவை செய்யுறவங்க இருக்காங்க.

சுத்த பத்தமா வாயைக் கட்டிக்கிட்டுப் பால் கறக்கணும். சொட்டுத் தண்ணி கலந்துடக் கூடாது. தப்பு எதுனா நடந்துது அவ்வளவுதான். சாட்டையை வீசிடுவாரு சாரதியப்பா. சொல்லிப்புட்டேன்...”

கடைக்கு வெளியே பெருக்கி சுத்தம் செய்ய திருவல் லிக்கேணி மாட்டாங்குப்பத்திலிருந்து சரஸு என்பவளை அமர்த்தியிருந்தாள். சரஸு வாய் பேச முடியாத இளம் விதவை. சைகை பாஷையிலேயே வலம் வருவாள். அவளையும் கூட கடைக்கு உள்ளே அனுமதிக்க மாட்டாள். வெளியோடு சரி. ருக்குமணிக்கு சுத்தம் முக்கியம்.

மார்கழி வீதிகளில்... அதிகாலையில், தன் சக யாதவப் பெண்களைக் கூட சேர்த்துக்கொண்டு கழுத்தில் மாட்டித் தொங்கும் ஸ்ருதிப் பெட்டியை அசைத்துக்கொண்டே சத்தமாக திருப்பாவை பாடியபடி போவாள்.

துளசிங்கப்பெருமாள் கோயில் தெரு இறக்கத்தில்தான் ருக்குமணிக்கு வீடு. ருக்குமணிக்கு வாய்த்த புருஷன் சந்திரபோஸ், மகா சாது.
வீட்டுத் திண்ணையில், நீல நிற தலைப்பா கட்டிக் கொண்டு எந்த நேரமும் பீடி புகைத்துக்கொண்டு ஒரு காலை மடக்கி உக்கார்ந்திருப்பார். மாதமிருமுறை ஊரிலிருந்து வந்திறங்கும் வைக்கோலைப் பிரி வாரியாக உள்ளே கொண்டுபோய் அடுக்குவதும், மாடுகளுக்குத் தீவனம் வைப்பதும் அவரது வேலை.

மற்ற நேரமெல்லாம், ஸ்கூல் விட்டுவரும் சின்னப் பசங்களைக் கூட்டி வைத்துக்கொண்டு சுதந்திரப் போராட்ட
கதைகளை வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.

அந்த 70 மாடுகளுக்கும் ‘மாட்டுக் கொட்டாய்’ என்று ஒன்று கிடையாது. திருவல்லிக்கேணி வீதிகளில் சுதந்திரமாக மேய்ந்து வரும்.
கிழக்கே வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு, வடக்கே பெரிய தெரு, தெற்கே இருசப்ப கிராமணி தெரு என்று எல்லைகளை வகுத்துக்கொண்டு அதற்குள்ளாகவே சுற்றி வரும். மேற்கே மட்டும் ஏனோ அவை போவதில்லை.

அவற்றை கண்காணிப்பதும், கறவையாளிகளுக்குச் சம்பளம் போடுவதும் ருக்குமணி பால் நிலையத்துக்குப் போக மீதம் இருக்கும் பாலை சுற்று வட்டாரத்தில் வாடிக்கைக்கு ஊற்றிவரும் வேலையும் ருக்மிணியின் தம்பி பகத்சிங்கின் பொறுப்பு. மைய நிர்வாகமும் - கணக்கு வழக்கும் ருக்குமணியிடம்தான். தாராளமான வரும்படியில் மெத்தை வீடே கட்டிவிட்டாள் ருக்குமணி. திருவல்லிக்கேணியில் ருக்குமணிக்கென்று ஒரு தனி அந்தஸ்து இருந்தது.

தனக்குப் பிறந்த ஒரே மகனுக்கு, பிறந்த ஊர் பழக்கத்தை மீறாமல் கொடிகாத்த குமரன் எனப் பெயர் வைத்து, ‘கொடிக்கா’ எனச் செல்லமாக அழைத்து வந்தாள் ருக்குமணி.

கொடிகாத்த குமரன், திருவல்லிக்கேணியின் புகழ் பெற்ற இந்து உயர் நிலைப்பள்ளியில் தட்டுத் தடுமாறி படித்துக்கொண்டு இருந்தான்.

பாலும் வெண்ணையுமாய் குழந்தையிலிருந்தே ஊட்டம் அதிகம் என்பதால் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே வயதுக்கு மீறிய வாட்டசாட்டம் கொடிக்காவுக்கு.

கொஞ்சம் கருமைதான் என்றாலும் மூக்கும் முழியுமாக மேனி மின்ன அழகாகவே இருந்தான். படிப்பு சுத்தமாக ஏறாமல் கடைசி பெஞ்சில் அசையாமல் தூங்குவான்.

முழிப்பு கண்டால் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடி இருப்பான். கணக்கு வாத்தியார் சந்தானமை யங்கார் வந்தால் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. நைசாக வெளியேறி கிரவுண்டுக்குப் போய் விடுவான்.

சந்தானமையங்கார் கண்டிப்பானவர் என்றாலும், கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார். ருக்குமணியின் முகத்துக்காக கொடிக்காவை எல்லோரும் சகித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்கூல் பசங்களை வெளியாட்கள் யாரேனும் அடித்து விட்டால் கொடிக்காவிடம்தான் வந்து முறையிடுவார்கள். “யார்றா அவன்...” என்று டவுசரை மேலேற்றிக்கொண்டு கிளம்பிவிடுவான்.

கொடிக்கா இறங்கி விட்டான் என்றால் தெறிக்க ஓடுவார்கள். வாரத்துக்கு இரண்டு அடிதடி என்று சேப்பாக்கம் தாண்டியும் வம்பை இழுத்துக் கொண்டிருந்தான்.

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கொடிக்காவுக் கென்று ஒரு கூட்டம் சேர ஆரம்பிக்க, கொடிக்காவின் அடிதடி குறித்து பள்ளி மேனேஜ்மென்ட்டுக்கு ரிப்போர்ட் வர ஆரம்பித்தது.

அப்போது ஹெட் மாஸ்டராக இருந்த ஆர்.எஸ். மிகவும் கண்டிப்பானவர். நேரம் பார்த்து கணக்கு வாத்தியார் சந்தானமையங்கார் கொடிக்காவைப் பற்றி அவரிடம் வத்தி வைத்து விட்டார்.

ஆர்.எஸ். உஷ்ணமானார். கொடிக்காவைக் கூப்பிட்டனுப்பினார்...

“தாய், தகப்பனை அழைச்சுண்டு வா...உனக்கு இனிமே இங்கே இடமில்லை. டி.சிதான். கெட் அவுட்...”

மனமுடைந்து போன ருக்குமணி, கொடிக்காவை அங்கிருந்து அடுத்து கங்கணா மண்டபத்துக்கு அருகே இருந்த ‘கெல்லட் பள்ளியில்’ சேர்த்துவிட்டாள்.

கொடிக்காவுக்கு அங்கே சரியான செட் அமைய, பத்தாம் வகுப்பில் அடிதடியில் கொடி கட்டினான். ருக்மிணிக்குப் பெரிய தலைவலியாகிப் போக, கொடிக்காவை ஸ்கூலை விட்டே நிறுத்த முடிவெடுத்தாள்.

“யம்மோவ்...யார கேட்டு ஸ்கூல விட்டு நிறுத்தற? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அங்கதான் இருக்காங்க. அதெல்லாம் முடியாது, ஸ்கூலுக்குத்தான் போவேன்...”

அடம் பிடித்துச் சென்றவன் பத்தாம் வகுப்பில் எல்லா பாடத்துக்கும் சேர்த்து மொத்தமாக 20 மார்க் வாங்கித் தானாகவே நின்று கொண்டான்.

அடுத்து கொடிக்காவிடம் சிக்கினார் தாய்மாமன் பகத்சிங் . அவரை வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அவருடைய வேலைகளை எல்லாம் டேக் ஓவர் செய்து கொண்டான்.

ஊரெல்லாம் சுற்றி வந்தான். மாடு மேய்க்கும் சாக்கில் அங்கங்கே சினேகிதம் பிடித்துக் கொண்டாடினான். ஒல்லியாக இருக்கும் சிறுவர்களைக் கண்டால் கால் லிட்டருக்கு காசு வாங்கிக்கொண்டு முக்கால் லிட்டரை ஊத்துவான். “நல்லா ஒடம்பத் தேத்தி மிலிட்டரிக்குப் போய் சண்ட போடுடா குட்டி …” என்பான்.

யாருக்கும் அடங்காமல் கோயில் காளையாய் சுற்றி வந்தான் கொடிக்கா. ‘துணிவே துணை’ ஜெய்சங்கர் ரசிகர் மன்றம் ஆரம்பித்து எம்ஜியார், சிவாஜி ரசிகர் மன்றங்களோடு மோதினான். போலீஸ் கேஸாயிற்று.

ருக்மிணி, கொடிக்காவை என்னதான் செய்வது என்றே புரியாமல் தவித்தாள். சமூகத்தில் அவளுக்கென்று இருக்கும் மரியாதை இறங்கி விடுமோ என்று அஞ்சினாள். இவனுடைய அட்டகாசம் எங்கே போய் முடியுமோ என்று கவலைப்பட்டவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

காலை – மாலை பால் வியாபாரம் போக மற்ற நேரங்களில் கடை மூடித்தானே கிடக்கிறது. அதில், இவனுக்கு ஒரு பாத்திரக்கடை வைத்துக் கொடுத்து ஒரே இடத்தில் அமுக்கிப் போடுவோம் என்று முடிவெடுத்தாள்.

மாவிலை தோரணம் கட்டி ‘மகாத்மா பாத்திரக் கடை’ ஆரம்பித்துக் கொடுத்தாள். எதுவாக இருந்தால் என்ன என்று அதையும் ஜாலியாக நடத்தினான் கொடிக்கா.

அதாவது, கடை நடத்துகிறேன் பேர்வழி என்று ரசிகர் மன்றத்து ஆட்களைக் கூட்டி வைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தான். “சாரதியப்பா...என் புள்ளைக்கு நல்ல புத்தி கொடேன்” என்று அரற்றிக் கொண்டே இருந்தாள் ருக்குமணி.
ஒரு கட்டத்தில், அந்த ஆபத்து நடந்தே விட்டது.

கடைக்கு எதிரே இருந்த சத்திரத்துக்குப் பக்கத்தில் கணக்கு வாத்தியார் சந்தானமையங்கார் குடிவந்து சேர்ந்தார்.
மூக்கும் முழியுமாக இருந்த அவருடைய பெண் ஹம்சா அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.

(சந்திப்போம்)

x