பாப்லோ தி பாஸ் - 27: சிறைக்குள் ஒரு கொலை..!


 396  நாட்கள்..!

ஆம்… ஒரு சிங்கம் கூண்டுக்குள் இருந்த நாட்கள் இவை. அவ்வளவு நாட்களும் பாப்லோ எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் சுகவாசியாக வாழ்ந்து வந்தான். ஆனால், அந்தச் சுக வாழ்க்கை முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.

சிறையில் சகல வசதிகளையும் செய்து கொண்டார்கள், சரி. பெண்களுடன் சல்லாபித்தார்கள், சரி. உள்ளிருந்துகொண்டே தங்களின் கடத்தல் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டார்கள், சரி. இவ்வளவையும் அரசு பொறுத்துக்கொண்டது. ஆனால், அங்கே கொலையும் செய்தால் சும்மா விடுவார்களா..?

பாப்லோ சிறைக்கு வந்த பிறகு, அவனுடைய நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கத் தொடங்கியது. வியாபாரத்தைக் கவனித்துக்கொள்ள அவனுக்கு நம்பகமான ஆட்கள் தேவைப்பட்டனர். அந்தப் பொறுப்பை தனது நண்பர்கள் ஃபெர்னாண்டோ கலியானோ மற்றும் கிகோ மோன்கடா ஆகிய இருவரிடம் ஒப்படைத்திருந்தான் பாப்லோ.

இந்த டீலிங்கில் ஒரு சின்ன நிபந்தனை. தன்னுடைய வியாபாரத்தைக் கவனித்துக்கொள்ளும் அவர்கள், ஒவ்வொரு மாதமும் ‘யுத்த வரி’ என்ற பெயரில் 2 லட்சம் டாலர்களை (சுமார் 1 கோடி ரூபாய்) தனக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்பது பாப்லோவின் நிபந்தனை. அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள்.

ஒவ்வொரு மாதமும் அவ்வளவு பணத்தைக் கப்பமாகக் கட்டியும், அந்த இருவரும் வெகுவிரைவில் கோடீஸ்வரர்களாக வளர்ந்தனர். அவர்களது சொத்து மதிப்பு கூடிக்கொண்டே போனது. பாப்லோவின் பெயரைச் சொல்லித் தங்களின் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.

குறைந்த காலத்தில் அவர்கள் கோடீஸ்வரர்களாகியது பாப்லோவைத் துணுக்குறச் செய்தது. ‘இவர்கள் தன்னிடம் காட்டும் லாபத்தை விட இன்னும் அதிகமான லாபம் கிடைக்கிறது. ஆனால் அதை என்னிடம் மறைக்கிறார்கள்’ என்று பாப்லோ நினைத்தான். தன்னுடைய ஆட்கள் தன்னையே ஏமாற்றுகிறார்களோ என்று சந்தேகித்தான். அந்தச் சந்தேகம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் டாலர்களை (சுமார் 6 கோடி ரூபாய்) வரியாக விதித்தான். அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அது பாப்லோவைக் கோபமூட்டியது. எனவே, அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு வர, தன் சிகாரியோக்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.

இதை எதிர்பார்க்காத கலியானோவும் மோன்கடாவும் பாப்லோவை நேரில் சந்தித்துத் தங்கள் தரப்பு நியாயத்தை முறையிட்டனர். முகத்தில் எந்த ஒரு சலனத்தையும் காட்டாமல் அவர்களைப் புன்னகையுடன் வரவேற்ற பாப்லோ, தன்னைப் பற்றியும், தனது பிசினஸைப் பற்றியும், தான் இதுவரை கடந்து வந்த பாதையைப் பற்றியும் அவர்களுக்கு ‘லெக்சர்’ அடித்தான். அவர்களுக்கும் அந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் இல்லை. ஆனால், பாப்லோவின் தொனி, அவர்களிடம் பாப்லோவின் மீதிருந்த கோபத்தைப் போக்கச் செய்தது.

‘‘ சரி சரி… இனியாவது ஒழுங்கா நடந்துக்கங்க...”

‘‘ ஸாரி பாப்லோ… இனி இப்படி நடக்காது. எங்களால எவ்வளவு முடியுதோ அவ்வளவு உதவிகளையும் நாங்கள் உனக்குச் செய்யிறோம்.”

கைகுலுக்கிவிட்டுத் திரும்பி நடந்தார்கள். ஐந்தாறு அடி நடந்திருப்பார்கள்.

‘பட்… பட்…!’

என்ன ஏது என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் மயங்கிச் சரிந்தார்கள். பின்னால் பாப்லோ கிரிக்கெட் மட்டையுடன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் தன்னிடம் கைகுலுக்கிச் சென்றவுடன், அருகிலிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து அவர்களின் பின்னந்தலையில் ‘பட் பட்’ என்று அடித்தான்.

“ராஸ்கல்ஸ்… என்கிட்டயேவா...” என்று சொல்லியவாறே அவர்களைப் போட்டு அடித்தான். அவர்களின் கபாலம் பிளந்தது. ரத்தம் அந்த வெள்ளை முகங்களைச் சிவப்பாக்கியது.

“சாம்பலாக்கிடுங்கடா இவனுங்களை…”

அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் சாம்பலானார்கள். அடுத்த சில நாட்களில், அவர்களது சகோதரர்கள் மரியோ கலியானோ மற்றும் வில்லியம் மோன்கடா ஆகியோரும் பாப்லோவால் கொல்லப்பட்டார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்களது குடும்பம், பழிக்குப் பழி வாங்க நினைத்தது. எனவே, அந்தக் குடும்பத்தில் சிலர் பாராமிலிட்டரி ஆட்களை நாடினார்கள். சிலர் கலி கார்ட்டெலை நாடினார்கள். இன்னும் சிலரோ காவல் துறையில் புகார் அளித்தார்கள். கிரிக்கெட் மட்டையிலிருந்த ரத்தம் காய்வதற்குள் பாப்லோ செய்த கொலை தொடர்பான போட்டோக்கள் அதிபர் கவீரியாவிடம் சென்று சேர்ந்தன.

அந்தப் படங்கள் மட்டுமல்ல. ‘லா கதீட்ரல்’ சிறைக்குள் இருந்த மினி உலகத்தின் படங்களும் அவரது பார்வைக்கு முதன்முறையாக வந்தன.

“வாட் நான்சென்ஸ்… ஏன் இதைப் பத்தியெல்லாம் யாருமே என்கிட்ட சொல்லலை..?” என்று கொதித்தார் கவீரியா. ஆனால், பதில் சொல்லத்தான் யாருமில்லை. ஏனென்றால் அரசாங்கத்தில் பலரும் பாப்லோவின் ‘பே ரோலில்’ அல்லவா இருந்தார்கள்..?

‘‘ நோ… இது சரி வராது. பாப்லோவை அந்தச் சிறையிலிருந்து வேற ஒரு சிறைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுங்க. அதுக்கு பாப்லோ சம்மதிக்க மாட்டான். ஆனாலும் ரத்தம் சிந்தியாவது அவனை அங்கிருந்து வெளியே கொண்டு வரணும்..!”
கவீரியா பல்லைக் கடித்தார். பாப்லோவின் இறுதி ஓட்டம் தொடங்கியது..!

(திகில் நீளும்)

பாசம் காட்டிய உறவும், பயம் காட்டிய புத்தகமும்..!

பாப்லோவுடன், அவனால் கொல்லப்பட்ட ஃபெர்னாண்டோ கலியானோ மற்றும் கிகோ மோன்கடா ஆகியோர் அறிமுகமானது, ஜார்ஜ் ஒச்சாவோவின் தங்கை கடத்தப்பட்ட போதுதான். அப்போது, கெரில்லாக்களை எதிர்க்க, ‘நார்கோ’க்கள் அனைவரும் பாப்லோவின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர். அப்படித்தான் கலியானோவும் மோன்கடாவும் பாப்லோவின் நட்பு வட்டத்துக்குள் வந்தனர்.

107 பேரின் உயிர்களைக் காவு வாங்கிய ‘ஏவியன்கா ஏர்லைன்ஸ்’ குண்டு வெடிப்புத் திட்டத்தை இவர்களை வைத்துக்கொண்டுதான் பாப்லோ தீட்டினான். பாப்லோ செய்த குற்றங்களில் பெரும்பாலும், இந்த இருவருக்கும் பங்கிருக்கிறது. தன் பாவத்தைப் பங்கு போட்டுக்கொண்ட நண்பர்களைக் கொல்ல பாப்லோவால் எப்படி முடிந்தது? இத்தனைக்கும் கலியானோவின் இரண்டு குழந்தைகளுக்கு பாப்லோதான் ஞானத் தந்தையாக இருந்து வந்தான்.

பாப்லோ ஒரு படிப்பாளி. ஆனால், அவனை ஒரு புத்தகம் பயம் கொள்ளச் செய்தது என்றால், அது மேக்ஸ் மெர்மல்ஸ்டீன் எழுதிய ‘தி மேன் ஹூ மேட் இட் ஸ்நோ’ என்ற புத்தகம்தான். இந்த மேக்ஸ் ஒரு அமெரிக்கர். பாப்லோ போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவனுடன் சேர்ந்து பணியாற்றியவர். ஒரு கட்டத்தில், அமெரிக்காவுக்குப் போதைப்பொருள் கடத்திக்கொண்டு வரும்போது, மேக்ஸ் மாட்டிக்கொண்டார். எங்கே அவர் நம் ரகசியங்களை எல்லாம் சொல்லிவிடுவாரோ என்று பயந்த வேறு சில கடத்தல்காரர்கள், அவரது குடும்பத்தை மிரட்ட, அதை அறிந்த மேக்ஸ் ‘அப்ரூவர்’ ஆக மாறிவிட்டார்.

சிறையில் இருந்துகொண்டு அவர் எழுதிய புத்தகம்தான் பாப்லோவை மிகவும் வாட்டியது. ஆனால், அவன் பயந்தது போல, அதில் எந்தப் பெரிய ரகசியங்களும் இல்லை.

x