அஸ்தமிக்கிறதா தினகரன் அரசியல்?- ஆடிக்கிடக்கும் அமமுக அஸ்திவாரம்!


கே.கே.மகேஷ்

‘வ ருங்கால முதல்வர்’, ‘எழுச்சி நாயகன்’ , ‘மக்கள் செல்வர்’ என்றெல்லாம் கொண்டாடப்பட்ட டி.டி.வி.தினகரனின் அமமுகவுக்கு இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் படுதோல்வி, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்திருப்பது தினகரனை மட்டுமல்லாது; சசிகலாவையும் கடுமையாக பாதித்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற சசிகலா, போவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு, “இந்தச் சோதனைகளில் இருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்பேன்’’ என்று ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்தார். சில மாதங்களிலேயே காட்சிகள் மாறின. தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ்ஸுடன் கைகோத்துக்கொண்டு, தினகரன், சசிகலா உள்ளிட்டோரைக் கட்சியிலிருந்தே நீக்கினார் பழனிசாமி. கட்சியை மீட்கும் முயற்சியில் இறங்கிய தினகரன், ஒரு கட்டத்தில் அமமுகவைத் தொடங்கியது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், “அமமுக என்பது தனிக்கட்சியல்ல, அதிமுகவை மீட்டெடுக்கும் வகையில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், இடையில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் எதிர்கொள்ளவும் ஒரு தற்காலிக அமைப்பு’’ என்று விளக்கமளித்தார் தினகரன்.

அவர் எதிர்பார்த்த உள்ளாட்சித் தேர்தலையும், இடைத்தேர்தல்களையும் நடத்தாமல் தள்ளிக்கொண்டே போனது எடப்பாடி அரசு. ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சியில் தினகரன் இறங்கும் முன்பே, 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். வழக்குகளிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே வெற்றி மேல் வெற்றி குவிந்தது. இப்படித் திரும்பிய திசையெல்லாம் அடி கிடைத்தாலும் புன்னகை மன்னனாக வலம் வந்தார் தினகரன்.

x