பகலில் உழைப்பாளி... இரவில் படைப்பாளி - சீர்மிகு எழுத்தாளர் சி.எம்.முத்து


கரு.முத்து

தஞ்சாவூர் சாலியமங்கலம் - பாபநாசம் சாலையில் எட்டாவது கிலோ மீட்டரில் இடையிருப்பு கிராமம்.  போற்றுதலுக்குரிய படைப்பாளி ஒருவரைச் சந்திக்கும் ஆவலில் அந்த வீட்டை அடைகிறேன். இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு தலையில் மிச்சமிருக்கும் வெள்ளை முடிக்கு கருப்புச் சாயம் பூசிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். கெச்சலான உருவம். காவியேறிய பற்கள் தெரிய சிரித்தவாறு, “இந்தா வந்தர்றேன்” என்று என்னை அமர வைத்துவிட்டு உள்ளே செல்கிறார். குளித்து முடித்து, கசங்கிக் கிடந்த சட்டையைத் தேய்த்து, பட்டுவேட்டி சகிதம் வெளியில் வருகிறார். ஐம்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவர்; இலக்கிய உலகின் மிகப் பெரிய ஆளுமை. இவற்றின் எந்தச் சுவடும் இல்லாத எளிய மனிதராக மனம் நிறைந்த சிரிப்புடன் கைகுலுக்குகிறார் - சி.எம்.முத்து என்றழைக்கப்படும் சி.மாரிமுத்து.

கிராமிய வாழ்வின் அசல் பக்கங்களை, அசலான எழுத்துகள் மூலம் இலக்கியத்தில் தடம்பெறச் செய்தவர் சி.எம்.முத்து. ‘ஏழு முனிக்கும் இளையமுனி’, ‘மரத்துண்டும் சில மனிதர்களும்’, ‘சி.எம்.முத்து சிறுகதைகள்’, ‘மழை’ உள்பட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளையும், ‘நெஞ்சின் நடுவே’, ‘கறிச்சோறு’, ‘வேரடி மண்’, ‘அப்பா என்றொரு மனிதர்’, ‘மிராசு’ உள்ளிட்ட 10 நாவல்களையும் எழுதிக் குவித்தவர். க.நா.சு, நா.பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் உள்ளிட்ட ஆளுமைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். தஞ்சை பிரகாஷ் இவரது நெருங்கிய கூட்டாளி. எழுத்தில் மட்டுமின்றி இயல்பிலும் மனிதம் போற்றும் மனிதர். எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருந்தாலும் மிக எளிய விவசாயியாகவே வாழ்க்கையை நகர்த்துகிறார்.

“பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். என் பக்கத்துல உட்கார்ந்திருந்த கருணாநிதி எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் எழுதிட்டே இருப்பான். அவன் மேல எல்லாருக்கும் நல்ல மரியாதை. அதப் பார்த்துட்டு நாமளும் எழுதிப் பார்ப்போமேன்னு ஒருநாள் மதிய சாப்பாட்டு நேரத்துல க்ளாஸ்லேயே உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சேன். 20 பக்கத்தைத் தாண்டிட்டேன். மணி அடிச்சதும் தெரியல, வாத்தியார் வந்ததும் தெரியல. தமிழ் வாத்தியார் நமச்சிவாயம், ‘என்னடா எழுதிட்டு இருக்கே?’ன்னு தட்டி எழுப்பினார்.  ‘கதை எழுதிட்டிருக்கேன்’னு சொன்னேன். வாங்கி விறுவிறுன்னு வாசிச்சவர், ‘அருமையா எழுதியிருக்கியே... இப்படியே எழுதுனா பெரிய எழுத்தாளரா வருவே’ன்னு பாராட்டினாரு” என்கிறார் சி.எம்.முத்து.

x