ஆடவர் கிரிக்கெட்டின் முதல் பெண் அம்பயர்!- புதிய அத்தியாயம் படைக்கும் கிளாரி


உ.சந்தானலெட்சுமி

நமீபியத் தலைநகர் விண்ட்ஹோக்கின் வாண்டரர்ஸ் மைதானம். ஆரவாரமான கைத்தட்டல்களுக்கு நடுவே சக கள நடுவருடன் கை குலுக்கியபடி களமிறங்குறார் கிளாரி போலோசாக். சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் கள நடுவராகப் பணியாற்றும் முதல் பெண் எனும் பெருமிதம் அவர் முகத்தில் மிளிர்கிறது.

வேர்ல்டு கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடரின் இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றியிருக்கும் இவரது சாதனை, பெண்களுக்குப் பெரும் உத்வேகம் அளிக்கும் விஷயம் மட்டுமல்ல, ஆடவர் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகின் புதிய அத்தியாயமும்கூட!

மற்ற துறைகளைப் போலவே கிரிக்கெட் உலகிலும் ஆடவர் ஆதிக்கம் என்பது நாம் அறிந்த கதைதான். 1926-ல் இருந்தே பெண்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார்கள் என்றாலும், 1973 பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகுதான் படிப்படியாக கிரிக்கெட் வீராங்கனைகளின் திறமையை உணரத் தொடங்கியது கிரிக்கெட் உலகம். எனினும், ஆண்கள் கிரிக்கெட் , மின்னல் வேகத்தில் வளர்ந்துசென்ற அளவுக்குப் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியடைந்துவிடவில்லை. கிரிக்கெட் வீரர்களின் புகழ் வெளிச்சம், நட்சத்திர பிம்பங்கள் வீராங்கனைகள் மேல் விழுவது அரிது. சச்சினையும் தோனியையும் சுலபமாகத் தெரிந்த நமக்கு மித்தாலி ராஜை அடையாளம் கொள்ளவே பல மேட்சுக்களும் சில வெற்றிகளும் தேவைப்பட்டன.

x