தேர்தல் வெற்றியும் தேச நலனும்!


நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது பாஜக. 2014 மக்களவைத் தேர்தலில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, மோடியின் செல்வாக்கு முற்றுப்பெறவில்லை என்பதற்கு வலுவான அத்தாட்சி. கூட்டணி விஷயத்திலும் தேர்தல் வியூகங்களிலும் தயக்கமும் சுணக்கமும் காட்டிய எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒருமுறை பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 2014 தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் வாக்காளர்கள் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சென்ற முறை அதிக இடங்களில் வென்ற அதிமுகவின் இடத்தில் இந்த முறை திமுக வந்திருக்கிறது. ஆக, நாடாளுமன்றத்திலும் முக்கியமான எதிர்க்கட்சியாகிறது திமுக. இந்நிலையில், தமிழகத்தின் உரிமைகளைப் பேச வேண்டிய கடமையும் பொறுப்பும் அக்கட்சிக்கு இருக்கிறது. அதேசமயம், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கிடைத்திருக்கும் கலவையான முடிவுகள் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகின்றன.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி தொடங்கி, விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை வரை பல பிரச்சினைகள் இருந்தாலும், புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை என்று வாக்காளர் களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது பாஜக.

எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்விக்கான காரணங்களை அலசத் தொடங்கியிருக்கும் இந்தத் தருணத்தில், பாஜக தனது வெற்றிக்கான காரணங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தொடர வேண்டும். தேச நலன் கருதி கசப்பான நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றைத் தாங்கிக்கொண்டு ஆதரவளிக்கும் வாக்காளர்கள், பாஜகவுக்கும் மோடிக்கும் மிகப் பெரும் பலம். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு முன்பைவிட அதிகமாகவே இருக்கிறது. அந்தக் கடமையைச் சரியாகச் செய்வார் என்று நம்புவோம்!

x