கண்ணான கண்ணே..! 14


குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தும் மாறிக்கொண்டே இருக்கும். அதனை உணர்ந்து வயதுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவை வழங்குவது பெற்றோரின் தலையாய கடமை. குழந்தை வளர்ப்பைப் பொறுப்புடன் அணுகும் வழியும் இதுவே. இந்த அத்தியாயத்தில் 5 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு குறித்துப் பார்ப்போம்.

சுயத்தை உணரும் காலம்:

பெண் குழந்தைகள் என்றால் 5 முதல் 8 வயதானது பூப்பெய்துவதற்கு முந்தைய முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு நிறைவாக கால்சியம் சத்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த வயதில்தான் குழந்தைகள் ‘நான்’ என்ற சுயத்தை உணர்வார்கள். பாலின வித்தியாசத்தை அறிந்துகொள்வார்கள். அதே வேளையில் இந்த வயதில் அவர்கள் உணவுத் தொழிற்சாலைகளின் கண்கவர் வர்த்தக உத்தியில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பிருக் கிறது. இந்த வயதில் ஏற்படும் உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை.

அதனால், பெற்றோரின் இன்னொரு கடமையான நெறிப்படுத்துதலையும் இந்த வயதிலேயே ஆரம்பித்து விடுவது நல்லது. அதில் எவ்விதத் தயக்கமும் காட்டத் தேவையில்லை.

குறிப்பாக, உணவுப் பழக்க வழக்கத்தை நெறிப்படுத் துதல் மிகவும் அவசியம். கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் தயங்காதீர்கள். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்களின் அடர்த்தியைப் (போன் மினரல் டென்ஸிட்டி) பேணும் வகையில் ஊட்டச்சத்தினைத் திட்டமிடுதல் அவசியம்.

5 முதல் 8 வயது குழந்தைகளுக்கான டாப் 3 உணவு வகைகள்...

1. வெண்ணெய்...

அதுதான் கடைகளில் எளிதாகக் கிடைக்கிறதே என்று ஓடோடிச் சென்று வாங்க வேண்டாம். நான் சொல்வது வீட்டின் அருகே கிடைக்கும் நாட்டு மாட்டின் பாலை வாங்கி அதை மத்தைக்கொண்டு கடைந்தெடுக்கும் வெள்ளை வெண்ணெய். இதெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமா என்று கேட்காதீர்கள். ஊரில் அம்மா, பாட்டியிடம் சொன்னால் வாஞ்சையுடன் பேரப் பிள்ளைகளுக்குக் கடைந்து அனுப்புவார்கள்.

அந்த வெள்ளை வெண்ணெயில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்களின் அடர்த்தி இயற்கையாகக் கிடைக்கும். வெள்ளை வெண்ணையில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகியன இருக்கின்றன. இதுதவிர வுல்சென் ஃபேக்டர் (Wulzen factor) எனப்படும் ஹார்மோன் போன்றவை எலும்புகளை வலுவாக்குகின்றன.

வெள்ளை வெண்ணெய் மூட்டு ப் பிணைப்புகளுக்குத் தேவையான இலக்கத்தைக் கொடுக்கிறது. இதனால், எதிர்காலத்தில் ஆஸ்டொயோபோரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

எப்படிச் சாப்பிடுவது?

வெண்ணையைக் கடைந்தெடுத்தவுடன் அப்படியே ருசி பார்ப்பது அலாதி இன்பம். ஆனால் எப்போதுமே அப்படிச் சாப்பிட இயலாது அல்லவா? அதனால், வெண்ணையைத் தேவைக்கேற்ப ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். முறுக்கு செய்யும்போது மாவில் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். தோசையில் பயன்படுத்தலாம். இமயமலைப் பகுதிகளில் ‘பட்டர் டீ’ கூட உண்டு.

வெள்ளை வெண்ணையின் இன்னொரு சிறப்பு இதில் லேக்டோஸ் இல்லை. அதனால், லேக்டோஸ் அழற்சி இருக்கும் குழந்தைகளின் பெற்றோர் சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. மாறாக இதிலுள்ள குடலுக்கு உகந்த பாக்டீரியாக்கள் செரிமானத்துக்கு உதவுகின்றன. ஜீரண மண்டலத்தைப் பாதுகாக்கின்றன.

2. ஒரு கைப்பிடி நிலக்கடலை...

வளரும் குழந்தைகளுக்கு வெள்ளை வெண்ணைக்கு அடுத்ததாக நான் பரிந்துரைப்பது நிலக்கடலை. அதன் வைட்டமின் பி சத்து, வளமான தாதுக்களின் உள்ளடக்கம், அமினோ அமிலங்கள் என அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமானவை. மேலும், நிலக்கடலை சுவையானதாக இருப்பதால் நிச்சயமாகக் குழந்தைகளுக்கு அதை அறிமுகப்படுத்துவதில் எவ்விதச் சிக்கலும் இருக்காது.

நிலக்கடலை மட்டுமல்ல; எல்லா வகைப் பருப்புகளும் நம்மண்ணுக்கு உகந்தவை. மண் மீட்டெடுக்க முடியாத வளம் என்பது நாம் அறிந்ததே. மண் வளத்தைப் பேண வேண்டுமானால் இதுபோன்ற பருப்பு வகைகளைப் பயிரிடுவது அவசியம். அவை நிலத்துக்குத் தேவையான நைட்ரஜனையும் நல்ல பாக்டீரியாக்களையும் நிறைவாக அள்ளித் தருகின்றன.

நிலக்கடலை உலகின் ஆகச்சிறந்த ஆரோக்கிய உணவாகக் கருதப்படுகிறது. காரணம் அதிலுள்ள பாலிஃபீனால் உள்ளடக்கம். இது இதயத்துக்கு வலு சேர்க்கிறது. ரெட் ஒயின் இதயத்துக்கு வலு சேர்க்கும் என்ற கட்டுக்கதை உலகம் முழுவதும் இருக்கிறது. நம்பாதீர்கள். நிலக்கடலை சாப்பிடுங்கள்; இதயத்தைப் பேணுங்கள். அதேபோல் நிலக்கடலையில் ஃபேட்டி ஆசிட் தன்மையும் சிறப்பாக இருக்கிறது. பித்தப்பையில் கற்கள் சேரவிடாமல் தடுக்கிறது. எனவே, ஆலிவ் ஆயில் பயன்படுத்துவதை கவுரவமாகக் கருதி எல்லா நலமும் வளமும் கொண்ட கடலை எண்ணெயைப் புறந்தள்ளிவிடாதீர்கள். கடலை, கடலை எண்ணெய் உணவில் இருப்பது அவசியம்.

எப்படிச் சாப்பிடுவது?

தினம் ஒரு கைப்பிடி நிலக்கடலை என எளிமையாகப் புரிந்துகொள்வோமே! அது சலிப்பை ஏற்படுத்தினால் நிலக்கடலை சட்டினி செய்து ரொட்டி, இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். நிலக்கடலை, வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகக் கொடுக்கலாம். கடலை மிட்டாயாகச் சாப்பிடலாம். கொஞ்சம் உப்பு சேர்த்து வறுகடலையாகச் சாப்பிடலாம். இல்லை உப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிடலாம். சில மேலைநாடுகளில் நிலக்கடலை ஒவ்வாமை ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும்போதே தாய்மார்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டால், குழந்தைக்கு நிலக்கடலை ஒவ்வாமை ஏற்படாது என்று அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நிலக்கடலையைப் போல் 5 முதல் 8 வயது குழந்தை களுக்கு பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றையும் கொடுக்கலாம். ஆனால், நிலக்கடலையே பிரதானம்.

3. அப்பளம் சாப்பிடுவோமே...

ஹா…ஹா…ஹா என்று சிரிக்காதீர்கள். சில நேரங்களில் நாம் கண்டுகொள்ளாத உணவுதான் அதிகமான ஊட்டச்சத்து கொண்டதாக இருக்கும். அந்த வகையில் அப்பளமும் ஒன்று. நம் தேசம் பரந்துபட்ட கலாசாரம் கொண்டது, பல்வேறு மதத்தினர் வாழும் நிலமிது, ஏழையும் உண்டு, பணக்காரர்களும் உண்டு. ஆனால், எல்லோர் வீட்டிலும் ஒரே ஒரு உணவு பொதுவானதாக இருக்கிறதென்றால் அது அப்பளம்தான். உளுந்து அப்பளம்

உங்கள் குழந்தைகளுக்கு அவ்வளவு செரிவான ஆரோக் கியத்தைச் சேர்க்கக்கூடியது. பருப்புச் சோறும் அப்பளமும் பிடிக்காத குழந்தைகள் இருப்பார்களா?

எப்படிச் சாப்பிடுவது?

சுட்ட அப்பளத்தைவிட பொறித்த அப்பளமே குழந்தைகளுக்குச் சிறந்தது. அப்பளத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம். சிந்தி மக்கள் அப்பளத்தை மில்க் ஷேக்கில் சேர்த்து சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். மழைக்காலத்தில் அப்பளம் சாப்பிடுவது இன்பமான தருணம். அதுமட்டுமல்லாமல் அப்பளம் வெயில் காலத்தில் மட்டுமே தயாரித்து சேமித்து வைக்கக் கூடிய பதார்த்தம் என்பதால், குழந்தைகளுக்கும் அவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியும். வருடம் முழுவதும் தயாரிக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால், அந்த வளத்தை எப்படி புத்திசாலித்தனமாகக் கையாள்வது என்பதையும் தெரிந்துகொள்வார்கள்.

5 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவை இந்த வாரம் பார்த்தோம். அடுத்த அத்தியாயத்தில் 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு உகந்த உணவு குறித்து அலசுவோம்.

 (வளர்வோம்… வளர்ப்போம்)

x