மீண்டும் கிளம்பும் ஹைட்ரோகார்பன் பூதம்!- போராட்டத்துக்குத் தயாராகும் டெல்டா


கரு.முத்து

மொத்த இந்தியாவும் மக்களவைத் தேர்தல்பரபரப்பில் மூழ்கிக் கிடக்க, சத்தமேயில்லாமல் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் வழிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மத்திய பாஜக அரசு.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ஓஎன்ஜிசிக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை வழங்கியிருக்கிறது அரசு. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என்றாலும் இங்கு எழுந்த கடும் எதிர்ப்பாலும், தேர்தல் சமயம் என்பதாலும் அடக்கி வாசித்தது அரசு. இப்போது தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகத் தமிழகம், புதுச்சேரியில் 5,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. “புதுச்சேரிக்குள் உள்ள 2 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதிக்க மாட்டேன்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்திருக்கிறார். மீதமுள்ள 5,092 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் தமிழகத்தின் காவிரிப் படுகையில் உள்ள நிலப்பரப்பு. ஆனால், தமிழக அரசு மூச்சே காட்டாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றித் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு இப்பிரச்சினையில் முழுமூச்சாகக் களமிறங்குகிறது.

x