ஆய்வுகள் முறையாக நடக்கட்டும்!


கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் சூழலில், பள்ளி வாகனங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றனவா என்று தமிழகமெங்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் நடத்தப்படும் வழக்கமான ஆய்வுகள்தானே என்று இதில் அலட்சியம் காட்டிவிடக் கூடாது. முதலுதவிப் பெட்டி, அவசர காலத்தில் வெளியேறும் வழி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைக்கும் கருவி, இருக்கைகள் என வாகனத்தின் அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆய்வுகள் திருப்திகரமாக அமைந்து, வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கிய பின்னரே பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால், பள்ளி வாகன விபத்துகளின்போது வெளியாகும் செய்திகள், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.

2012-ல் தாம்பரம் அருகே சேலையூரில் தனியார் பள்ளியின் வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக, இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி தவறி விழுந்து பலியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தக் கொடூரத்துக்குப் பிறகும், விழிப்புணர்வு ஏற்பட்டு இதுபோன்ற விபத்துகள் குறைந்துவிட்டன என்று நம்மால் உறுதியாகச் சொல்லிக்கொள்ள முடியவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களில், தொலைதூரப் பள்ளிகளில் படிப்பவர்களின் நிலையும் மோசம். போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் கிடைக்கும் வாகனங்களில், பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க வேண்டிய சூழலில் பலரும் இருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாய் பயணித்து தங்களது கல்வியைத் தொடர்வதில், சம்பந்தப்பட்ட துறையினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் தார்மிகப் பொறுப்பு இருக்கிறது. தனியார் பள்ளி வாகன ஆய்வுகள் முறையாகப் பின்பற்றப்படட்டும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து விரிவடையட்டும். மாணவச் செல்வங்கள் சாதனைகள் புரிய அனைவரும் துணை நிற்போம்!

x