பேசும் படம் - 22: ஒரே படம்... 30 லட்சம் பகிர்வுகள்!


ரஜினி, கமல், நயன்தாரா, இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என கோலிவுட் பிரபலங்கள் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு செல்ஃபி படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஹாலிவுட் திரையுலகில் பிரபலங்களாகத் திகழும் பிராட்லி கூப்பர், மெரில் ஸ்டிரீப் , பிராட் பிட், ஜெனிஃபர் லாரன்ஸ், கெவின் ஸ்பேசி உள்ளிட்ட பலரும் குவிந்திருக்கும் இந்தப் படம் 2014-ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது எடுக்கப்பட்டது. பிரபலங்கள் பலரும் இருந்ததாலேயே சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த செல்ஃபி, ட்விட்டர் தளத்தில் 30 லட்சம் முறை ரீ ட்வீட் செய்யப்பட்டு அதிக அளவில் பகிரப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

சர்வதேச அளவில் நடக்கும் திரையுலக விழாக்களில் முக்கியமான விழாவாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. ஹாலிவுட்டில் சிறந்து விளங்கும் படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி சிறப்பிக்கும் நோக்கில் ஆஸ்கர் விருதுகளை வழங்க 1927-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இதற்காக 1927-ல், ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் இந்த அமைப்பில் 36 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்பேரில் 1929-ம் ஆண்டு மே 16-ம் தேதி, முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 பேர் முன்னிலையில் மிக எளிமையாக நடந்த இந்நிகழ்ச்சியில் மொத்தம் 15 விருதுகள் வழங்கப்பட்டன. நாளடையில் கொஞ்சம்

கொஞ்சமாக வளர்ந்து, இன்றைய தினம் திரையுலகின்மிகப்பெரிய விருதாக ஆஸ்கர் விருது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 36 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்’ அமைப்பில் இப்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 2014-ல் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்களை வைத்து ஒரு பிரம்மாண்ட செல்ஃபியை எடுக்கத் திட்டமிட்டிருந்தார், அந்த ஆண்டில் அதைத் தொகுத்து வழங்கிய எல்லன் டிஜெனரஸ் (Ellen DeGeneres). இதை தனக்கு அருகில் இருந்த பிராட்லி கூப்பரிடம் கூறினார். மிகச்சிறந்த யோசனை என்று கூறி அவரைத் தட்டிக்கொடுத்த பிராட்லி கூப்பர், அந்தப் படத்தை, தானே எடுப்பதாகக் கூறினார். தன்னைவிட கூப்பரின் கைகள் நீளம் என்பதால், படம் இன்னும் விரிவாக வரும் என்ற ஆசையில் தன்னிடம் இருந்த ஸ்மார்ட்போனை அவரிடம் கொடுத்தார் டிஜெனரஸ்.

பிராட்லி கூப்பர் படமெடுத்த பிறகு, டிஜெனரஸ் அதை தன் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து இப்படத்தை பார்த்த பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்தனர். உலகிலேயே அதிக முறை ரீ ட்வீட் செய்யப்பட்ட படங்களில் ஒன்றாக அது மாறியது. கூடவே, அந்தப் படம் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சையும் எழுந்தது. டிஜெனரஸின் யோசனையை அடிப்படையாக வைத்து அவரது ஸ்மார்ட்போனில் இந்தப் படத்தை எடுத்ததால் அது அவருக்குச் சொந்தம் என்று ஒரு சாராரும், பிராட்லி கூப்பர் இந்தப் படத்தை எடுத்ததால் அது அவருக்குச் சொந்தமானது என்று மற்றொரு சாராரும் வாதாடினர். இறுதியில் ஸ்மார்ட்போன் டிஜெனரஸுக்கு சொந்தமானதாக இருந்தாலும் அதில் படமெடுத்தவர் பிராட்லி கூப்பர் என்பதால் அப்படம் அவருக்கு உரித்தானது என்பதே பெருவாரியானவர்களின் முடிவாக இருந்தது.

பிராட்லி சார்லஸ் கூப்பர்

1975-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர் சார்லஸ் கூப்பர். 2001-ம் ஆண்டில் ‘வெட் ஹாட் அமெரிக்கன் சம்மர்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான கூப்பர், இதைத்தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்துள்ளார். பாஃப்டா விருது, கிராமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், ஆஸ்கர் விருதுக்கு 7 முறையும், கோல்டன் குளோப் விருதுக்கு 5 முறையும் பரிந்துரைக்கப்பட்டார். புகைப்படங்களை எடுப்பதில் இவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லையென்றாலும், 2014-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவின் போது எடுத்த செல்ஃபியின் மூலமாக உலக அளவில் அதிகம் கவனிக்கப்பட்ட படத்தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

x