இரும்புக் கடையில் இலக்கியம் பூக்கிறது! - ஆக்க நாயகன் ஆ.மீ.ஜவஹர்


கரு.முத்து

நாகப்பட்டினம் ரயில்நிலையத்துக்கு எதிரே அந்திக்கடைத் தெருவில் இருக்கிறது மீனாட்சிசுந்தரம் இரும்புச் சாமான் கடை. காடாவிளக்கு, சிம்னிவிளக்கு, இரும்பு வாணலி, பணியாரச்சட்டி, நாய்ச்சங்கிலி, நடைவண்டி என நம்மவர்கள் மத்தியில் புழக்கத்திலிருந்து இப்போது வழக்கொழிந்தேவிட்ட அரிய பொருட்கள் அங்குமிங்குமாய் சிதறிக்கிடக்க, அதற்கு மத்தியில் வாகாய் ஒரு இடம் பிடித்து உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார் கடையின் முதலாளி ஆ.மீ.ஜவஹர்.

நண்பர்கள் இவரை நாகை ஜவஹர் என்கிறார்கள். இதுவரைக்கும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கும் ஜவஹர், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் சிருஷ்டித்த பிரம்மா. இவரது படைப்புகள் பல்வேறு நாளிதழ்கள், பருவ இதழ்கள், சிற்றிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. ‘விடுமுறைச் சூரியன்கள்’, ‘நீராடித்தீரா சூரியன்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பு வட்டத்துக்குத் தந்திருக்கிறார் இவர். அடுத்து, முப்பத்தைந்து சிறுகதைகள் கொண்ட இவரது இன்னொரு சிறுகதைத் தொகுப்பும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நாகை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக இருக்கும் ஜவஹர், மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்களில் நூல்கள் குறித்த விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருக்கும் இவர், தேசிய நல்லாசிரியரைத் தேர்ந்தெடுக்கும் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் கொண்ட மூவர் குழுவிலும் ஓர் அங்கம்.

x