கே.கே.மகேஷ்
``தமிழர்கள் வரலாற்று உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள்'' என்று 1881-ல் திருநெல்வேலி சரித்திரத்தை எழுதிய பிஷப் கால்டுவெல் சொன்னது, இன்றைய இளைஞர்களுக்குப் பொருந்தாது. கீழடி கண்டுபிடிப்புக்குப் பிறகு இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வரலாற்று உணர்வும், தொல்லியல் ஆய்வு குறித்த ஆர்வமும் ஓரளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரசுக்கு?
இந்தியாவிலே மிக அதிகமான கல்வெட்டுகள் கிடைத்த தமிழகத்தில், கற்காலத்திலேயே நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகளும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அவற்றை அடையாளம் காண்பதிலும், ஆய்வு செய்வதிலும் அரசுத் துறைகள் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகின்றன.
அதற்கு இன்னுமொரு உதாரணம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் கிருஷ்ணன்கோவிலில் முதுமக்கள் தாழிகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் இடத்தில், அரசே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட முயற்சி செய்வது.