என்னால் முடியும் தம்பி... தம்பி!- குளங்களைத் தூர்வாரும் தனியொருவன்!


எம்.கபிலன்

மே தினத்தன்று இரு சக்கர வாகனத்தில் ஜெயம்கொண்டத்திலிருந்து கீழப்பழுவூர் சென்றுகொண்டிருந்தேன். இடையே விளாங்குடியில் எனக்கு எதிரே வந்த அரியலூர் மாவட்ட எஸ்பி-யான சீனிவாசன், காரை ஓரமாய் நிறுத்தச் சொன்னார். கார் நின்றதும் கீழே இறங்கி அருகிலிருந்த குளத்துக்குள் சென்றார். அங்கே ஷார்ட்ஸும் டி - சர்ட்டுமாய் நின்றுகொண்டிருந்த ஒரு வயதான மனிதரை ஓடிப்போய் கை குலுக்கிப் பாராட்டினார் எஸ்பி. எஸ்பி மட்டுமல்ல... பசுமைக்கான இயக்கங்கள், சமூக அக்கறையாளர்கள் எனப் பலரும் இவரைப் பாராட்டுகிறார்கள். அப்படி என்ன சாதுத்துவிட்டார் இந்தச் சாமானிய மனிதர்?

பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் அடுத்தது சாய்வு நாற்காலியும் டிகிரி காபியும்தான் நிரந்தரம் என்று நினைப்பவர்கள்தான் நம்மில் அதிகம். ஆனால், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற தியாகராஜன், இதற்கு விதிவிலக்கு. 73 வயதைக் கடக்கும் தியாகராஜன், ஷார்ட்ஸும் டி -சர்ட்டுமாய் ஜோல்னா பை ஒன்றை தோளில் மாட்டிக்கொண்டு காலை 8 மணிக்கே இரு சக்கர வாகனத்தில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுகிறார். எதற்குத் தெரியுமா? நீர்நிலைகளைத் தூர் வாருவதற்கு!

அப்படித்தான் நான் பார்த்த சமயத்தில் அரியலூர் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் தொண்டனேரியைத் தூர்வாரிக்கொண்டிருந்தார். மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் ஒன்று மூன்றடி ஆழத்துக்கு மண்ணை அள்ளி லாரியில் கொட்டுகிறது. லாரிகள் அந்த மண்ணைக் கொண்டுபோய் கரையில் கொட்டி குளக்கரையை பலப்படுத்துகின்றன. அந்த நேரத்தில் அங்கு வரும் இருவர், “எங்க தெருவுக்குப் போற பாதை ரொம்பப் பள்ளமாயிருக்கு, மழைக் காலத்துல தண்ணி தேங்கி நடக்க முடியல. அதுக்கும் கொஞ்சம் மண்ணடிச்சுக் குடுத்தீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமா போகும்” என்கிறார்கள். “அடுத்த நடை உங்களுக்குத்தான்” என்று சொல்லி லாரிகளை அந்தப் பக்கம் திருப்பிவிடுகிறார் ஆசிரியர்.

x