இணையச் சிறையின் பணயக் கைதிகள் 11: கைபேசியால் ஏற்படும் மனப்பதற்றம்


என்னுடன் பெங்களூரு விமான நிலையத்தின் முன்பு டாக்ஸியில் இறங்கி, அது நகர்ந்தவுடன் கிட்டத்தட்ட அலறினார் உடன் வந்த ஒரு நண்பர். “அய்யோ என்னோட போனைக் காணோம்’’ என்றார். “சரி... சரி... பதற்றப்படாதீங்க டாக்ஸியிலதான் விட்டிருப்பீங்க” என்று சொன்ன நான் உடனே அந்த டிரைவரை அழைக்க “ஒன்றும் பதற வேண்டாம். என்னிடம்தான் போன் இருக்கிறது” என்று அவர் சொல்ல வேகமாகக் கிளம்பி அவர் சொன்ன இடத்துக்குப் போய், கைபேசியை வாங்கிய பின்னர்தான் நண்பருக்கு உயிரே வந்தது.

மொத்தமாக அரை மணி நேரம். அதுவே தாங்க முடியவில்லை நம்மால். கைபேசி என்பது அவ்வளவு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது நமக்குப். பலருக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம். நம்மிடம் கைபேசி இல்லாமல் போனாலோ அல்லது அதில் சார்ஜ் அளவுக்கதிகமாகக் குறைந்து நம்மால் ரீசார்ஜ் செய்ய முடியாத இடத்தில் இருந்தாலோ, சிக்னல் கிடைக்காமல் போனாலோ தொற்றிக்கொள்ளும் ஒரு பயத்துக்குப் பெயர்தான் ‘நோமோபோபியா’ (Nomophobia).

‘போபியா’ என்றால் அதீத பயம் என்று பொருள். இங்கே கைபேசி இல்லாமலோ, இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாமலோ போனால் வரும் அதீத பயத்துக்கு ’நோமோபோபியா’ என்று பெயர். அதாவது ‘NO-Mobile-phobia’ என்று புரிந்து கொள்ளுங்களேன்.

பதற்றம், கைகால் நடுங்குதல், வியர்த்துவிடுதல், தகவல்கள் பெற முடியாமல் ஏதேனும் தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம், அடிவயிற்றைப் பிசைவது எனப் பலவாறாக ஒரு மனப்பதற்ற நோயின் அனைத்து அறிகுறிகளும் இருக்கும்.

கொஞ்சமாகவோ அதிகமாகவோ நம்மில் பலரும் நோமோபோபியாவில் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். கைபேசி என்பது இன்று அத்தனை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.

மற்றவர்களின் முக்கியமான அழைப்புகள் தவறிவிடுமே என்பதைவிட சமூக வலைதளங்களை மேய முடியவில்லையே, இந்நேரம் நாட்டில் என்னவெல்லாம் நடந்துவிட்டிருக்குமோ என்ற பதற்றமும்தான் இதற்கு ஒரு காரணம்.

21-ம் நூற்றாண்டில் ‘மருந்தற்ற ஒரு பொருளுக்கு அடிமைத்தனம்’ (non-drug addiction) என்றால் அது  கைபேசிக்கு  நாம்  அடிமையாகி  இருப்பதுதான்  என்று  கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள். காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையே கைபேசியைப் பார்ப்பதுதான் என்று 61% பேர் தெரிவித்திருக்கிறார்கள் ஒரு ஆய்வில்.

பதின்ம வயதில் இருப்பவர்களும் இளைஞர்களுமே பல ஆய்வுகளில் சோதிக்கப்பட்டுள்ளனர். காரணம், அவர்கள்தான் கைபேசியை அதிகம் பயன்படுத்தி அதன் மூலம் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பவர்கள். ஒரு அடையாளத்துக்கு ஏங்கி அதற்கான தடுமாற்றத்தில் இருப்பவர்கள் பதின்ம வயதினர். அவர்களது சுய கவுரவம் அந்த வயதில்தான் உருப்பெற்று வளர்ந்து அவர்களை முழுமையான ஒரு மனிதனாகப் பரிணமிக்கச் செய்யும். சமூக அங்கீகாரத்துக்கும் அடையாளத்துக்கும் பாடுபடும் அந்த வயதில் நவநாகரிகக் காலத்தின் கொடைகளான கைபேசியும் இணையமும் அவர்களைக் கொள்ளை கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஆனால், புதியனவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் அந்த மனோபாவமே அப்பொருட்களுக்கு அவர்களை அடிமையாக்கிவிடும் அபாயம் இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

மதுவோ புகைப்பழக்கமோ சூதாடுவதோ மொபைலைப் பயன்படுத்துவதோ எதுவாயினும் அடிமைத்தனம் என்று வந்துவிட்டால் எல்லாம் ஒன்றுதான்.ஒரு கல்லூரி மாணவர் சராசரியாக ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் மொபைலைப்பயன்படுத்துவதாகச் சில ஆய்வுகள் சொல்கின்றன. எல்லோரும் ஒரே மாதிரியாகஇப்பயன்பாட்டிலிருந்து மீண்டு வர முடியாது. அடிமைத்தனம் ஏற்பட்டுவிடக்கூடிய மனப்பாங்கு இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். நம் வரலாற்றை நாமே திரும்பிப் பார்த்தாலே பலருக்கும் இது புரியும். “நாம எல்லாத்திலயும் கொஞ்சம் வீக். விளையாட்டா கத்துக்கிட்ட சிகரெட்டை விட முடியல இப்போ. எப்போவாவது குடிச்சது போய் வாரம் ஒரு முறை கட்டாயம் மது அருந்தும்படி ஆகிவிடுகிறது. நண்பர்களுடனான சீட்டாட்டமும் அப்படித்தான் அதிகரித்துவிட்டது” என்று புலம்புபவரா நீங்கள்? கைபேசியிலும் இணையத்திலும் புழங்கும்போது எச்சரிக்கையாகவே இருங்கள். உங்கள் பயன்பாடு எல்லை மீறிப் போகிறது என்பதை  முதலில்  நீங்களே  உணர்ந்துகொள்ளலாம். எந்த ஒரு  தீய பழக்கத்தையும் முளையிலேயே கிள்ளி விடமுடியும். அதுதான் எளிது என்பதையும் அறிக.

“ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? சும்மா பேத்தாதீர்கள்” என்று சொல்லும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். எவ்வளவோ பயன்பாடும் உபயோகமும் கொண்டஒரு கருவி  ஸ்மார்ட்போன். அது ஒரு குட்டிக் கணினி. இன்றியமையாத ஒன்று. “அதுதொலைந்துபோனாலோ பேச முடியாமல் போனாலோ பதற்றப்படாமல் எப்படிஇருக்க முடியும்? உங்களுக்கும் இருக்கும். எனக்கும் இருக்கும். எல்லோருக்குமே இயல்பாக ஏற்படும் ஒரு பதற்றத்தை எப்படி ஒரு கோளாறாகப் பார்க்க முடியும்?

அப்படிப் பார்த்தால் நாம் அனைவரும் நோயாளிகள்தானே?” என்று வாதிடுபவர்கள் கடைசியாக, “ஸ்மார்ட்போன் சம்பந்தமாக வரும் பதற்றத்தை நல்லது என்றும் சொல்ல முடியாது. கெட்டது என்றும் சொல்ல முடியாது” என்று முடிக்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருகாரியத்தை நாம் அதீதமாகச் செய்துகொண்டுதான் வந்துள்ளோம் என்பதை வரலாற்றைப் புரட்டினால் தெரியும்.

தொலைக்காட்சிப் பெட்டி வருவதற்கும் முன் வானொலியே கதி என்று இருந்த மத்திய வயதினரைப்பார்த்திருக்கிறோம். கார்கள் பிரபலமாவதற்கு முன் ஆட்டோரிக்‌ஷாவையும் குதிரை வண்டியையும் மிகவும் விரும்பியவர்கள் உண்டு. அவ்வளவு ஏன்? நிறைய புத்தகம் படிப்பவர்களைப் புத்தகப் புழு என்போம். எங்கேயாவது புத்தக அடிமை என்ற வார்த்தையைக் கேட்டிருக்கிறோமா என்ற வாதமும் கவனிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், புத்தகம் படித்து யாரும் செத்துப்போனதில்லை. அடிமைத்தனத்துக்கு ஆட்பட்டு மனநோயாளியாக மாறி இயல்பு வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. ஆகவே, எப்படிப் பார்த்தாலும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் என்பது மறுதலிக்க முடியாத ஒரு விஷயம்தான்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்று ஸ்மார்ட்போன் நடத்தை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி சில முடிவுகளை அறிவித்தது. “ஸ்மார்ட்போன்கள் உளவியல்ரீதியாகக்குழந்தைகளை அடிமைப்படுத்தும் (psychologically addictive) தன்மை கொண்டவை. ‘நார்ஸிஸம்’ (narcissism) என்னும் சுயகாதல் நடத்தையை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டவை. ஆகவே, ஒருவித எச்சரிக்கை அறிவிப்புடன்தான் (health warning) அவை விற்பனை செய்யப்பட வேண்டும்” என்கிறது அந்தப் பல்கலைக்கழக அறிக்கை.

ஸ்மார்ட்போனை இளைஞர்கள் ஒரு உற்ற தோழனாகவும் பலதரப்பட்ட பயன்பாட்டுக்கான ஒரு கருவியாகவும் பார்க்கிறார்கள். எந்த இடத்திலும் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை. இப்போதெல்லாம் சார்ஜர், பவர்பேங்க் போன்றவற்றையும் கூடவே எடுத்துக்கொண்டுதான் கிளம்புகின்றனர். பல வெளிநாடுகளில் சாலைகளில் நடந்துகொண்டிருக்கும்போதே குனிந்த தலை நிமிராமல் கைபேசியில் ஆழ்ந்தபடி நடப்பதால் ஏகப்பட்ட விபத்துகள் நடைபெற்றதால், இப்போது சீனாவின் சாங்கிங் (Chongquing) என்ற நகரத்தில் செல்போன் பாதை ஒன்றையே அமைத்திருக்கிறார்கள்.

தெருவில் கவனமின்றி இப்படி நடப்பதை ‘கவனம் சிதறிய நடை (distracted walking)’ என்றே வர்ணிக்கின்றனர்.

சொல்லிப் பார்த்தும் திருந்தாததால் தனியே சாலை ஒன்றையே போட்டுக்கொடுத்துவிட்டது அரசாங்கம்.

2014-ல் மட்டும் செல்போன் பயன்பாட்டால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிடவே முக்கியச் சாலைச் சந்திப்புகளில் ஏகப்பட்ட எச்சரிக்கைப் பலகைகளை வைத்துள்ளது தென்கொரியாவின் சியோல் நகர நிர்வாகம்.

கவனம் சிதறிய கைபேசிப் பாதசாரிகளால் ஏற்பட்ட விபத்துகள் நிமித்தம் அமெரிக்க மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் வந்து குவிந்தவர்களின் எண்ணிக்கை 2005-ல் ஆண்டில் 256 பேராக இருந்தது. அதுவே 2013-ம் ஆண்டுவாக்கில் கணக்கெடுத்தால் 1,506 பேராக உயர்ந்திருக்கிறது. கவனிக்க வேண்டிய விஷயம் இது.

குனிந்த தலை நிமிராமல் போவதால் தெருவிளக்குக் கம்பங்களில் இடித்துக்கொள்வது, எதிரே வருபவரிடம் முட்டிக்கொள்வது, ரயில் வருவது தெரியாமல் க்ராஸ் செய்வது, பிளாட்பாரங்களில் ரயிலின் மிக அருகே நின்று சாட்டிங் செய்வது, இப்படியான சிரமங்களைக் குறைக்க மேற்சொன்ன கைபேசிப் பிரியர்களுக்கான சாலையை சில நாடுகள் போட சில நாடுகள் வேறு மாதிரி யோசித்தன. குனிந்த தலைக்கு சிக்னல்  கொடுக்க வேண்டி போக்குவரத்து சிக்னல் விளக்குகளைத் தரையில் எரிய விட்டுள்ளன (ground level traffic lights). நம்மவர்களின் கவனத்தை ஈர்க்க என்ன பாடுபட வேண்டியிருக்கிறது பாருங்கள்.

அருகாமையில் இருக்கும் அழகான விஷயத்தைக் கவனிக்காமல் தூரத்தில் இருக்கும் கவர்ச்சியில் மயங்கிக் கைபேசியில் மூழ்கும் மனோபாவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.

பாதிப் பேருக்கு மேல் கைபேசியைப்  பக்கத்திலேயே வைத்துக்கொண்டுதான் தூங்குகிறோம். அழைப்பு எதுவும் வராவிட்டால்கூட சும்மாங்காட்டியும் கைபேசியை எடுத்து செக் செய்தே ஆக வேண்டிய உந்துதலில் இருப்பதாக நிறைய பேர் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்தை ஒருபுறம் வையுங்கள். பிரச்சினைக்குரியதாக மாறிவரும் கைபேசிப் பயன்பாட்டை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது? அநாவசியப் பயன்பாட்டைக் குறைத்து நிஜ உலகில் மனிதர்களுடனான உரையாடல்களை மீட்டெடுப்பது எப்படி? எதிர்வரும் காலத்தில் தொழில்நுட்பமென்னும் இருபுறமும் கூர்மையான ஆயுதத்தைக் கவனமுடன் கையாள நம் குழந்தைகளுக்கு எப்படி சொல்லித்தருவது? அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இணைவோம்)

x