பாப்லோ தி பாஸ் 24: முன் கூறப்பட்ட மரணத்தின் கதை..!


‘உலகிலேயே அதிக அளவில் கனிம வளங்கள் நிறைந்திருக்கும் அழகான நாடு கொலம்பியா. அதனால்தானோ என்னவோ, இங்கே அதிக அளவில் வன்முறைகளும் நடக்கின்றன’ என்பது கொலம்பியர்களின் கருத்து. பாப்லோவின் காலத்துக்கு முன்பும் பின்பும் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என்றபோதும், பாப்லோவின் காலத்தில் நடந்ததைப் போல வேறு எப்போதும் நடக்கவில்லை.

பாப்லோ நிகழ்த்திய ரத்தக் களரிகளுக்குக் குறைவில்லாமல் நடந்தது அவனால் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்களும்!

ஆகஸ்ட் 30, 1990..!

அதிபர் தேர்தல்கள் முடிந்து சீஸர் கவீரியா கொலம்பியாவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். பதவியேற்று மூன்று வாரங்கள் கூட முடியவில்லை. பாப்லோ தொடங்கிய ஆள் கடத்தல், நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. ஆம்… அவன் கடத்தியது அந்நாட்டின் முன்னாள் அதிபரின் மகள் என்றால், நாடே அதிர்ச்சிக்கு உள்ளாகத்தானே வேண்டும்..?

டயானா துர்பே. அவர் ஒரு பத்திரிகையாளர். கொலம்பியாவின் 25-வது அதிபராகப் பதவி வகித்த ஜூலியோ சீஸர் துர்பே அயாலாவின் செல்ல மகள். அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், நியாயத்தின் பக்கம் நிற்பதும், அபாயகரமான பகுதிகளில் சென்று செய்தி திரட்டுவதும் அவளது வாடிக்கை. அப்படித்தான் மேற்சொன்ன தேதியில், சிலர் அவளிடம் வந்து “ஒரு சூப்பரான அசைன்மென்ட் இருக்கு. பண்றீங்களா..?” என்று கேட்க, ‘என்ன ஏது எப்போது’ என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டாள். வேறு எந்த ஊடகத்துக்கும் கிடைக்காத கெரில்லா தலைவர் ஒருவரின் பேட்டி தனக்குக் கிடைக்கும் என்றால், யார்தான் ஒப்புக்கொள்ளாமல் இருப்பார்கள்..? தன்னைத் தேடி வந்தவர்கள் தனக்கு முன் பின் அறிமுகமில்லாதவர்கள் என்றபோதும் அவர்களை நம்பி அவர்கள் வந்த காரில் ஏறி அமர்ந்தாள்.

அவளுடன் அவள் நிறுவனத்தில் பணியாற்றும் அசுசெனா லீவனோ, யுவான் விட்டா, ரிச்சர்ட் பெசீரா, ஓர்லாண்டோ அசீவிடோ ஆகிய பத்திரிகையாளர்களும் அந்த அசைன்மென்ட்டுக்குச் சென்றனர்.

ஆனால், கார் கெரில்லா தலைவரின் இடத்துக்குச் செல்லவில்லை. மரங்கள் அடர்ந்த மலைப்பகுதி ஒன்றுக்குச் சென்றது. அங்கே டயானாவும் அசுசெனாவும் சிறிய அறை ஒன்றில் அடைக்கப்பட்டனர். “இதோ இன்னும் இரண்டு மணி நேரத்தில் தலைவரைப் பார்க்கலாம்” என்று சொல்லிச் சென்றனர் அவர்களைக் கூட்டி வந்தவர்கள். ஆனால், இரண்டு நாட்களாகியும் தலைவர் வரவில்லை. டயானாவுக்கு முதன்முறையாகச் சந்தேகம் எழுந்தது. அவள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவர்களைக் கூட்டி வந்தவர்கள் சரியான பதில்களைச் சொல்லவில்லை. பிறகுதான் புரிந்தது, தாங்கள் எல்லோரும் கடத்திவரப்பட்டிருக்கிறோம் என்பது!

ஆனால், அவளும் அவளது சகாக்கள் மட்டுமல்லாது, வேறொரு அசைன்மென்ட்டுக்காக அப்போது கொலம்பியாவில் தங்கியிருந்த ஹீரோ பஸ் எனும் ஜெர்மன் பத்திரிகையாளரும் கடத்தப்பட்டார். ஆக மொத்தம் ஆறு பேர்.

அடுத்த சில நாட்களில் மரூஜா பச்சோன் மற்றும் அவளது கணவரின் தங்கை பியாட்ரிஸ் ஆகியோரும் கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் கொலம்பிய அரசின் ‘ஃபோசின்’ எனும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்நாட்டின் திரைப்படத் துறையை இதர நாடுகளில் ‘புரொமோட்’ செய்யும் நிறுவனம் அது. மரூஜாவின் கணவர் ஆல்பர்டோ வில்லமிசார். அவர் அந்நாட்டு அரசாங்கத்தில் ஒரு முக்கியமான அதிகாரி.

சீஸர் கவீரியா அதிபராகப் பதவியேற்ற அடுத்த இரண்டு மாதங்களில் இந்த எட்டுப் பேரும் கடத்தப்பட்டனர். இவர்கள் ஏன், யாரால் கடத்தப்பட்டார்கள் என்ற விவரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகின.

வேறு யார் காரணமாக இருக்க முடியும்..? பாப்லோ!

வேறு என்ன காரணமாக இருக்க முடியும்..? நாடு கடத்தலை எதிர்ப்பது!

கடத்தப்பட்டவர்கள் எல்லாரும் சாதாரண ஆட்கள் இல்லை என்பதால், அரசு இயந்திரம் உடனே முடுக்கிவிடப் பட்டது. ஆனால், எங்கே சென்று தேட? எனவே, பாப்லோவிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவனுடைய ‘டிமாண்ட்’ என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அரசு பல்வேறு வழிகளிலும் முயன்றது.

அவனுடைய ‘டிமாண்ட்’ இதுதான். அரசிடம் சிக்காமல் பயந்து ஓடி ஒளிந்து அவன் மிகவும் சோர்வுற்றுவிட்டான். எனவே, தானே காவல்துறையிடம் சரணடைய இருப்பதாகத் தெரிவித்தான் பாப்லோ. ஆனால், ஒரு நிபந்தனை… எங்கே, எந்தச் சிறை, எவ்வளவு நாள் சிறைவாசம், எப்போது சரணடையப் போகிறான் என்பதை எல்லாம் அவனே முடிவு செய்வான்.

இது அரசுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடத்தப்பட்டவர்களின் குடும்பம் பாப்லோவின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்குமாறு அரசை வேண்டியது. ஆனால், சீஸர் கவீரியா இம்மியளவும் இசைந்து கொடுக்கவில்லை. அரசு தன் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவில்லை என்று தெரிந்ததும், மேலும் சில செல்வந்தர்கள், சமூகத்தில் முக்கியமானவர்கள் கடத்தப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

அதிபர் கவீரியா, சிறப்புப் படைகளைப் பயன்படுத்தி கடத்தப்பட்டவர்களை மீட்க நினைத்தார். அப்படியான ஒரு மீட்பு நடவடிக்கையின்போது சிறப்புப் படைகளுக்கும் பாப்லோவின் ஆட்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், படையினரின் குண்டுபட்டு டயானா துர்பே இறந்தார்.

இதைக் கேள்விப்பட்டவுடன் அவரது தாய் நைதியா குவிண்டெரோ அதிபரிடம் சென்று சண்டையிட்டாள். அப்போது அவள் சொன்ன வார்த்தைகள்தான் இந்த அத்தியாயத்தின் தலைப்பு!

யார் இந்த ஆல்பெர்டோ வில்லமிசார்?

பாப்லோவின் இந்த ஆட்கடத்தல் விஷயத்தில், டயானா துர்பே கடத்தப்பட்டதற்காவது ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால், அவர் முன்னாள் அதிபர் ஜூலியோ சீஸர் துர்பேவின் மகள். இவரது பதவிக் காலத்தில்தான் கொலம்பிய போதைப் பொருள் கடத்தல்காரர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் உடன்படிக்கை முதன்முறையாகக் கையெழுத்தாகியது.

ஆனால், ஏன் ஆல்பெர்டோ வில்லமிசாரின் மனைவி மரூஜாவும், வில்லமிசாரின் தங்கை பியாட்ரிஸும் கடத்தப்பட வேண்டும்? ஏனென்றால், பாப்லோவுக்கு வில்லமிசாருக்குமான பழைய பாக்கி. போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கொலம்பியாவில் எந்த ஒரு தனிச் சட்டமும் இல்லாதபோது, 1985-ல் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதில் வில்லமிசாரின் பங்கு அதிகம். அதனால் அவர் குறி வைக்கப்பட்டார்.

1986-ம் ஆண்டு அவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால், அதிலிருந்து அவர் தப்பித்துவிட்டார். அதைத் தொடர்ந்து, அன்று கொலம்பியாவில் முக்கியமான அரசியல்வாதியாக இருந்த, பாப்லோவால் பின்னாளில் கொல்லப்பட்ட லூயி கார்லோஸ் கலான், வில்லமிசாரை இந்தோனேசியா நாட்டுக்கான தூதராக நியமித்தார். பாப்லோவிடமிருந்து வில்லமிசாரைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு. வில்லமிசாருக்கு கலான் உறவினரும் கூட. மரூஜாவின் தங்கை க்ளோரியா பச்சோன் என்பவரைத்தான் கலான் மணம் முடித்திருந்தார்!

(திகில் நீளும்)

x