எப்பவுமே அம்மாவுக்கு நான் தங்கம்தான்!- தடகளத்தின் தங்கமங்கை கோமதி


கரு.முத்து

தடகளத்தில் தங்கம் வென்ற கோமதியால் முடிகண்டம் கிராமமே இப்போது விழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறது!

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 15-வது கிலோமீட்டரில் வருகிறது மணிகண்டம். இதற்குக் கிழக்கே 5-வது கிலோ மீட்டரில் இருக்கிறது முடிகண்டம். 28-ம் தேதி மாலை ஊருக்குத் திரும்பிய கோமதியை, மணிகண்டம் முதல் முடிகண்டம் வரையிலான அத்தனை கிராமங்களும் கால்கடுக்க காத்து நின்று வரவேற்றது. திருச்சி ஏர்போர்ட்டிலும், மணிகண்டத்திலும் மேடை அமைக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. முடிகண்டம் வரை எங்கு பார்த்தாலும் பட்டாசு வெடித்து பேப்பர்கள் சிதறிக்கிடக்கின்றன. போஸ்டர்களும், பேனர்களும் வழிநெடுகிலும் கோமதியை வாழ்த்தி பெருமை கொள்கின்றன. தனது தந்தையுடன் அதிகாலையிலும், இரவிலும் இருளில் பயத்துடன் சைக்கிளில் பயணித்த கோமதியை தந்தையில்லாத இந்தத் தருணத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் கரம் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டரை 2:02.70 விநாடிகளில் கடந்து இந்தியாவுக்கு தங்கம் சாதித்துக் கொடுத்த கோமதி மாரிமுத்துவின் குடும்பம் அரசின் தொகுப்பு வீட்டில் தான் குடியிருக்கிறது. அதுகூட அண்மையில் கிடைத்த வசதிதான். அதற்கு முன்பு குடிசைவாசம்தான்! வீட்டுக்குப் பின்னால் சின்னதாய் சார்பு இறக்கி அதில்தான் பொருட்களையும் துணிமணிகளையும் போட்டு வைத்திருக்கிறார்கள். வீட்டு வாசலில் போட்டிருக்கும் கீற்றுக் கொட்டகையில், யாராவது வந்தால் உட்காருவதற்காக நாலைந்து சேர்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள். கொட்டகையின் ஓரத்தில், வெயிலுக்கு விசிற இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள். இவை அனைத்துமே கோமதி தங்கம் வாங்கிய பிறகு அந்த வீட்டுக்கு வந்திருக்கும் தற்காலிக வசதிகள்!

x