பெண் மையக் கதைகளின் காதலர்கள்!


திரைபாரதி

அரங்குகளில் அடைபட்டுக் கிடந்த தமிழ்த் திரையை ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் திறந்த வெளிக்கு அழைத்து வந்தவர் பாரதிராஜா! - திரை வரலாற்றை இப்படித்தான் திரித்துக் கூறி வந்திருக்கிறோம். அரங்கைவிட்டு கேமராவை வெளியே தூக்கிக்கொண்டு வந்த முதல் இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன். அதன்பிறகு தயங்காமல் கதைக்கேற்ப தேவையான பகுதிகளைத் திறந்த வெளியில் படம் பிடிக்கத் தொடங்கினார்கள் நமது இயக்குநர்கள். திரையில் கதை சொல்வதில் தேர்ச்சியடைந்த பிறகு, கதை நிகழும் களத்தை நோக்கி கேமராவை எடுத்துச் செல்லும் காட்சி சுதந்திரம் வளர்ந்து கொண்டே வந்தது. அதில் முத்தாய்ப்பாக முதல் முத்திரையைப் பதித்தார்கள் இரட்டை இயக்குநர்களான தேவராஜ் – மோகன்.

ஒரு கிராமத்துக் காதல் கதைக்கான நம்பகத் தன்மையை உருவாக்க, தெங்குமரஹடா என்ற பசுமையான கோவை கிராமத்தில் ‘அன்னக்கிளி’ படத்தை முழுவதுமாகப் படமாக்கினார்கள். வெள்ளந்தியான கிராமத்துப் பெண்ணான அன்னம், தனது காதலை (காதலனை) தோழிக்காக விட்டுக்கொடுத்துவிட்டு, காதலனின் குடும்ப நலனுக்காக உயிர்த்தியாகமும் செய்யும் முக்கோணக் காதல் கதைதான். ஆனால், அன்னம் கதாபாத்திரம் வழியே கிராமத்து வாழ்வின் சாரத்தை, அணுவணுவாக சித்தரித்துக் காட்டினார்கள்.

 கதை நிகழும் அந்த மலையகப் பள்ளத்தாக்கு கிராமத்துக்குப் பார்வையாளர்களை அழைத்துக் கொண்டு போனது கேமரா. கருப்பு – வெள்ளைப் படமென்றாலும் அந்த கிராமத்தின் பசுமையைப் பார்வையாளரின் மனத்திரையில் வண்ணமயமாக உயிர்பெறச் செய்தனர். மிக முக்கியமாக கிராமத்து வாழ்க்கையின் அன்றாடத் தருணங்களை, வசனக்காட்சிகள், பாடல் காட்சிகள் இரண்டிலுமே காட்சித் துணுக்குகளாக (மாண்டேஜ் ஷாட்ஸ்) இடம்பெறச் செய்தார்கள்.

x