பேசும் படம் - 20: ஆபரேஷன் தியேட்டரில் ஒரு க்ளிக்!


சாதாரண மனிதர்களால் எளிதில் நுழைய முடியாத இடங்களில் ஒன்று ஆபரேஷன் தியேட்டர். அதனாலேயே அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது, டாக்டர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆசை பலருக்கும் உள்ளது. அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக இதய அறுவைசிகிச்சை நடக்கும் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்து இப்படத்தை எடுத்திருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞரான ஜேம்ஸ் ஸ்டான்பீல்ட். அதிலும் இது போலந்தில் நடந்த முதலாவது இதய மாற்று அறுவைசிகிச்சையின்போது எடுக்கப்பட்ட படம் என்பது கூடுதல் விசேஷம்.

போலந்து நாட்டின் மிகச்சிறந்த இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்  பிக்னியூ ரெலிகா (Dr. Zbigniew Religa). 1963-ம் ஆண்டு வார்ஸா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த இவர், அதன்பிறகு 1975-ம் ஆண்டு டெட்ராய்ட்டில் இதய அறுவைசிகிச்சை தொடர்பான உயர் கல்வியை முடித்து, போலந்தில் சிகிச்சையைத் தொடங்கினார்.

இதய மாற்று அறுவைசிகிச்சை அரிதாக நடந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில், தனது நாடான போலந்தில் அத்தகைய அறுவைசிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் டாக்டர் ரெலிகா. ஆனால், அதற்கு போலந்து நாட்டின் சக்தி வாய்ந்த கத்தோலிக்க திருச்சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. கடவுள் கொடுத்த உடல் உறுப்புகளில் எதையும் நீக்கி செயற்கையாக ஒரு கருவியைப் பொருத்துவது கடவுளை மீறிய ஒரு செயலாகும் என்று வாதிட்டது. திருச்சபையின் எதிர்ப்பு காரணமாக அந்நட்டில் உள்ள மருத்துவமனைகள், ரெலிகாவுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சைக்காக தங்கள் ஆபரேஷன் தியேட்டர்களை வழங்க மறுத்தன. இவர்கள் மட்டுமின்றி அந்நாட்டு அரசும் பொதுமக்களும் டாக்டர் ரெலிகாவின் முயற்சியை எதிர்த்தனர்.

இருப்பினும் தனது முயற்சியைக் கைவிடாத டாக்டர் ரெலிகா, மாறிவரும் உலகில் இதயமாற்று அறுவை சிகிச்சையின் அவசியத்தைப் பற்றி பொதுமக்களிடமும், அரசிடமும், திருச்சபையிடமும் தொடர்ந்து எடுத்துக் கூறினார். அவரது தொடர் முயற்சிகளால் கடைசியில் திருச்சபையும், போலந்து அரசும் இறங்கி வந்தன. போலந்து நாட்டின் முதலாவது இதய மாற்று அறுவைசிகிச்சையை மேற்கொள்ள டாக்டர் ரெலிகாவுக்கு அனுமதி கிடைத்தது.

அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் நண்பர்களின் உதவியுடன் இதய மாற்று அறுவைசிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார் ரெலிகா. 1987-ம் ஆண்டில் இதயம் பாதிக்கப்பட்டதால் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த டாடெஸ் ஸிட்கெவிட்ஸ் (Tadeusz Zitkevits) என்ற நோயாளிக்கு மாற்று இதயத்தைப் பொருத்தத் திட்டமிட்டார். அதிக விவாதத்தை ஏற்படுத்திய அறுவைசிகிச்சை என்பதால், புகழ்பெற்ற நேஷனல் ஜியாகிராஃபிக் பத்திரிகையின் புகைப்படக்காரரான ஜேம்ஸ் ஸ்டான்பீல்ட் (James Stanfield) இதைப் படம்பிடித்தார்.

23 மணி நேரம் நீடித்த அறுவைசிகிச்சைக்கு பிறகு, களைத்துப்போன கண்களுடன், நோயாளியின் இதயம் சரியாக இயங்குகிறதா என்று டாக்டர்.ரெலிகா பார்த்துக்கொண்டிருப்பதையும், அவருக்குத் துணையாகப் பணியாற்றிய மற்றொரு மருத்துவர், களைப்பு மிகுதியால் சுவரோரம் அமர்ந்த நிலையில் தூங்கிக்கொண்டு இருப்பதையும் இப்படத்தில் காணலாம். புகழ்பெற்ற பத்திரிகையான நேஷனல் ஜியாகிராஃபிக், 1987-ம் ஆண்டின் மிகச்சிறந்த படமாக இதைத் தேர்வு செய்தது.

போலந்தின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்ததால் அந்நாட்டில் டாக்டர் ரெலிகாவின் புகழ் மேலும் பரவியது. மருத்துவ சேவையுடன் சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டிருந்த டாக்டர் ரெலிகா, பின்னாளில் அந்நாட்டின் செனட் சபை உறுப்பினராக 1993 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். போலந்து நாட்டின் மிகச்சிறந்த மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த டாக்டர்.ரெலிகா, 2009-ம் ஆண்டு காலமானார்.

அதேநேரத்தில் ரெலிகாவிடம் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளியான டாடெஸ், அவரைவிட அதிக நாட்கள் வாழ்ந்து 2017-ம் ஆண்டில்தான் காலமானார்.

ஜேம்ஸ் ஸ்டான்ஃபீல்ட்

சாக்கடையில்  திரியும்  எலிகள் முதல், மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வரை நேஷனல் ஜியாகிராஃபிக் பத்திரிகைக்காகப் பல விஷயங்களைக் கலைநயத்துடன் படமெடுத்தவர் ஜேம்ஸ் ஸ்டான்ஃபீல்ட். புகைப்படம் எடுப்பதில் ஜேம்ஸுக்கு குரு அவரது அப்பாதான். பத்திரிகை புகைப்படக்காரரான ஜேம்ஸின் அப்பா, மகனுக்கு சிறு வயதில் இருந்தே படமெடுப்பதில் உள்ள நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார். சிறுவயதில் ராணுவத்தில் 5 ஆண்டுகாலம் பணியாற்றிய ஜேம்ஸ் ஸ்டான்ஃபீல்ட், அதன்பிறகு உள்ளூர் பத்திரிகையில் பணியாற்றினார். 1967-ம்

ஆண்டு நேஷனல் ஜியாகிராஃபிக் பத்திரிகையில் இணைந்த பிறகு 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து மிகச்சிறந்த படங்களை எடுத்துள்ளார்.

x