மானத் தேடும் வேடவரே... மதி மயக்கம் கொண்டவரே..!- தெம்மாங்கு முனியம்மா


க.விக்னேஷ்வரன்

அந்த துக்க வீட்டின் ஒலிபெருக்கியில் அடர்த்தியான சோகத்துடன் கசிகிறது அந்தக் குரல். ஒலிவாங்கியின் முன்பு தன் சகாக்களுடன் நின்று "பூவிருக்கு பொட்டிருக்கு புன்னகையில்ல... இந்தப் பூட்டி வச்ச கோட்டையில மன்னவரில்ல..." என்ற முனியம்மாவின் ஒப்பாரி பாடல், அங்கே மரித்தவர் வாழ்ந்த பெருவாழ்க்கையைத் தன்னுள் அடக்கி விடுகிறது.

60 வயதாகும் முனியம்மா ஒரு தொழில்முறை நாட்டுப்புறப் பாடல் கலைஞர். தெம்மாங்குப் பாட்டு, தாலாட்டு, கும்மி பாட்டு எனக் கலக்கினாலும்  ஒப்பாரி என்றால் மதுரை பக்கம் இருக்கும் வரிச்சியூர் களிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் முனியம்மாவை விஞ்ச ஆளில்லை.

"நான் சின்னப் பிள்ளையா இருக்கையில அப்பனாத்தா இறந்துட்டாக. பெறவு சிறு வயசுலயே கல்யாணம் கட்டி மாமியார் வீட்டுக்கு வந்துட்டேன். என் மாமியார்தான் என்ன பெத்த தாயப்போல கொணமா பார்த்துக்கிட்டாக. அப்பெல்லாம் வெவசாய கூலி வேலைக்குப் போவோம். நாத்து நடுகையில களைப்பு தெரியாம இருக்க தெம்மாங்கு பாட்டு, நடவுப்பாட்டுனு படிப்போம். என் மாமியாரு ஏகப்பட்ட பாட்டு படிப்பாக. அவுக பாட்டக் கேட்டு நானும் பாட கத்துக்கிட்டேன்” என்று, தான் பாடகி ஆன கதையைக் கொஞ்சம் வெட்கமும் நாணமுமாய் விவரிக்கிறார் முனியம்மா.

x