மீண்டும் வருமா பிள்ளைச்சோறு?


கே.கே.மகேஷ்

``மதுரையில் மார்வாடி, பஞ்சாபி, ஜெயின் உணவு வகைகளைச் சாப்பிட்டிருக்கீங்களா?'' என்று அடிக்கடி நண்பர் ஒருவர் விசாரிப்பார். அதற்காகவே கடந்த வாரம், தானப்ப முதலி தெருவில் உள்ள மோகன் போஜனாலயாவுக்குப் போயிருந்தேன். அங்கிருந்த விலைப்பட்டியலில் உணவு வகைகளையும் தாண்டி என்னைக் கவர்ந்தது குழந்தைகளுக்கான மினி மீல்ஸ் 70 ரூபாய் என்பதே. பெரியவர்களுக்கான ஃபுல் மீல்ஸ் 170 ரூபாய் எனும்போது, இது பாதிக்கும் குறைவு.

சர்வரிடம் விசாரித்தேன். ``ஆமாம் சார். குழந்தைங்களால முழு சாப்பாடு சாப்பிட முடியாதுல்ல. இதுதானே நியாயம்?'' என்றார் சிரித்த முகத்தோடு. ஆச்சரியமாக இருந்தது.

`வந்தாரை வாழ வைக்கும் ஊரு', ‘வழியெங்கும் தர்மசாலைகளை அமைத்து அன்னதானம் செய்தவர்கள் நாம்' என்ற பழம் பெருமை பேசும் தமிழர்கள், தாங்கள் நடத்தும் கடைகளில் இதை நடைமுறைப்படுத்துவது இல்லையே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

x