காலத்தே கடமை ஆற்றுங்கள்!


தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் நூறு சதவீதம் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜனநாயக கடமையைச் செவ்வனே செய்து முடித்திருக்கும் அவர்களைப் பாராட்டுவோம்.

அதேநேரத்தில், இவர்களைப் போலவே தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர் இன்னும் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்யவில்லை என்ற தகவலும் வருகிறது. பொதுவாகவே, அரசின் திட்டங்களை அவ்வளவாய் அனுபவிக்காதவர்களும், அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கப்பெறாதவர்களும்தான் வரிசையில் நின்று வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வருகிறார்கள். படித்தவர்களும், அரசின் சலுகைகளை அனுபவிப்பவர்களும், அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்கப்பெற்றவர்களும் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாகவே இருக்கிறது.

இப்படியான சூழலில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்னமும் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருப்பது சரிதானா? தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு பிறகு அரசாங்கத்தையும் ஆள்பவர்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க நமக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். வாக்குச் சீட்டு முறை இருந்தபோது செல்லாத வாக்குகளும் விழுவதுண்டு. இப்போது அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை என்றாலும், தபால் வாக்குகளில் செல்லாத வாக்குகள் வருகின்றன. அதற்குக் காரணம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளை கவனமாகப் படித்துப் பார்த்து வாக்களிக்கத் தவறுவதுதான்.

x